புவியீர்ப்பு அணை கட்டும் தொழில்நுட்பத்தை 18-ம் நூற்றாண்டிலேயே முழுமையாக அறிந்திருந்த பொறியாளர்களில் உலக அளவில் பென்னிகுவிக் மிகச்சிறந்தவர் என்பதை முல்லை பெரியாறு அணையை கட்டியதன் மூலம் நிரூபித்தார். பலரால், பலமுறை கைவிடப்பட்ட இந்த அணை திட்டத்தை சவாலாக எடுத்து சாதித்துக் காட்டினார். மிக சிக்கலான காலகட்டத்தில், நெருக்கடியான இடத்தில், மழை, வெள்ளம் என இயற்கை இன்னல்களுக்கு மத்தியில் முல்லை பெரியாறு அணையை வெற்றிகரமாக கட்டி முடித்தார். இந்த அணையின் மூலம் தென்மாவட்டங்களில் விவசாயம், குடிநீர் என அடிப்படைத் தேவைகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த பொருளாதார நிலையையே மேம்படுத்தி இப்பகுதி மக்களின் இதயத்தில் வாழும் தெய்வமாகத் திகழ்கிறார் பென்னிகுவிக்.
பென்னிகுவிக் ராணுவ குடும்பத்திலிருந்து வந்தவர். புனேயில் இந்திய ராணுவ அதிகாரியாகப் பணியாற்றிய ஜான் பென்னிகுவிக்- சாரா தம்பதிக்கு 1841 ஜனவரி 15-ம் தேதி மகனாகப் பிறந்தார். தனது 8-வது வயதில் தந்தையை இழந்தார். தாயாரின் அரவணைப்பில் வளர்ந்த பென்னிகுவிக் சிறு வயதிலேயே சமூக சிந்தனையுடன் காணப்பட்டார். லண்டனில் ஷெல்டன் காம் நகர பள்ளியில் தனது பள்ளி வாழ்க்கையைத் தொடங்கி அடிஸ்கோம்ப் ராணுவ அகாடமியில் பொறியியல் பயின்று பட்டம் பெற்றார்.
லெப்டினென்ட்டாக பொறுப்பேற்பு
பின்னர் தனது தந்தையைப்போல் ராணுவத்தில் பணியாற்ற ஆசைப்பட்டு 1858 டிசம்பர் 10-ம் தேதி பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் லெப்டினென்ட்டாக பொறுப்பேற்றார். 1874 அக்டோபர் 13-ம் தேதி கேப்டனாக நியமிக்கப்பட்டார். பின்னர் இரு ஆண்டுகளிலேயே 1876 டிசம்பர் 8-ம் தேதி மேஜர் ஆனார். 1877-ல் சேலம் மாவட்ட பொறியாளராக பதவி உயர்வு பெற்றார். சென்னை மாகாணம், மைசூர் அரசு என பல்வேறு இடங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில் இவரது தொழில் திறமை காரணமாக அடுத்தடுத்து பதவி உயர்வுகள் இவரைத் தேடி வந்தன. 1886 மார்ச் 4-ம் தேதி கர்னலாக பொறுப்பேற்றார்.
திருமண வாழ்க்கை
கிரேஸ் ஜார்ஜினா ஜாம்பியர் என்ற பெண்ணை 1879-ல் பென்னிகுவிக் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், 5 மகள் களும் பிறந்தனர். மகனுக்கு பால் பென்னிகுவிக் என்று பெயர் சூட்டினார். பால் பென்னிகுவிக் பிற்காலத்தில் இங்கிலாந்து நாட்டின் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார். 1962-ம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
குடும்ப வாழ்க்கை ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் பெரியாறு அணை கட்டும் திட்ட முயற்சியில் இரவு, பகலாக பென்னிகுவிக் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
இதற்காக 1887-ல் பெரியாறு அணை கட்டுமானம் குறித்து ஒரு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து சென்னை மாகாண அரசுக்கு அனுப்பி வைத்தார். இரண்டு மலைகளுக்கிடையில் வழிந்தோடி செல்லும் நதிநீரை தடுத்து நிறுத்துவது, இதனால் தேங்கும் நீரை அணையின் மறுமுனையில் அமைக்கப்படும் குகை வழியாக தமிழகத்துக்கு கொண்டு செல்வது என்ற திட்டத்தை தொழில்நுட்ப ரீதியாக வெற்றிகரமாக எப்படி செயல்படுத்த முடியும் என்பதை திட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
அரசின் பாராட்டு
பொறியியல் வல்லுநர்களின் கட்டுமானத்தில் உலக அளவில் இது சிறந்ததாகவும் வியக்க வைக்கும் திட்டமாகவும் இருந்தது. இந்த அறிக்கையைப் பார்த்து வியந்த சென்னை மாகாண அரசு அதை உடனே ஏற்றுக்கொண்டதுடன் பென்னிகுவிக்கை வெகுவாக பாராட்டியது.
இதற்கிடையில் 1886-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசுக்கும் திருவிதாங்கூர் அரசுக்கும் அணை தொடர்பாக 999 ஆண்டுகள் ஒப்பந்தம் கையெழுத் திடப்பட்டது. இதையடுத்து பென்னிகுவிக்கை 1887 மார்ச் 24-ம் தேதி பெரியாறு அணை கட்டும் திட்டத்துக்கு தலைமைப் பொறியாளராக பிரிட்டிஷ் அரசு நியமித்தது. பிரிட்டிஷ் அரசு தன்மீது வைத்திருந்த நம்பிக்கையை நிரூபிக்கும் வகையில் பிரம்மாண்ட அணையின் கட்டுமானப் பணியை தொடங்கினார்.
முல்லை மலரும்...