ஜனநாயகத்தின் கீழ், மிக அதிக பலம் வாய்ந்தவருக்கு இருக்கும் அதே சந்தர்ப்பமே மிகுந்த பலவீனமானவருக்கும் இருக்க வேண்டும். இதுவே ஜனநாயகத்தைக் குறித்து நான் கொள்ளும் கருத்து. ஆனால், அகிம்சை வழியினாலன்றி இதை என்றுமே அடைந்துவிட இயலாது.
உலகில் இன்னும் அநேகர் உயிருடன் இருக்கிறார்கள் என்ற உண்மை ஒன்றே அது ஆயுத பலத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை, சத்தியத்தையும் அன்பையுமே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ஆகையால், யுத்தங்கள் இருந்துவந்தும் உலகம் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது என்ற மறுக்க முடியாத மிகப் பெரிய உண்மையிலிருந்தே இந்தச் சக்தியின் வெற்றியைக் கண்டுகொள்ளலாம்.
கடமையே உரிமைகளுக்கு உண்மையான மார்க்கம். நாம் எல்லோரும் நமது கடமைகளைச் சரிவர நிறைவேற்றி வருவோமாயின், உரிமை அருகில் இருக்கும். ஆனால், கடமையைச் செய்யாமல் விட்டுவிட்டு, உரிமைகளைத் தேடி ஓடுவோமாயின், அவை நம் கைக்குச் சிக்காமல் தப்பி ஓடிவிடும். அவற்றை அடைந்துவிட எவ்வளவு முயல்கிறோமோ அவ்வளவுக்கு அவை தூரத்துக்குப் போய்விடும்.
சிலர் அதிகாரத்தை அடைந்துவிடுவதால் அல்ல. அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படும்போது அதை எதிர்க்கும் சக்தியை எல்லோரும் பெறுவதன் மூலமே உண்மையான சுயராஜ்யம் வரும் என்பதை நடைமுறையில் காட்ட முடியும் என்றே நம்புகிறேன். வேறு மாதிரியாகச் சொல்லுவதானால், அதிகாரத்தை ஒழுங்குபடுத்திக் கட்டுப்படுத்த தங்களுக்குள்ள ஆற்றலைப் பற்றிய உணர்வு தோன்றும் வகையில் பாமர மக்களுக்குப் போதித்து, அதனாலேயே சுயராஜ்யத்தை அடைய வேண்டும்.
ஆங்கிலேயரின் தளையிலிருந்து மாத்திரம் இந்தியாவை விடுதலை செய்வது என்பதில் எனக்குச் சிரத்தை இல்லை. எந்த விதமான தளையிலிருந்தும் இந்தியாவை விடுவித்தாக வேண்டும் என்பதிலேயே நான் உறுதி கொண்டிருக்கிறேன். ஒரு கொடுமைக் குப் பதிலாக இன்னொரு கொடுமையை மாற்றிக் கொள்ளும் விருப்பம் எனக்கு இல்லை. எனவே, எனக்கு சுயராஜ்ய இயக்கம் சுயத்தூய்மை இயக்கமே.
சத்தியத்தின் கொஞ்சம் பகுதியையே பார்வையின் பல கோணங்களிலிருந்து பார்க்கிறோம். ஆகையால், பரஸ்பர சகிப்புத் தன்மையே நடத்தைக்கான தங்கமான விதி. மனசாட்சி எல்லோருக்கும் ஒரே மாதிரியானதாக இல்லை. ஆகையால், தனிப்பட்டவர் நடந்துகொள்வதற்கு மனசாட்சி நல்ல வழிகாட்டியாக இருந்தாலும். அந்த நடத்தையையே எல்லோரும் அனுசரிக்க வேண்டும் என்று வற்புறுத்துவது ஒவ்வொருவரின் மனசாட்சியின் சுதந்திரத்தில் குறுக்கிடும் மோசமான காரியமாகும்.