வடிவரசு
தமிழில் ‘முரம்பு’ என்றொரு சொல் உண்டு. இச்சொல்லைப் பலரும் கேட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், இந்தச் சொல்லை நாளுக்குப் பத்து தடவையாவது உச்சரிக்கும் கிராமம் தமிழகத்தில் உள்ளது. திருவண்ணாமலையில் உள்ள திருவடத்தனூர் எனும் கிராமத்தின் மேட்டுப் பகுதியில் உள்ள மேல் திருவடத்தனூரை ‘முரம்பு’ என்றே அழைக்கிறார்கள். இப்படி அழைப்பதற்கு இவ்வூரின் மண் தன்மைதான் காரணம். பார்க்க கல்போல் கட்டியாக இருக்கும் இந்த மண்ணை உடைக்க முற்பட்டால் கட்டிக்கட்டியாகப் பொதுபொதுத்துவிடும்.
‘...நன்றுபுரிந் தெண்ணிய மனத்தை யாகி முரம்பகண் ணுடைய வேகிக் கரம்பைப்...’ எனும் பேயனாரின் குறுந்தொகை வரிகளில் உள்ள முரம்பும், இக்கிராமத்து மக்கள் உதிர்க்கும் மொரம்பும் ஒன்றா எனில், ஆம்.. ஒன்றுதான். அகநானூறின் பாலை பாடிய பெருங்கடுங்கோ, ‘பரன்முரம்பாகிய பயமில் கானம்’ என்றும், ‘முரம்பு கண்ணுடைந்த நடவை தண்ணென’ என்று மலைபடுகடாம் வரியிலும் இந்த சொல் ஆளப்பட்டிருக்கிறது. முரம்பு என்னும் சொல்லுக்கு பரற்கற்களையுடைய மேட்டு நிலம் என்று பொருள் தருகிறது குறுந்தொகை. அகநானூறு, பரற்கற்களையுடைய வன்னிலம் என்றும், மலைபடுகடாம் பருக்கைக் கற்களையுடைய மேட்டுநிலம் என்றும் பொருள் தருகிறது. கிட்டத்தட்ட இதே பொருளைக் கொண்டுதான் இக்கிராமத்தினரும் இச்சொல்லைப் பயன்படுத்திவருகிறார்கள்.
ஒரு தடவை இச்சொல் குறித்தும், இரண்டாயிரம் ஆண்டு பழமையான சங்க இலக்கியங்களில் இவை வருவது குறித்தும் கிராமத்தின் மூத்த விவசாயியிடம் சொன்னேன். ‘ஓ.. அப்டியா..’ என வியந்தவர், ‘நாங்கலாம் எந்த பொஸ்தகத்தப் பாத்திருப்போம். தலமுற தலமுறயா பெரியவங்க சொல்றதக் கேட்டும் பாத்தும் வளந்தவங்கதான எல்லாரும்’ என்றார். அவர் சொன்னதில் உள்ள, ‘தலமுற தலமுறயா’ என்ற கூற்று, சங்க இலக்கிய காலத்தில் புழங்கிய சொற்கள் 21-ம் நூற்றாண்டு வரை கடந்துவந்ததற்கான உதாரணம். அப்படி பல சொற்களை நம்மால் உதாரணம் காட்ட முடியும். அவற்றைத் தாண்டி தொலைந்துபோன சொற்கள் ஏராளம்.
சொல்லுக்கு முகம் உண்டு என்பார்கள். முகத்தோடு குணமும் உண்டு. கோவலனைக் கொன்றது ஒரு சொல்தான். பலரை வாழ வைப்பதும் ஒரு சொல்தான். எந்த சொல்லும் வீண் அல்ல; எந்தவொரு சொல்லுக்கும் முதலும் கிடையாது, முடிவும் கிடையாது!