உத்தர பிரதேசத்தின் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு ஆஸம் கானிடம் தோற்றவர் நடிகை ஜெயப்பிரதா. ஆனாலும், வாரத்துக்கு மூன்று நாட்கள் மக்கள் மத்தியில் உலாவருகிறார். பள்ளிகளுக்குச் சென்று வகுப்பெடுக்கிறார். வயல்களில் நின்று விவசாயிகளிடம் பேசுகிறார். 2014 தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியிடம் தோற்றாலும், அடிக்கடி அங்கே சென்று மக்கள் மனதை வென்று 2019 தேர்தலில் ராகுலை வீழ்த்தியும்விட்ட ஸ்மிருதி இரானியின் பாணிதான் இது. ஜெயப்பிரதா மட்டுமல்ல, கட்சியின் நட்சத்திர வேட்பாளர்கள் அனைவரையும் தங்கள் தொகுதிக்கு இப்படி அடிக்கடி சென்றுவருமாறு உத்தரவிட்டிருக்கிறாராம் அமித் ஷா. ஸ்மிருதி இரானியின் அனுபவத்துக்குப் பின் பலரும் அதைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஏசிக்கு விடுதலை கொடுக்கும் ஜெர்மனி
உலக அளவில் ஏசிகளை அதிகம் பயன்படுத்தும் நாடாக சீனா 35%, அடுத்து அமெரிக்கா 23% இருக்கின்றன. ஜப்பான் 9%, ஐரோப்பிய ஒன்றியம் 6%, கொரியா 4% இதர உலக நாடுகள் 23%. அமெரிக்காவில் 90% வீடுகள் ஏசிகளுடன் உள்ளன. இந்தியாவில் இப்போது வெகு வேகமாக விற்பனையாவது ஏசிதான். இப்படியிருக்க, ஜெர்மனியில் எப்படி 3% வீடுகளில் மட்டுமே ஏசிக்கள் பொருத்தப்பட்டுள்ளன? காரணம், அவர்கள் வீடுகளையே வெப்பம் தாக்காதவாறு வடிவமைத்துக் கட்டுகின்றனர். அத்துடன் வீட்டைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும் கட்டுமானப் பொருட்களையே பயன்படுத்துகின்றனர். ஏசியால் புவி வெப்பமயமாதலை அதிகப்படுத்திக்கொண்டும், அதைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிக்கொண்டும் இருக்கும் நாடுகள் ஜெர்மனிக் கட்டுமானத்தைப் பின்பற்றலாம்.
தீதியிடம் சொல்லுங்கள்: பாஜகவுக்கு திரிணமூலின் எதிர்ப் பாட்டு
வங்க சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 20 மாதங்கள்தான் இருக்கின்றன. கடந்த மக்களவைத் தேர்தலில் கணிசமான இடங்களில் பாஜக வென்றிருப்பதால், மம்தா இப்போதே சட்டமன்றத் தேர்தல் வேலைகளை முடுக்கிவிட ஆரம்பித்திருக்கிறார் என்கிறார்கள். அதன் ஒரு கட்டம்தான் ‘தீதியிடம் சொல்லுங்கள்’ (தீதிகி போலோ) என்ற பிரச்சாரம். இது மக்களவைத் தேர்தலின்போது ‘வாக்குச்சாவடிக்குச் செல்லுங்கள்’ (பூத் சலோ) என்ற அமித் ஷாவின் பிரச்சார வியூகத்துக்கான திரிணமூல் காங்கிரஸின் மறுவியூகம். ‘இது தேர்தலை மனதில் வைத்துச் செய்யப்படும் பிரச்சாரம் இல்லை. முன்பு, மக்களிடம் குறைகேட்கும் வழக்கம் இருந்ததன் தொடர்ச்சியே இது’ என்று மம்தா தரப்பு சொன்னாலும், பாஜகவை எதிர்கொள்ள அதன் வியூகங்களையே தன் வியூகங்களாக எதிர்க்கட்சிகள் சுவீகரிக்கும் வேலையில் இறங்கியிருப்பதற்கு இதுவும் ஓர் உதாரணம் என்று பேசுகிறார்கள் பாஜகவினர்.