சிறப்புக் கட்டுரைகள்

இந்தியக் கல்வி முறையில் முழு மாற்றம் தேவைப்படுகிறது!- கஸ்தூரிரங்கன் பேட்டி

செய்திப்பிரிவு

சுபஸ்ரீ தேசிகன்

புதிய கல்விக் கொள்கை வரைவு நாடு முழுவதும் பலத்த விவாதங்களை உண்டாக்கிவரும் நிலையில், புதிய கல்விக் கொள்கை குழுத் தலைவரும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவருமான டாக்டர் கே.கஸ்தூரிரங்கன் இதுகுறித்து விரிவாகப் பேட்டி அளித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் இங்கே.

புதிய கல்விக்கொள்கைக்கான குழு எப்படி அமைக்கப்பட்டது, வரைவு அறிக்கை எப்படித் தயாரிக்கப்பட்டது?

நாட்டில் கடந்த 25 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் சமூக, பொருளாதாரரீதியாக ஏற்பட்டுள்ளன. ராணுவ வியூகரீதியாகப் பல தேவைகள் ஏற்பட்டுள்ளன. இன்னும் பல… 2 லட்சம் கோடி டாலர்கள் பொருளாதாரமாக இருந்தது 5 லட்சம் கோடி டாலர்கள் பொருளாதாரமாக வளர்கிறது. முழுக்கவும் மின்னணுவயமாகிவிட்ட சமூகம் சமீபித்துக்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் நாம் தயாராக இருக்கிறோமா?

இந்தப் பின்னணியில்தான் அப்போதைய கல்வியமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் என்னிடம் இப்பொறுப்பை ஒப்படைத்தார். முன்னதாக ஸ்மிருதி இரானி அத்துறையின் அமைச்சராக இருந்தபோதே, புதிய கல்விக் கொள்கை வகுப்புக்கான பணிகள் தொடங்கப்பட்டு, தொடர்ந்து சுப்பிரமணியம் தலைமையில் அமைக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கை குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், அது தொடர்பாகச் சில பிரச்சினைகள் எழுந்ததால் அவற்றை ஆராயுமாறு பணித்தார். ஊடாகவே வந்திருந்த மனிதவளத் துறையின் அறிக்கையும் பரிசீலிக்கப்பட வேண்டியதாயிற்று. அடுத்த 20 ஆண்டுகளுக்கு இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் பிரச்சினைகள் இல்லாமலும் அறிக்கை தருமாறு நாங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டோம். முந்தைய அறிக்கைகளையெல்லாம் படித்தபோது, அவற்றைச் செம்மைப்படுத்தினால் போதாது, முழுவதையும் மறுபார்வைக்கு உட்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம். ஆக, பழைய அறிக்கைகளிலும் யோசனைகளிலும் இருந்த முக்கிய அம்சங்களைப் புறந்தள்ளாமல் - ஆனால் புதிதாக - எங்கள் பணியைத் தொடங்கினோம். இப்போதுள்ள கல்வி முறையில் அடிப்படை மாற்றங்களை எங்களுடைய வரைவு கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது.

3-8 வயதுள்ள குழந்தைகள்தான் கல்விக்கு அடிப்படையான வயதுள்ளவர்கள் என்கிறது வரைவுக் கொள்கை. 3-5 வயதுகளில் குழந்தைகள் அனைத்தையும் பொதுமைப்படுத்தித் தெரிந்துகொள்கின்றனர். அவர்களுடைய உடல் வளர்ச்சியும் புரிந்துகொள்ளும் அனுபவமும் 5-8 வயதுகளில் வேறுபடுகிறது. உங்களுடைய கொள்கையில் இதற்கு இடம் தந்திருக்கிறீர்களா?

குழந்தை பிறந்த நாள் முதலே அதன் மூளை வளர்ச்சி பெறுகிறது. மூன்று வயதிலிருந்துதான் கேட்கும் ஒலிகள் என்ன, அவற்றுக்கு அர்த்தம் உண்டா என்று பார்க்கும் குழந்தை, தாயிடமிருந்து மொழியைக் கற்கிறது. ஒரு பொருளைக் காட்டியும் ஒரு செயலைச் செய்தும் அதற்கான பெயரையும் பொருளையும் வீட்டில் கற்பிக்கின்றனர். இந்தப் பயிற்சிகள் வீட்டில் தரப்படுபவை. 3-6 வயதுகளில் மூளை விரைவாக வளர்கிறது. ஆறு வயதில் மூளையின் 85% பக்குவப்பட்டுவிடுகிறது. இதுதான் கற்பதற்கு முக்கியமான பருவம். இப்பருவத்தில் குழந்தையின் எந்தெந்த மூளைப் பகுதிகளை, எந்தெந்த வகையில் செயல்பட வைக்கிறீர்களோ அதற்கேற்ப வெவ்வேறு கலைகளையும் பயிற்சிகளையும் குழந்தை கற்கிறது. இந்த வகையில்தான் மூளையும் முழு உருப்பெறுகிறது. எட்டு வயது வாக்கில் மூளை வளர்ச்சியில் வேறுபாடுகள் ஏற்படுகின்றன. எந்த வகையில் குழந்தை கல்வி பெறுகிறதோ அதைப் பொறுத்து இது அமைகிறது. இது முக்கியமான பருவம். இதுவரை கவனிக்கப்படவில்லை.

குழந்தை வளர்ச்சியைவிடப் பள்ளிக்குச் செல்வதற்கான தயார் நிலையைப் பற்றித்தானே பேசுகிறீர்கள்?

இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை அல்ல; மூன்று வயதில் விளையாட்டின் மூலம் சிந்தனையைத் தூண்டிச் செயல்பட வைக்க முடியும். விளையாட்டின் மூலம் பயிற்றுவிப்பது வழக்கமான கல்விப் பயிற்சியல்ல. இதனால்தான் ஆரம்பக் கட்டக் கல்வியின்போது குழந்தை மேலும் வளர்கிறது. கல்வியின் தொடக்கக் கட்டம் முக்கியமானது. அந்தக் கட்டத்துக்கு (3-8) குழந்தைகளை முழுதாகத் தயார்செய்ய வரைவுக் கொள்கை வகை செய்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகள், அதற்கடுத்த மூன்று ஆண்டுகள் என இரண்டு கட்டங்களாக மேலும் வளர்ச்சிக்கு உரிய கல்வி அளிக்கப்படவிருக்கிறது.

கோத்தாரி  குழு பள்ளிக்கூடங்கள் குறித்துப் பரிந்துரைத்தது குறித்துக் கூறியிருக்கிறீர்கள்; நகரங்களுக்கும் சிறு நகரங்களுக்கும் அது பொருந்தும். பள்ளிக்கூடத்துக்குச் செல்லவே முடியாத தொலைதூரப் பகுதிகளில் என்ன வழி? மிதிவண்டிகள் தரப்படலாம் என்கிறீர்கள். இது சாத்தியமா? தொலைதூரப் பகுதியில் வாழும் தலித் குடும்பங்களை எண்ணிப் பாருங்கள்; அங்கு மாணவர்கள் எண்ணிக்கை போதவில்லை என்று இருக்கும் பள்ளிக்கூடத்தை மூடிவிட்டு தொலைதூரத்தில் உள்ள பள்ளிக்குப் போ என்பது சரியா?

இப்போதுள்ள பள்ளிக்கூடங்களை மூடிவிடுவதல்ல புதிய கொள்கையின் நோக்கம். ‘சர்வ சிக்‌ஷா அபியான்’ என்ற கொள்கையே மாணவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே பள்ளிகளை நிறுவ வேண்டும் என்பதுதான். இதன்படிதான் பல ஆயிரம் பள்ளிக்கூடங்கள் கடந்த காலங்களில் திறக்கப்பட்டன. ஆனால், இப்போதைய பள்ளிகளில் சிலவற்றில் ஆறு அல்லது அதற்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்கின்றனர். சில இடங்களில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தும் ஓராசிரியர் பள்ளியாக இருக்கிறது. பள்ளிக் கல்வி என்றால் இதுவல்ல. ஒரு விளையாட்டுத் திடல்கூடக் கிடையாது. நகரங்கள், சிறுநகரங்கள் என்று எப்பகுதியாக இருந்தாலும், மாணவர்கள் சேர்ந்து படிக்க பெரிய பள்ளி வளாகம் வேண்டும். தலித்துகள் மட்டுமல்ல, உரிமைகள் மறுக்கப்பட்ட எந்த சமூகத்தவராயினும் அனைவரும் படிக்க வேண்டும் என்பதே நோக்கம். பள்ளிக்கூடங்களின் தரம் உயர்த்தப்பட வேண்டும், அதிக ஆசிரியர்கள் பணியில் சேர்க்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் ஐந்து மாணவர்கள், பத்து மாணவர்கள் இருந்தால் முடியாது. இப்போதுள்ள பள்ளிக்கூடங்களையே மேலும் அதிக மாணவர்கள் பயிலும் வகையில் வசதிகளைக் கூட்டி மேம்படுத்த வேண்டும். ஆசிரியர்களும் மேலும் படித்து, தங்களுடைய ஆற்றல்களை வளர்த்துக்கொள்ள வேண்டும், அங்கன்வாடி மற்றும் அது போன்ற சமுதாய நல அமைப்புகளில் உள்ளவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். பிற பகுதிகளில் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளில் சேர்ந்து பணியாற்ற வேண்டும். இந்தப் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் மற்றவர்களுடன் கலந்து பணியாற்ற சமுதாயத்தினரும் கண்காணிப்புகளைச் செய்யலாம். இப்போது பள்ளிக்கூடங்களுக்கும் மக்களுக்கும் தொடர்பில்லாமல் இருக்கிறது. புதிய கலாச்சாரத்தை நாம் தொடங்க வேண்டும். 

மோசமான நிர்வாகத்தால்தான் கல்வித் துறையில் இத்தனை நெருக்கடிகளா? எழுத்தறிவும் எண்ணறிவும் அடிப்படை என்பதைக் கவனிக்கத் தவறிவிட்டார்களா? சிறிய பள்ளிக்கூடங்கள் கட்டுப்படியாகாதவை என்பதை உணரவில்லையா? கல்வியில் நாம் பின்தங்கியிருப்பதற்கு இவைதான் அடிப்படைக் காரணங்களா?

மக்கள் குடியிருக்கும் இடங்களிலிருந்து 1.6 கிமீ தொலைவுக்குள் குடிநீர் கிடைக்க வேண்டும் என்று அரசு நியதி ஏற்படுத்தியிருக்கிறது. இப்படித்தான் பள்ளிக்கூடங்களையும் மக்கள் வாழும் இடங்களுக்கு அருகிலேயே அமைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

இந்த நாட்டின் சிக்கல்கள் குறித்துக் குறிப்பிட்டுள்ளீர்கள். சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைப் புறக்கணித்துவிட முடியாது. தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் குறித்து ஏன் அரைப் பக்கத்தோடு முடித்துவிட்டீர்கள்? சமூகரீதியாகப் பின்தள்ளப்பட்ட குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகள், பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய சமூகங்களின் பிள்ளைகள் சந்திக்கும் பிரச்சினைகளைவிட வித்தியாசமானவை; உங்களுடைய கல்விக் கொள்கையில் இதில் கவனம் செலுத்தியிருக்கிறீர்களா?

உரிமைகள் மறுக்கப்பட்ட சமுதாய மக்களின் கல்வி குறித்து வரைவு அறிக்கையின் பல்வேறு இடங்களில் குறிப்பிட்டிருக்கிறோம். அவர்களுக்குச் சிறப்பு கல்வி உதவித் தொகை தரப்பட வேண்டும், சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறோம். தலித் அல்லது உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள் என்ற தலைப்பை மட்டும் பார்த்துவிட்டுப் பேச வேண்டாம். வரைவு அறிக்கையை முழுதாகப் படியுங்கள். பல இடங்களில் அவர்களைப் பற்றிப் பேசப்பட்டிருக்கிறது. பழங்குடிகள் கல்வி, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் நிலை குறித்து எங்கள் அளவுக்கு இதற்கு முன்னர் யாரும் இவ்வளவு ஆழமாக அலசியிருக்க மாட்டார்கள். ஆனால், சமூகங்களை இப்படித் தனித்தனிப் பிரிவுகளாகப் பிரித்துப் பார்க்க நாங்கள் முயலவில்லை. தலித் மாணவர்களின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் கல்விக் கொள்கை மூலம் தீர்வு காண்பது இயலாது. இது சமூகப் பிரச்சினை. அதே சமயம், தலித் சமுதாய மாணவர்கள் கல்வி கற்க வாய்ப்பில்லாமல் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இந்த வேறுபாடுகள் எல்லாம் இன்று மெதுவாக மறையத் தொடங்கியுள்ளன. இன்னும் 20 ஆண்டுகளில் மிகச் சிறந்த அறிவு, ஆற்றல் ஆகியவற்றுடன் உன்னதமான நிலைக்குத் தலித்துகள் வருவார்கள். அப்படி வரும் நிலையில், அவர்கள் தங்களுக்கென்று தனிச் சலுகை கள் எதுவும் கேட்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

இப்போதைய கல்வி முறையில் அனைத்துமே வாரியத் தேர்வுகளைப் பொறுத்தே அமைகிறது; இதுவே மாணவர்களுக்கு மன அழுத்தம் தருகிறது. ஒரு செமஸ்டருக்கு (கல்விப் பருவம்) 3 முறை தேர்வுகள் என்று எட்டு செமஸ்டர்களுக்குத் தேர்வுகள் நடத்தப் பரிந்துரை செய்திருக்கிறீர்கள்; மாணவர்கள் மீது படிப்புச் சுமையை ஏற்றும் செயல் அல்லவா இது?

தேர்வுக்குத் தயாராகும்போது அவர்கள் எழுதலாம். தேர்வு முடிவில் அவர்களுக்குத் திருப்தி இல்லாவிட்டால் அடுத்த ஆறு மாதங்களில் மீண்டும் அதே தேர்வை மேலும் நன்றாக எழுதலாம். செமஸ்டர் தேர்வு என்றாலே, இந்த மாதத்தில்தான் எழுத வேண்டும், இத்தனை முறைதான் எழுத வேண்டும் என்பதில்லை. ஓராண்டில் இரண்டு அல்லது மூன்று முறை எழுத வாய்ப்பு தருகிறோம். இவையெல்லாம் டிஜிட்டல்மயமாகிறது. மாணவர்கள் படித்துவிட்டால் விரும்பும் நேரத்தில் தேர்வெழுதலாம். 

இதை இப்போதுள்ள முறையிலேயே செய்ய முடியாதா? நிறையத் தேர்வுகள், நெகிழ்ச்சித்தன்மை என்றெல்லாம் கூறினாலும் ஒட்டுமொத்தமான மதிப்பெண்கள்தானே முக்கியமாகின்றன? இளங்கலை, இளம் அறிவியல் பட்ட வகுப்புகளில் மாணவர்கள் பயில அதிகப் பிரிவுகளில் பாடங்கள் கிடையாது; இருக்கும் சிலவற்றைத்தான் தேர்வுசெய்ய வேண்டும் என்பதால்தானே மாணவர்களுக்கிடையே போட்டியும் மன அழுத்தமும் அதிகமாகிறது?

தொடக்க நிலைக்குப் பிந்தைய நான்கு ஆண்டுக் கல்வி முறையானது, இப்போதுள்ள முறைக்கு இணையானது அல்ல; உயர் கல்வியுடன் மாணவர்கள் எளிதில் இணைந்துகொள்ள மூன்று மாதங்களுக்கு ‘இணைப்புக் கல்வி’ (பிரிட்ஜ் கோர்ஸ்) கற்றுத்தரப்படவுள்ளது. இதுவரை பள்ளிக்கூடங்களில் அறிவியல், கலைப்பாடவியல், கலை, கைவினை, சமூக அறிவியல் ஆகிய தலைப்புகளில் எந்தப் பாடங்களைப் படித்திருந்தாலும் தொழிற்கல்வி கற்றிருந்தாலும் அவற்றை அப்படியே மேல்நிலைக் கல்விக்கு ஏற்பப் பொருத்திக்கொள்ள இந்த இணைப்புக் கல்வி உதவும். பள்ளிக்கூடத் தேர்வு முறை மாறியாக வேண்டும். மனப்பாடக் கல்வி முறையால் தேர்வுகள் கடினமாக இருக்கின்றன. ஆசிரியர்களுக்கு மறு பயிற்சி அளிக்க வேண்டும் அல்லது புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். பாடத்திட்டத்தையும் மாற்ற வேண்டும். கல்வி தொடர்பான எல்லாமே மாற வேண்டும். எனவே, இப்போதுள்ள கல்வித் திட்டத்தை செம்மைப்படுத்துவதால் நினைத்த கல்வித் தரத்தை எட்டிவிட முடியாது. அது சாத்தியமுமல்ல என்றே முதல் நோக்கில் தெரிகிறது.

புதிய கல்விக் கொள்கை ‘அதிகாரக் குவிப்’பையே அதிகம் வலியுறுத்துகிறது. ராஷ்ட்ரீய சிக்‌ஷா ஆயோக் அமைப்பின் தலைவராகப் பிரதமரைப் பரிந்துரைக்கிறது. பாடப்புத்தகங்களை என்சிஇஆர்டி தயாரிக்கவிருக்கிறது, மாநிலங்கள் உள்ளூருக்கேற்ப சிறு மாறுதல்களைத்தான் செய்ய முடியும். பொது அதிகாரப் பட்டியலில் கல்வி இருந்தாலும் மாநிலங்களின் சுயாட்சிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படவில்லையே ஏன்?

நாங்களும் இதைச் சிந்தித்தோம். கல்வி பொதுப் பட்டியலில் இருப்பது எங்களுக்கும் தெரியும். எல்லா மாநிலங்களுமே பள்ளிக்கூடங்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பைக் கொண்டுள்ளன. பள்ளிகளுக்கான அங்கீகாரம் என்பது வேறு, கட்டுப்பாடு என்பது வேறு. அங்கீகாரம் தொடர்பான நடைமுறைகள், கட்டுப்பாட்டிலும் சில மாறுதல்களைக் கொண்டுவரும். தேசிய அளவில் கட்டுப்பாடு, அங்கீகார முறையை நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரித்திருக்கிறோம். முதலாவது, கல்வி மானியம் வழங்கும் அமைப்பு. இப்போதுள்ள ‘பல்கலைக்கழக நிதிநல்கை (யுஜிசி) அமைப்பு’ பல்கலைக்கழக மானியம் வழங்கும் அமைப்பாகிவிடும். கட்டுப்பாட்டு அமைப்பு ‘தேசிய உயர்கல்வி ஆணையம்’ (என்எச்இஆர்ஏ) என்றாகும், ‘தேசிய அங்கீகார, மதிப்பிடல் கவுன்சில்’ போல. தேசிய உயர் கல்வி ஆணையம் வேறு கட்டமைப்பைக் கொண்டிருக்கும். நாடு முழுவதற்குமான வேலையைச் செய்யும் ஒரே அமைப்பாக அது இருக்காது. அது தனக்கென்று தனி தொடர்பு அமைப்பைக் கொண்டிருக்கும். கல்வி அமைப்புகளிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும். அதற்கான காலம் மூன்று ஆண்டுகளாக இருக்கும். பத்து பேர் அடங்கிய குழுவை ஏற்படுத்திக்கொண்டு, உறுப்பினராவதற்குரிய தகுதிகளை அக்குழு வெளிப்படுத்த வேண்டும். அதன் பிறகு தரம் வழங்கல் அமைப்பில் உறுப்பினர்களாகச் சேர்ந்துகொள்ளலாம். இது புதிய அமைப்பில் சாத்தியம். அடுத்தது, சட்டகத்தை உருவாக்கும் ஆணையம். இது தொழில்முறையில் துல்லியமாக இயங்குவது. இது விரிவான சட்டகத்தை ஏற்படுத்தும். உதாரணத்துக்கு, இப்போதுள்ள இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ). இனி ஒரு கல்லூரிக்கு எத்தனை இடங்கள், அங்கே என்ன பாடத்திட்டம் கற்றுத்தரப்பட வேண்டும் என்பதில் அதற்குப் பங்கு ஏதும் இருக்காது. அது மருத்துவக் கல்விக்கான விரிவான சட்டகத்தை உருவாக்குவதற்கு மட்டுமே. அதற்குப் பிறகு கல்வி நிறுவனங்கள் அடுத்தகட்டப் பணியை மேற்கொள்ளும்.

பாடத்திட்டம் எப்படி இருக்க வேண்டும், பொதுவான கற்பித்தல் முறை என்ன என்று தேசிய சட்டகம் தெரிவிக்கும். அதிலிருந்து தங்களுக்குத் தேவையான பாடத்திட்டங்களையும் கற்பித்தல் முறையையும் மாநிலங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். தேசிய கல்வி அங்கீகார ஆணையம் இருப்பதைப் போல மாநிலங்களிலும் ஏற்படுத்தப்பட வேண்டும். தேசிய அளவில் கட்டுப்பாட்டு ஆணையம் இருப்பதைப் போல மாநிலங்களிலும் இந்த அமைப்பு அவசியம். கல்வி முறையையும் பிறவற்றையும் ஒழுங்குபடுத்தும் பொறுப்பு பள்ளிக்கூடங்களிடம் விடப்படும். இது கூட்டரசு என்பதால், தேசிய அளவிலும் இவை ஏற்படுத்தப்படுகின்றன. இப்படி தேசிய அளவில் எல்லாம் நிர்ணயிக்கப்படுவதால் மாநிலங்களின் அதிகாரங் கள் குறைந்துவிடாதா என்று கேட்டீர்கள். புதிய முறையில் மாநிலங்கள் நல்ல அதிகாரங்களைப் பெறுகின்றன.

கல்வியைக் கற்றுத்தருவதில் புதிய முறைகளையும் தொழில்நுட்பங்களையும் கையாளவும் புதிய யோசனைகளைப் பரிசீலிக்கவும் மாற்றங்களைப் புகுத்தவும் மாநிலங்களுக்கு வாய்ப்புகள் அதிகமாகின்றன. கல்வித் துறையைக் கட்டுப்படுத்தும் நான்கு அல்லது ஐந்து அமைப்புகளுடன் மத்திய அரசு தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபடும். அதற்காக மாநில அளவில் கல்வித் துறையில் மத்திய அரசு நேரடியாகக் கட்டுப்பாடு செலுத்தாது.

பொதுக் கல்வியைப் பற்றிப் பேசுகிறீர்கள். நீங்கள் பரிந்துரைக்கும் நடவடிக்கைகள் பள்ளிக்கூடம் செல்லாமல் வீட்டிலிருந்தே படிக்கவும், வணிக நலன்களைப் பெருக்கவும் ஊக்குவிப்பதாகவும் உள்ளன. ஆசிரியர்கள் மட்டுமே உள்ள இங்குள்ள மூன்றடுக்கு உயர் கல்வி முறை அமெரிக்காவில் உள்ளதைப் போன்றது. இங்கே மேலடுக்கில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு, அவற்றுக்குத் தேவைப்படுவதைப் போல பல மடங்கு நிதி கிடைக்கிறது. கீழ் நிலையில் உள்ளவை நிதியில்லாமல் வாடுகின்றன. அதிகாரப் படிநிலையும், தனித்துச் செயல்படும் போக்கும் உள்ள நாட்டில் இது பிரச்சினைகளை உருவாக்காதா?

நீங்கள் சொல்வது உண்மை. ஐஐடிக்கள், ஏஐஐஎம்எஸ், ஐஐஎஸ்இஆர்கள், என்ஐஎஸ்இஆர்கள், மத்திய பல்கலைக்கழகங்கள், அடுத்த நிலையில் மேலும் பல மத்திய கல்வி நிறுவனங்கள் பிறகு மாநிலப் பல்கலைக்கழகங்கள், மாநிலக் கல்லூரிகள் என்று வருகின்றன. நீங்கள் சொல்வது போலத்தான் இவற்றுக்கு நிதி கிடைக்கின்றன. நான் இப்போது 200 டைப்-I பல்கலைக்கழகங்கள் உருவாவது பற்றிப் பேசுகிறேன். ஒவ்வொன்றிலும் 20,000 மாணவர்கள் இருப்பார்கள். இங்கே கலை, அறிவியல், மருத்துவம், பொறியியல், சட்டம், தொழிற்கல்வி என்று எல்லாப் பிரிவுகளும் கற்றுத்தரப்படும். இதை ஆய்வுப் பல்கலைக்கழகம் என்று அழைக்கிறோம். இப்படி நாடு முழுக்க 200 பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இது உடனே அல்ல, இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் நடைபெற வேண்டும். நலிவுற்ற பிரிவினர் இவற்றில் ஒதுக்கப்பட மாட்டார்கள். மோசமாகச் செயல்படுவோர் மட்டுமே ஒதுக்கப்படுவார்கள். அடுத்தது பெரும் ஆசை. ஆசிரியர் பயிற்சிக்கும் அது தொடர்பான ஆய்வுகளுக்குமான பல்கலைக்கழகம். நாடு முழுக்க இப்படி 2,000 முதல் 3,000 ஆசிரியர் பல்கலைக்கழகங்கள் தேவை. இதில் எல்லாவித பாடங்களும் கற்றுத்தரும் துறைகள் இருக்கும். டைப்-I பல்கலைக்கழகங்களைப் போல இதில் மாணவர்கள் மேலும் மேலும் படித்துத் தங்களைத் தரம் உயர்த்திக்கொள்ளும் வகையில் சட்டதிட்டங்கள் வகுக்கப்படும். 

மாநிலங்களில் 800 முதல் 900 வரையில் பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இவற்றில் சில ஆசிரியர் பயிற்சிக்குரிய பல்கலைக்கழகங்கள். ஆசிரியர் பயிற்சிப் பாடங்களைப் படிப்பதுடன் ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ளலாம். மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐடிகள், ஐஐஎம்கள் மெல்ல மெல்ல ஆய்வுப் பல்கலைக் கழகங்களாகிவிடும். ஆராய்ச்சி என்று எடுத்துக்கொண்டால், தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை குறித்து நாம் பேச வேண்டும். ஆசிரியர்கள் பல்கலைக்கழகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அப்படி 2,000 ஆய்வு பல்கலைக் கழகங்கள் தேவைப்படும். அடுத்தகட்டமாக நாடு முழுவதிலும் 40,000 முதல் 50,000 வரையிலான கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளுக்கும் ஒரு திசை வழி காட்டப்பட வேண்டும். இவற்றில் சில ஒரேயொரு பாடத்தை மட்டும் கற்றுத்தருகின்றன, 10 ஆசிரியர்கள் உள்ளனர், அடித்தளக் கட்டமைப்பு வசதிகள் ஏதுமில்லை. இவையெல்லாம் பட்டம் வழங்கும் பல்கலைக்கழகங்களாக வேண்டும். அமெரிக்காவில் உள்ள சமுதாயக் கல்லூரிகளுக்கு இணையானவை. இவற்றின் எண்ணிக்கை 20,000 இருக்கும். தொழிற்பயிற்சிக் கல்வியும் கல்விக் கட்டமைப்பிலேயே இணைந்தது. 

புதிய கல்விக் கொள்கைக்குப் பிறகு நல்ல பலன் கிடைக்கும் என்று நம்புகிறோம். 40,000 கல்லூரிகளை 20,000 ஆகச் சுருக்கியிருக்கிறோம். இந்த மூன்று நிலைகளிலும்கூட தொழிற்பயிற்சிக் கல்வி இணைந்தே வரும். உயர்நிலைப் பள்ளியில் 1, 2, 3, 4 நிலைகளிலும் (லெவல்), இளநிலைப் பட்ட வகுப்புகளிலும் தொழிற்பயிற்சிக் கல்வி தரப்படும். மூன்றாண்டு பட்ட வகுப்புக்குப் பிறகு, தொழிற்பயிற்சிக் கல்வியில் பட்டம் பெறும்போது, அது பல்வேறு பாடப்பிரிவுகளைக் கற்றுத்தரும் கல்விக்கூடத்திலிருந்து வரும். நான்காவது, தொழிற்புரட்சிக்கு நாம் தயாராக வேண்டும் என்றார் பிரதமர். உயர் கல்வியின் பகுதியாகத் தொழிற்பயிற்சிக் கல்வி அமையும்போது, அது அந்த இடத்துக்கே இட்டுச்செல்லும்.

உயர் கல்வியில் அதி தீவிர ‘மையப்படுத்தல்’ இருக்கிறது; வேறு எந்த நாட்டிலும் இப்படி இல்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

‘மையப்படுத்தல்’ அல்லது ‘சுதந்திரமாதல்’ என்பதெல்லாம் ஆய்வுக்கு எவ்வளவு செலவு என்பதைப் பொறுத்தது. இந்தியாவில் ஆய்வுக்கு ஜிடிபியில் 0.69% ஒதுக்கப்படுகிறது. முன்னர் 0.86%. அமெரிக்காவில் இது 2.5%, இஸ்ரேலில் 4%. எனவே, நாம் செலவு செய்யும் தொகையைப் பார்த்தால், ‘மையப்படுத்தல்’ என்பதற்கு அர்த்தமே இல்லை. இந்தியாவில் ஆய்வுகளுக்குப் பிறகு ‘பேடன்ட்’ உரிமைகள் பெறப்படும் எண்ணிக்கை 30,000 முதல் 40,000 தான். அமெரிக்காவில் இது 6 லட்சம் முதல் 7 லட்சம் வரையில். அதிலும் நம்முடைய பேடன்ட்டுகளில் 70% வெளிநாடு வாழ் இந்தியர்களால் பெறப்படுகின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இந்தியாவில் ஆய்வுகள் என்பது மகிழ்ச்சி தரும் விதத்தில் இல்லை. 

இந்தியாவில் 900 பல்கலைக்கழகங்கள் உள்ளன. 93% பல்கலைக்கழகங்கள் மாநிலப் பல்கலைக்கழகங்கள். ஆய்வுத் தரத்தில் அவற்றின் தரம் பரிதாபத்துக்குரிய வகையிலேயே இருக்கின்றன. இப்போது ஓரளவுக்குத் திறனுள்ள நிறுவனங்களுக்குத்தான் ஆய்வுக்கான உதவிகள் அளிக்கப்படுகின்றன.  மத்திய பல்கலைக்கழகங்களும் ஐஐடிகளும் நிதி பெறுகின்றன. அவையும் போதுமானவையல்ல. நிதியை அதிகப்படுத்துவதுடன் அடித்தளக் கட்டமைப்பையும் மேம்படுத்த வேண்டும். ஆராய்ச்சிக்குத் தரும் பணம் ஜிடிபியில் எவ்வளவு என்றுதான் கேட்கிறோம். ஆராய்ச்சிகளால் ஜிடிபி எவ்வளவு உயர்கிறது என்று எப்போது கேட்கப்போகிறோம்?  ஐரோப்பிய நாடுகளில் ஆராய்ச்சிக்கு 0.2% நிதி ஒதுக்கப்பட்டால் அது தேசிய உற்பத்தித் திறனை 1.1% கூட்டுகிறது.  நம்முடைய பல்கலைக்கழக அமைப்பிலேயே ஆராய்ச்சிகளுக்குப் போதிய ஆதரவு இல்லை. சில துறைகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கிறது, ஆராய்ச்சியும் நன்றாக இருக்கிறது. எனவே, அமெரிக்காவில் ‘தேசிய அறிவியல் அறக்கட்டளை’ இருப்பதைப் போல இந்தியாவிலும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதை அப்படியே 100% பின்பற்ற வேண்டியதில்லை. ஆனால் அறிவியல், பொறியியல், சமூக அறிவியல், கலைப் பாடங்கள் என்று அனைத்தையும் உள்ளடக்கியதாக அறக்கட்டளை இருக்க வேண்டும். இந்தியத் தன்மை மிகுந்திருக்க வேண்டும்.

© ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: சாரி

SCROLL FOR NEXT