'பாகுபலி' மூலம் உலக அளவில் கவனம் ஈர்த்த இந்திய இயக்குநர் ராஜமெளலி. அவருக்கு இணையாக, திரைத்துறை ஆர்வலர்களால் கூகுளிடப்படுபவர் ஸ்ரீனிவாஸ் மோகன். இவரே 'பாகுபலி' படத்தின் விஷுவல் எஃபக்ட் கலை நிபுணர். 'தி இந்து' ஆன்லைன் செய்தியாளரும், வீடியோ பிரிவை நிர்வகிப்பவருமான கார்த்திக் கிருஷ்ணாவுக்கு ஸ்ரீனிவாஸ் மோகன் நீண்ட பேட்டி அளித்துள்ளார்.| வீடியோ இணைப்பு கீழே |
இந்த வீடியோ நேர்காணலில் விஷுவல் எஃபக்ட் கலை நிபுணர் ஸ்ரீனிவாஸ் மோகன் தன் துறை சார்ந்து, பாகுபலி குறித்தும் பேசியதில் இருந்து முக்கிய 10 அம்சங்கள் இவை:
* இயக்குநர் ஷங்கருடன் முதலில் பணியாற்றியது, 'பாய்ஸ்' திரைப்படத்தில் 'மாரோ மாரோ' என்ற ஒரே ஒரு பாடலுக்காக. அதன்பின் எந்திரன், ஐ படங்களில் பங்காற்றினேன். எனக்கு பிரேக் கிடைத்ததில் இயக்குநர் ஷங்கருக்கு மிக முக்கியப் பங்கு உண்டு
* இந்தியாவில் கிராபிக்ஸ் துறையின் குழந்தைப் பருவம்தான் இது. வளர இன்னும் சில வருடங்கள் ஆகும். மேற்கத்திய நாடுகளைப் போல பல்கலைக்கழகங்களின் துணை இருந்தால் கிராபிக்ஸில் இன்னும் பல புதிய தொழில்நுட்பங்களை எடுத்து வரலாம். ஹாலிவுட்டோடு நம்மூர் கிராபிக்ஸை ஒப்பிடுவது தவறு. நம்மைவிட 100 மடங்கு பட்ஜெட் அவர்களிடம் உள்ளது. நமது பட்ஜெட்டில், என்ன எப்படி செய்யவேண்டும் என்பதை நாம் புத்திசாலித்தனமாக திட்டமிடவேண்டும்.
* 'மாற்றான்' படத்துக்காக ஒரு வாரத்துக்கு 12,000 டாலர் என்ற கேமராவை வாடகைக்கு எடுக்காமல், நாங்களே இங்கு ஒரு ஹெல்மெட், மற்றும் மொபைலை இணைத்து வெறும் ரூ.2,000 ரூபாயில் ஒரு கேமராவை ஏற்பாடு செய்து கொண்டோம். செலவுமிக்க தொழில்நுட்பத்தை ஐடியாவால் வெல்லும் உத்திக்கு இது உதாரணம்.
* நமக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவான பின்பே கிராபிக்ஸ் வேலைகளைத் துவங்க வேண்டும். இது பட்ஜெட்டை மிச்சப்படுத்தும். இரண்டரை வருடங்களுக்கு முன்பு பாகுபலியின் கதையை ராஜமௌலி சொன்னார். அதற்கு முன்னரே படத்துக்கான வேலைகளை அவர் துவங்கியிருந்தார். ராஜமௌலி பாகுபலி கதையை விவரித்த போது, இயக்குநர் ஷங்கர் 'எந்திரன்' கதையை விவரித்த அதே உணர்வை எனக்குத் தந்தது ஆச்சரியமாக இருந்தது.
* தயாரிப்பு வடிவமைப்பின் ஓர் அங்கமாக ஒவ்வொரு முக்கியப் கதாபாத்திரத்துக்கும், அந்த பாத்திரத்தைப் பற்றிய அனைத்து தகவல்களும் அடங்கிய ஒரு களஞ்சியத்தை பாகுபலிக்காக உருவாக்கினோம். அருவி, போர்க்காட்சிகள்தான் மிகுந்த சவால்களாக இருந்தன.
* பாகுபலியைப் பொறுத்தவரையில், பட்ஜெட்டும் கால அவகாசமும் போதுமானதாக இல்லை என்ற காரணத்தால், இயக்குநரின் கற்பனையில் 60 முதல் 70 சதவீதத்தை மட்டுமே எங்களால் திரையில் கொண்டு வர முடிந்தது.
* பின்னணி இசை, சிறப்பு சப்தங்கள் இல்லாமல் பார்த்தால் பாகுபலி படத்தின் கிராபிக்ஸில் நிறைய தவறுகளை நீங்கள் கண்டுபிடிக்கலாம். பின்னணி இசையும், உணர்வுபூர்வ காட்சியமைப்புகளும் படத்தின் தரத்தை மேம்படுத்தி, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து, சிறு சிறு தவறுகளை மறைத்தன.
* பாகுபலியில் மொத்த போர்க்களக் காட்சியுமே 300x300 அடி நீள, அகலம் கொண்ட பெரிய பச்சைத் திரைக்கு முன் தான் படமாக்கப்பட்டது. போர்க்காட்சிகளில் கேமராவுக்கு முன்னால் 25 அடி வரை இருப்பது மட்டுமே நிஜம். 25 அடியைத் தாண்டி இருக்கும் அனைத்தும் கிராபிக்ஸே.
* பாகுபலியை பொருத்தவரை, கிராபிக்ஸ்சில் நாம் உச்சத்தைத் தொடவில்லை என்றே சொல்ல முடியும். ஏனென்றால், நினைத்ததில் வெறும் 60 சதவீதமே திரையில் வந்தது. இன்னும் சிறிது கால அவகாசம் இருந்தால் பாகுபலியில் மேலும் 30 - 40 ஷாட்களை மேம்படச் செய்திருப்போம்.
* மக்கள் ஹாலிவுட் படத்துக்கும், இந்தியப் படத்துக்கும் ரூ.120 தான் டிக்கெட்டுக்காக செலவழிக்கின்றனர். எனவே அவர்கள் இரண்டு படங்களிலும் ஒரே மாதிரியான கிராபிக்ஸ் தரத்தைதான் எதிர்பார்ப்பார்கள். ஆனால், ஹாலிவுட்டோடு ஒப்பிட்டால் பட்ஜெட் மட்டுமே நமக்கு ஒரே கட்டுப்பாடு. கற்பனை மற்றும் புதிய சிந்தனைகளில் அவர்களை விட நாம் நிச்சயமாக மேம்பட்டு இருக்கிறோம். விஷுவல் எஃபக்டை பொருத்தவரை, நாம் ஹாலிவுட் தரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் எனலாம்.
வீடியோ வடிவில்:
</p>