சிறப்புக் கட்டுரைகள்

முதலாளிகளின் விளையாட்டரங்கம்

தீரஜ் நய்யார்

முக்கியமான பல கடமைகளை நிறைவேற்ற வேண்டிய பிரதம மந்திரியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தைக் கொஞ்சம் கவனியுங்கள் என்று கேட்டுக்கொள்வது அற்பமாகக்கூடத் தெரியலாம். ஆளும் தரப்பினருக்குக் கையூட்டு கொடுத்து, அரசின் சலுகைகளைப் பெறும் சலுகைசார் முதலாளித்துவ முறையை ஒழிக்க வேண்டும் என்பதில் அவருக்குத் தீவிர அக்கறை இருக்குமானால், அவர் முதலில் கை வைக்க வேண்டியது ‘இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்’ (பி.சி.சி.ஐ.) என்ற அமைப்பின் மீதுதான்.

சக்திவாய்ந்த அரசியல் தலைவர்களும் செல்வாக்கு மிக்கத் தொழிலதிபர்களும் இணைந்து செயல்படும் இடம் நம் கிரிக்கெட் வாரியம். கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது மட்டுமல்லாமல், எந்தவித ஒழுங்கு விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல், எந்தச் செயலுக்கும் பொறுப்பேற்க வேண்டிய அவசியமும் இல்லாமல் கோடிக் கணக்கில் பணம் ஈட்டித்தரும் விதத்தில் கிரிக்கெட் சங்கங்களை நிர்வகிக்கின்றனர். இந்தியாவுக்கு வெளியே பதுங்கி வாழும் லலித் மோடி அவர்களில் ஒருவர்; வாயாடி, செய்திகளை வாரி வழங்குகிறவர், கிரிக்கெட் வாரியத்தில் புரையோடியிருக்கும் முறைகேடுகளுக்குக் கண்கண்ட உதாரணம்!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.), இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) என்ற அதன் சார்பு அமைப்பும் தங்களுடைய எந்தச் செயலுக்கும் பொறுப்பேற்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கின்றன. அரசியல் தலைவர்கள் மக்களுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள், அன்றாட அளவில் இல்லையென்றாலும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையாவது (தேர்தலில்) மக்களைச் சந்தித்து அவர்களுடைய ஆதரவைப் பெற்றாக வேண்டும். பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் எல்லா நிறுவனங்களும் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தங்களுடைய நிறுவனங்களின் விற்றுமுதல், லாபம், நஷ்டம், விற்பனையில் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்று எல்லாவற்றையும் பங்கு முதலீட்டாளர்களுக்குத் தெரிவித்தாக வேண்டும். தவறு நடந்தால் பங்குச் சந்தையிலேயே அவர்களுக்குத் தண்டனை கிடைத்துவிடும். அதே அரசியல் தலைவர்களும் தொழிலதிபர்களும் கிரிக்கெட் அமைப்புகளில் கைகோக்கும்போது ஒரு துளிகூட யாருக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் அல்ல. எனவேதான் அவர்கள் அங்கே ஆர்வமாகக் குவிகிறார்கள்.

இந்திய கிரிக்கெட் வாரியத்திலும், ஐ.பி.எல்லிலும் ‘லலித் மோடி ஒருவர் மட்டும்தான்’ அயோக்கியர் என்று நினைப்பவர்கள் யாராவது இருக்க முடியுமா? ஐ.பி.எல்லை உருவாக்கியது லலித் மோடியாக இருக்கலாம். ஆனால், அதனுடைய நடவடிக்கைகளால் கிடைத்த லாபத்தை அனைவருமே பங்கு போட்டுக்கொண்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.

2008-ல் மோடி எப்படி ஆரம்பித்தாரோ அப்படியேதான் ஐ.பி.எல்லை இப்போதும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் அதாவது, எல்லாவற்றையும் மூடுமந்திரமாக! ஐ.பி.எல்லைத் தொடங்கியதும் நடத்தியதும் மோடி மட்டும்தான் என்றால், அவர் லண்டனில் தலைமறைவானவுடனேயே அதுவும் உயிரை விட்டிருக்க வேண்டும்.

தன்னுடன் சேர்ந்து செயல்பட்டவர்கள்குறித்து நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க லலித் மோடி முன்வந்தால் என்ன நடக்கும்? எத்தனை அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரையுலகப் பிரபலங்கள் கோடிக் கணக்கான ரசிகர்களின் நம்பிக்கைக்குத் துரோகம் செய்ததுகுறித்து அம்பலப்பட்டுப்போவார்கள்?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் என். சீனிவாசன் விவகாரத்தை எடுத்துக்கொள்வோம். தான் வகித்த பதவிக்கு முரணாக, சொந்த நலனுக்கேற்ப அவர் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. சீனிவாசன் செல்வாக்கு மிக்கவர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அரசியல்ரீதியாகச் செல்வாக்குள்ள சரத் பவார், அருண் ஜேட்லி, அமித் ஷா போன்றோர் சக நிர்வாகிகளாக இருந்தும்கூட சீனிவாசன் ஏன் தவறுக்காகத் தண்டிக்கப்படவில்லை? விடை மிகவும் எளிதானது. சீனிவாசனைப் பிடிக்காவிட்டாலும்கூட, யாருமே மவுனத்தைக் கலைத்து லலித் மோடியைப் போலத் தனிமைப்படுவதை விரும்பவேயில்லை. அங்குமிங்கும் சிறு மாறுதல்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளன, தொழிலதிபர் ஜக்மோகன் டால்மியா பி.சி.சி.ஐ. தலைவராக மீண்டும் பதவியேற்றிருப்பதைப் போல.

அரசியல்வாதிகளுக்கும் தொழிலதிபர்களுக்குமான கூட்டு என்பது உண்மையான பொருளாதாரத்தில் அரசியல் களத்தில் ஊழல்களுக்குத்தான் வித்திடுகிறது. கிரிக்கெட் வாரியமும் ஐ.பி.எல்லும் தங்களைத் தாங்களே திருத்திக்கொள்ளாது என்பதால் வெளித் தலையீடு அவசியப்படுகிறது. சாதாரண அரசியல்வாதிகளிலிருந்து வேறுபட்டிருக்கும் நரேந்திர மோடியைத் தவிர, இதைச் செய்வதற்கு ஏற்ற தகுதியானவர்கள் வேறு யார்? இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை அரசே ஏற்று நடத்தினால் பல பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிடும். முதலில் அரசு அதற்காக ஒரு சட்டம் இயற்றிவிட்டு பிறகு அதைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ள வேண்டும். தொழில்முறை நிர்வாகிகள் மூலம் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை நிர்வகிக்க வேண்டும்.

- தீரஜ் நய்யார், பொருளாதார நிபுணர், தமிழில் சுருக்கமாக: சாரி

          
SCROLL FOR NEXT