கே.சந்துரு
முதல் இந்திய சுதந்திரப் போரான 1857 சிப்பாய் கலகத்துக்கான காரணமாக வரலாற்று ஆசிரியர்கள் ஒரு விஷயத்தைக் கூறுவார்கள். கிழக்கிந்திய கம்பெனி ராணுவ வீரர்களின் துப்பாக்கித் தோட்டாக்களில் பன்றிக் கொழுப்பு தடவப்பட்டதால் இஸ்லாமிய வீரர்களும், மாட்டுக் கொழுப்பு தடவப்பட்டதால் இந்து வீரர்களும் கொதித்தெழுந்தனர் என்பதே அந்தக் காரணம்; இந்தக் கூற்றில் எள்ளளவிலும் உண்மை இருந்ததில்லை என்று பிரசித்தி பெற்ற வரலாற்று ஆசிரியர்கள் பலர் பல முறை எடுத்துக்கூறிவந்தும் கேட்பாரில்லை.
16-ம் நூற்றாண்டில் பம்பாயில் வந்து குடிபுகுந்த சிந்தி வியாபாரிகள் சைவமானதைப் பற்றியும் ஒரு ஆராய்ச்சி உண்டு. கராச்சியிலிருந்து வந்து பம்பாயில் வியாபாரம்செய்ய முற்பட்ட அவர்கள், டெல்லியிலிருந்த சுல்தான்களிடம் அனுமதி கேட்டபோது, பம்பாய் நகரத்தில் அவர்கள் வசிக்கும் காலங்களில் பன்றிக்கறி சாப்பிடக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. பின்னர், சுல்தான்கள் ஆட்சி மாறி உள்ளூர் இந்து மன்னர்களின் ஆட்சி ஏற்பட்டபோது, அவர்களுக்கு மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. வெறுத்துப்போன சிந்தியினர் சைவமாக மாறிவிட்டார்கள். இப்படி ஒரு வரலாற்றுப் புரட்டிலிருந்து வரலாறுகளும் உருவானது.
வெறுப்பரசியல் வரலாற்றிலிருந்து சமகாலத்துக்கும் சமகாலத்திலிருந்து வரலாற்றுக்குமாகப் பயணிக் கிறது; அந்த வெறுப்பரசியலில் உணவும் ஒரு தீனியாகப் பயன்படுத்தப்படும் சூழலை இன்று நாம் பார்க்கிறோம்.
சமீபத்தில் உணவுப் பொருட்களை உணவு விடுதிகளிலிருந்து பெற்று நுகர்வோரின் வீடுகளில் விநியோகிக்கும் பன்னாட்டு நிறுவனமான ‘ஸொமேட்டோ’ மூலம் உணவுப் பண்டங்களை வரவழைத்த நுகர்வோர் ஒருவர், அதை விநியோகிக்க வருபவர் இஸ்லாமியர் என்று தெரிந்தவுடன் அவரை அனுப்பக் கூடாது என்று அந்நிறுவனத்திடம் ஆட்சேபித்ததையும், அதற்கு ‘உணவுக்கு மதம் ஏதும் இல்லை. உணவே ஒரு மதம்’ என்று அந்நிறுவனம் எதிர்வினையாற்றியதையும் சமூக வலைதளங்களில் அதைப் பல்லாயிரக்கணக்கானோர் வரவேற்றதையும் நாம் அறிவோம். ஆனால், அடுத்த சில நாட்களுக்குள் கொல்கத்தாவில் உணவு விநியோக நிறுவனத்தில் வேலை பார்க்கும் சில ஊழியர்கள், தாங்கள் நுகர்வோருக்கு எடுத்துச் செல்லும் உணவுப் பொட்டலங்களில் மாட்டுக்கறி இருந்தால் எடுத்துச் செல்ல மாட்டோம் என்று ஆர்ப்பாட்டம் செய்ததாக ஒரு சர்ச்சை வெளியாகி அடங்கியது.
விஷயம் என்னவென்றால், சட்டப்படி நமக்கு உணவு விநியோகிக்கும் நிறுவனங்களில், எந்த மதத்தைச் சேர்ந்த ஊழியர் தங்களுக்கு உணவு எடுத்து வர வேண்டும் என்று ஒரு நுகர்வோர் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கட்டளையிட முடியாது. அதேபோல் ஊழியர்களும் தாங்கள் எடுத்துச்செல்லும் உணவுப் பொட்டலங்களில் என்ன எடுத்துச்செல்கிறோம் என்பதைத் தெரிந்துகொண்ட பிறகுதான் விநியோகத்துக்குச் செல்வோம் என்றும் கூற முடியாது. ஒரு ஊழியர் தன்னுடைய நிர்வாகம் சட்ட விரோதமான ஒரு உத்தரவைப் பிறப்பித்தால், அதை நிறைவேற்ற மறுக்கலாம். தன்னுடைய சமய நம்பிக்கையை உணவின் மீது திணித்தால், அவருடைய வேலைதான் பறிபோகுமே ஒழிய, அவருடைய சமய நம்பிக்கை அடுத்த வேளை சாப்பாட்டை அளிக்காது.
சட்டத்துக்கு அப்பாற்பட்டும் இந்த வெறுப்பு சுயவெறுப்புதான்; சமயங்கள் வெறுப்பை வலியுறுத்தவில்லை. உள்ளபடி, நம்முடைய சமயங்கள் என்ன சொல்கின்றன? ‘பெரிய புராண’த்தில் கண்ணப்ப நாயனார் காளத்திநாதனிடம் வேண்டுவதாகக் கூறும் பாடல் இது: “நாதனே! அமுது செய்ய நல்லமெல் இறைச்சி நானே / கோதறத் தெரிந்து வேறு கொண்டிங்கு வருவேன்!” உணவை அன்புடன் படைப்பதைத்தான் எல்லா சமயங்களுமே வலியுறுத்துகின்றன.
சர்வதேச அளவில் பல ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டுவரும் ‘டப்பாவாலாக்கள்’ எனக்கு நினைவுக்குவருகிறார்கள். மும்பையில் வேலைக்குச் செல்பவர்களுக்கு மதிய உணவை எடுத்துச் செல்லும் டப்பாவாலாக்களைப் பற்றிப் பலரும் பரவசப்படுவது உண்டு. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பம்பாய்க்கு வந்தபோது, டப்பாவாலாக்களின் செயல்பாடுகளைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார். ஏனென்றால், நிர்வாகத் திறமையை அளவிடும் அளவுகோலின் உச்சத்துக்கு ‘ஸிக்மா 6’ என்று குறிப்பிடுவதுண்டு. எல்லா விதமான சிக்கல்களுக்கும் தீர்வு வைத்திருக்கும் நிர்வாகத் திறமையைத்தான் அந்த அளவுகோலினால் மதிப்பிடுவார்கள். டப்பாவாலாக்கள் அப்படியொரு பெயரைப் பெற்றிருக்கிறார்கள்.
தாங்கள் எடுத்துச்செல்லும் அலுமினிய டிபன் கேரியரில் மூன்று எண்களை மட்டுமே குறித்து வைத்திருப்பார்கள் டப்பாவாலாக்கள். கேரியர் ஏற்றப்படும் ரயில் நிலையம், இறக்கப்படும் ரயில் நிலையம், அதைச் சேர்க்க வேண்டிய பகுதி இவை மூன்றையும் குறிக்கும் எண்கள் அவை. இந்த மூன்று எண்களையும் வைத்துக்கொண்டு லட்சக்கணக்கான அலுவலக ஊழியர்களுக்கான மதிய உணவை எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் விநியோகிக்கிறார்கள் டப்பாவாலாக்கள்.
இந்த 125 வருடங்களில் டப்பாவாலாக்கள் தாங்கள் எடுத்துச் செல்லும் டிபன் கேரியரில் எத்தகைய உணவு இருக்கிறதென்று கேட்டதுமில்லை, நுகர்வோர் தரப்பிலிருந்து தனக்குச் சாப்பாடு எடுத்துவருபவர் எவர் என்ற விசாரணை நடந்ததும் இல்லை.
நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது எங்கள் பள்ளியில் ராமநவமி தினத்தைக் கொண்டாடுவார்கள். அன்றைய தினம் மாணவர்களுக்கு வெல்லத்தில் செய்த பானகமும் பருப்பும் இலையில் வைத்து வழங்குவார்கள். என்னுடைய ஆசிரியை இதற்காக வெல்லமும் பருப்பும் வாங்கி வர அனுப்பும்போது, “தரமான வெல்லமும் பருப்பும் சலாம் ஸ்டோரில் கிடைக்கும்; அங்கே வாங்கு” என்று சொல்லித்தான் அனுப்புவார்கள். ராமநவமி கொண்டாட்டத்துக்கான பொருட்களை முஸ்லிம் கடையில் வாங்குவதைப் பற்றி யாருக்கும் எந்தக் குழப்பமும் இருந்ததில்லை.
கன்னியாகுமரி, மண்டைக்காட்டில் கலவரம் வெடித்தபோது, சமய வேறுபாடுகள் வலிந்து புகுத்தப்பட்டதை நான் கண்டிருக்கிறேன். குமரி மாவட்ட தெருக்களின் சுவர்களில் எல்லாம் ‘இந்துவாக இரு. இந்து கடையில் வாங்கு’ என்ற கோஷங்களை அப்போது பார்க்க முடிந்தது. மக்கள் கூடிய சீக்கிரம் இத்தகைய மதக் காழ்ப்புகளைக் கடந்து ஒன்றிணைந்தபோதுதான் உணர்ந்தார்கள், இத்தகைய வெறுப்புப் பிரச்சாரத்துக்குப் பின் மத அரசியல் மட்டும் அல்ல; வணிகப் போட்டி அரசியலும் இருக்கிறது என்பதை. ஆக, மேலோட்டமாக நாம் பார்க்கும் வெறுப்பரசியலுக்குப் பின்னணியிலும் திட்டவட்டமான பயனாளிகள் இருக்கிறார்கள். இதை அறியாதவர்களே அவர்களுடைய தீனியாகிறார்கள்.
- கே.சந்துரு, மேனாள் நீதிபதி,
சென்னை உயர் நீதிமன்றம்