நாம் செய்யக்கூடியதெல்லாம் கிடைக்கும் ஆற்றலை வீணாக்காமல் சேமிக்கப் பழகுவதுதான்.
சூரியனிலிருந்து விழும் ஒளிக்கதிர்களை இரண்டு நிமிடங்களுக்கு நம்மால் பிடித்து, சேமித்துப் பயன்படுத்த முடியும் என்றால், நம்முடைய கார்களை ஓட்டலாம், வீடுகளில் விளக்குகளை எரிக்கலாம், குளிர்காலத்தில் வீடுகளுக்கு வெப்பமேற்றலாம். இவ்வாறே ஓராண்டு முழுக்க நாம் சூரிய ஒளி சக்தியை மின்சக்தியாக மாற்றிப் பயன்படுத்திக்கொள்ளலாம். சுருக்கமாகச் சொல்வதென்றால், மின்சக்திப் பற்றாக்குறையால் நாம் அவதிப்படத்தேவையில்லை. கிடைக்கும் ஆற்றலை நமக்கேற்ற மின்ஆற்றலாக மாற்றும் சரியான தொழில்நுட்பம் கிடைக்காமல்தான் தடுமாறிக்கொண்டிருக்கிறோம். ஆற்றலை உட்கவர்ந்து, நுகர்வோருக்குத் தேவைப்படும் நேரத்தில், தேவைப்படும் இடத்தில் அளிக்க முடியாமல் இருக்கிறோம். ஆகவே, இப்போதைக்கு நாம் செய்யக்கூடியதெல்லாம் கிடைக்கும் ஆற்றலை வீணாக்காமல் சேமிக்கப் பழகுவதுதான்.
உலக நாடுகளின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு மூலகாரணமே எரிசக்தியைப் பயன்படுத்துவதில்தான் இருக்கிறது. எண்ணெய் வள நாடுகளின் சந்தை உத்தி, பசுமைக் குடில் இல்லங்கள் வெளியேற்றும் வாயுக்கள், மின்பற்றாக்குறையால் தொழில்துறைக்கு ஏற்படும் உற்பத்தி இழப்பு, உற்பத்தித்திறன் பாதிப்பு என்று எல்லாமே எரிசக்தியை அல்லது மின்னாற்றலை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே அமைகிறது.
உலகின் பெரும்பாலான ஏழை நாடுகளில் ஆற்றல் பற்றாக்குறைதான் பொருளாதார வளர்ச்சிக் குறைவுக்குக் காரணமாக இருக்கிறது. உலகில் 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு மின்வசதி இல்லை. 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு நவீன சமையல் சாதனங்கள் இல்லை. இவர்களில் 95%-க்கும் அதிகமானவர்கள் சகாரா பாலைவனத்துக்கும் தெற்கில் உள்ள நாடுகளிலும் ஆசியக் கண்டத்திலும் வாழ்கின்றனர். அவர்களில் 84% கிராமங்களில் வாழ்கின்றனர்.
ஒளியற்ற வாழ்க்கை
நைஜீரியாவில் சமீபத்தில் நடந்த அதிபர் பதவிக்கான தேர்தலின்போது, “உங்களுடைய வேட்பாளரிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” என்று ஒரு பெண்ணிடம் கேட்டபோது, “வெளிச்சத்தை” என்று பதில் அளித்தார். மின்சாரம் என்ற அடிப்படை சாதனம் அவருக்குக் கிடைத்தால், அவரால் வீட்டு வேலைகளை எளிதில் செய்ய முடியும், குழந்தைகளைப் படிக்கச் சொல்ல முடியும்.
நிச்சயம் கிடைக்கும் என்று நம்ப முடியாததும், கிடைக்காததுமான மின்சாரம் போன்ற ஆற்றல்தான் ஆப்பிரிக்கக் கண்டத்திலும் இந்தியத் துணைக் கண்டத்திலும், ஆசியாவின் சில பகுதிகளிலும் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. மின்சாரம் உள்ளிட்ட ஆற்றல் கிடைப்பதை மேம்படுத்தினாலே உலகின் பல ஏழை நாடுகள் 10 ஆண்டு வளர்ச்சியை ஒரே ஆண்டில் பெற்றுவிடும் என்று சர்வதேச ஆற்றல் முகமை தெரிவிக்கிறது.
எரிசக்தி நெருக்கடி ஏன்?
சரியான தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்படாததால் தான் எரிசக்தி உற்பத்தியிலும் சேமிப்பிலும் விநியோகத் திலும் பிரச்சினைகளை நாம் எதிர்கொள்கிறோம். அதுதான் இப்போதைய எரிசக்தி நெருக்கடிக்கு முக்கியக் காரணம். நாம் பயன்படுத்தும் எரிசக்தி தயாரிக்கப்படுவது தொடங்கி இறுதியாக நுகர்ச்சி அடைவது வரை உள்ள தொலைவில் - நேரத்தில் கிட்டத்தட்ட 60% அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது. அதுதான் எரிசக்திப் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. இதை அமெரிக்க அரசின் லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வுக்கூடம் தெரிவிக்கிறது.
புதைபடிம எரிபொருட்களை ஆற்றலாகப் பயன்படுத்துவதில் உள்ள திறமைக் குறைவு, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்லும்போது ஏற்படும் இழப்பு, நுகர்வோர் அவர்களுடைய பங்குக்கு வீணடிப்பது, மின்தடை ஏற்பட்டால் வழங்குவதற்காகக் கையிருப்பில் வைத்திருப்பது போன்றவற்றால் இழப்பு கூடுகிறது.
ஆற்றலைத் தயாரிக்கும்போதும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டுசெல்லும்போதும் ஏற்படும் இழப்புகளைத் தடுக்கவும், மாசுபடுவதைக் குறைக்கவும், ஆற்றலைப் பெறும்வாய்ப்பை அதிகப்படுத்தவும் புதுவகைக் கண்டுபிடிப்புகள் அவசியப்படுகின்றன. கம்பியில்லா தகவல் தொடர்பைப் போல, இயந்திரங்களிலிருந்து இயந்திரங்களுக்கான தகவல்தொடர்பு வசதி, சிறப்பான அளத்தல் கருவிகள், மேம்பட்ட உற்பத்தி மேலாண்மை போன்றவை அவசியப்படுகின்றன.
சூரிய ஒளி, காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள், வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளிலும் வளர்ந்த நாடுகளிலும் பங்களிப்புக்குத் தயாராகிவருகின்றன. உலகின் பல நாடுகளில் சூரிய வெளிச்சம் எப்போதும் கிடைப்பதில்லை, காற்று எப்போதும் வீசுவதில்லை. எனவே, இவ்விரு மூலங்களிலிருந்து கிடைக்கும் ஆற்றல் விட்டுவிட்டும் நிலையற்றும் இருக்கிறது. புதுப்பிக்கவல்ல ஆற்றல்களிலிருந்து மின்சாரத்தைத் தயாரித்து அதைப் பாதுகாப்பாகச் சேமித்துவைத்து, தேவைப்படும் வேளைகளில் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை நாம் கண்டுபிடிக்கும்வரை பிரச்சினை நீடிக்கும்.
மின்சாரத்தைச் சேமித்துவைக்க நல்ல வழிகளைக் கண்டறிவதன் மூலம் மின்சாரம் வீணாவதை 18% குறைத்துவிடலாம், மின்சாரப் பயன்பாட்டை 11% அதிகப்படுத்தலாம் என்று அமெரிக்காவின் மேற்குப் பகுதி மின்சார ஒருங்கிணைப்பு மன்றம் நடத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
மின்ஆற்றலைச் சேமித்து வைப்பதற்கு ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்ப வழிமுறை ஒன்று இருக்கிறது. புனல் மின் நிலையங்களில் தயாரிக்கப்படும் மின்சாரம் உபரியாக இருந்தால், அணையிலிருந்து கீழே விழும் தண்ணீரை மீண்டும் மேலேற்றி நீர்த் தேக்கத்துக்கே அனுப்பி வைக்கலாம். இதனால் மின் தேவை அதிகமாக இருக்கும்போது தண்ணீரைத் திறந்துவிட்டு டர்பைன்களைச் சுழல வைக்கலாம். ஆனால், இதை மலைப் பகுதிகளில் மட்டுமே செயல்படுத்த முடியும். ஆனால், பெரிய அளவில் இதைச் செய்ய முடியாது. மின்சாரத்தைச் சேமிக்கப் பயன்படக்கூடிய சேமக்கலங்களைச் சீரமைத்து மின்னாற்றலைப் பல மடங்கு பெருக்கலாம்.
மின்சாரத்தைத் தயாரித்தால் மட்டும் போதாது, அதைத் திறமையாகவும் வீணாக்காமலும் பயன்படுத்த வேண்டும். நவீன தொழில்நுட்பங்களை அதற்குப் பயன்படுத்துவதே பிரச்சினைக்குத் தீர்வாக அமையும். உலகம் முழுவதற்கும் தேவைப்படும் மின்சாரத்தை நிலையாகவும் திறமையாகவும் கட்டுப்படியாகக்கூடிய விலையிலும் எளிதில் எவராலும் பெற முடிந்த வகையிலும் தயாரிப்பதற்கும் வழங்குவதற்கும் இன்னும் சில காலம் பிடிக்கும். ஆனால், இந்தத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துவருகின்றன. நம்முடைய பார்வையை அங்கேயே தொடர்ந்து பதிப்பதுதான் நம் முன் உள்ள சவால்!
© ‘தி கார்டியன்’, சுருக்கமாகத் தமிழில்: சாரி