இந்திய ஜனநாயகத்தின் அத்தனைக் கதவுகளும் இழுத்து மூடப்பட்ட காலம் அது. நெருக்கடி நிலைப் பிரகடனத்தை காங்கிரஸ் அல்லாத அத்தனை பேரும் எதிர்த்தனர் என்பதுதான் பொதுவான நம்பிக்கை. ஆனால், வரலாறு அதை மறுக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு அப்பாலும் பலர் நெருக்கடி நிலையை வெளிப்படையாக ஆதரித்தனர். அதற்கு அவர்கள் முன்வைத்த காரணங்களும் விளக்கங்களும் விநோதமானவை; அதிர்ச்சி தருபவை.
வினோபா பாவே
காந்திய வழியை உயிர் மூச்சாகப் பின்பற்றி சர்வோதயா இயக்கத்தை முன்னெடுத்தவர் வினோபா பாவே. இந்தியாவின் கிராமங்கள்தோறும் நடைப் பயணமாகவே சென்று 42 லட்சம் ஏக்கர் நிலத்தை நிலவுடைமையா ளர்களிடமிருந்து பெற்று ஏழை, எளிய மக்களிடம் ஒப்படைத்தவர். அத்தகைய வினோபா, நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டபோது அரசு பிறப்பிக்கும் சட்டத்தைப் பின்பற்றுவது மக்களின் கடமை என்றார். மக்கள் தங்கள் வேலையைக் காலதாமதமின்றி, சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு ஒழுங்காகச் செய்வதற்கு இந்தச் சட்டம் வழிகோலுகிறது என்றார். இது ஒழுக்கத்துக்கான காலகட்டம் என்றும் பெயர் சூட்டினார். புலி யாரையாவது சும்மா விடுமா? ஒருநாள் வினோபாவின் ஆசிரமக் கதவுகளும் சோதனை என்ற பெயரில் தட்டப்பட்டன. ‘சர்க்காரின் துறவி’க்கு நெருக்கடி நிலை என்றால் என்ன என்பது அந்தத் தருணத்தில்தான் தெரியவந்தது!
அன்னை தெரசா
அன்பு மற்றும் சேவையின் மூலம் உலகை வென்ற அன்னை தெரசா அராஜகத்தை, அடக்குமுறையை எப்படி ஏற்க முடியும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது அவர் இவ்வாறு கூறினார். “நெருக்கடி நிலையில்தான் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. தொழிற்சாலைகளில் எந்த வேலை நிறுத்தமும் நடக்கவில்லை. அலுவலகங்களில் ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு வேலைக்கு வருவது கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” என்றார் அன்னை!
ஸ்ரீபாத் அம்ரித் டாங்கே
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை ‘இந்திரா கம்யூனிஸ்ட் கட்சி’ என அழைக்கும் அளவுக்கு நெருக்கடி நிலைக்குத் தீவிரமாக ஆதரவு தெரிவித்தவர் அக்கட்சியின் ஸ்தாபக உறுப்பினரான பாத் அம்ரித் டாங்கே. இந்தியத் தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடியும் சுதந்திரப் போராட்ட வீரருமான டாங்கே, வலதுசாரிகளை முறியடிக்கும் விதமாக இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைச் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு தந்தார். தோழர்கள் எதைச் செய்தாலும் அதில் ஒரு சிந்தாந்தப் பின்னணி இருக்கும் பாருங்கள்!
எம்ஜிஆர்
கருணாநிதி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர இந்திரா காந்தியுடன் நெருக்கத்தை உண்டாக்கிக்கொள்ள இந்தச் சூழலை எம்ஜிஆர் கச்சிதமாகப் பயன் படுத்திக்கொண்டார். டெல்லிக்கு நேரடியாகச் சென்று இந்திரா காந்தியைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு முன் ‘அனைத்திந்திய’எனும் வார்த்தை சேர்க்கப்பட்டது இந்தக் காலகட்டத்தில்தான்.
பால் தாக்கரே
காங்கிரஸ் கட்சிக்கு நேர் எதிரான தரப்பைச் சேர்ந்தவர் பால் தாக்கரே என்பதால், அவர் நெருக்கடி நிலையை வன்மையாகக் கண்டித் திருப்பார் எனப் பலர் நினைக்கக் கூடும். ஆனால், அவர் என்ன செய்தார் தெரியுமா? இந்திரா காந்தியின் மகனான சஞ்சய் காந்திக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் நெருக்கடி நிலைப் பிரகடனத்தை முழு மனதுடன் வரவேற்பதாகத் தெரிவித்தார்!
குஷ்வந்த் சிங்
பஞ்சாபைச் சேர்ந்த புகழ்பெற்ற பத்திரிகையாளர், முதுபெரும் நாவலாசிரியர் மற்றும் நையாண்டி எழுத்துகளால் அனைவரையும் கவர்ந்தவர் குஷ்வந்த் சிங். இவர் வெளிப் படையாக நெருக்கடி நிலை ஆதரவாளர். வினோபா பாவே முன்வைத்த அதே காரணங் களுக்காகத் தானும் நெருக்கடி நிலையை ஆதரிப்பதாகத் தெரிவித்தார் குஷ்வந்த் சிங்!
எம்.எஃப்.ஹுசைன்
பின்னாளில் இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் இல்லை என்று சொல்லி நாட்டைவிட்டு வெளியேறி உலகப் புகழ்பெற்ற இந்த ஓவியர், நெருக்கடி நிலையின் ஆதரவாளர். புலி மேல் அமர்ந்து தீய சக்திகளை அழிக்க சீறிப்பாயும் துர்கா தேவியைப் போல அக்காலகட்டத்தில் இந்திரா காந்தியை வரைந்தார் எம்.எஃப் ஹுசைன்.
தொடர்புக்கு: susithra.m@thehindutamil.co.in