சிறப்புக் கட்டுரைகள்

போலிகளின் உலகம்

வெ.சந்திரமோகன்

போலிச் சான்றிதழ் உலகமெங்கும் நடக்கும் முறைகேடுகளில் ஒன்றுதான். ஆனால், உலகிலேயே கல்விச் சான்றிதழ் முறைகேடுகள் அதிகம் நடப்பது இந்தியாவில்தான் என்கிறது ஒரு புள்ளிவிவரம். 2011-ல் மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்த ஒரு தகவல் இந்தியாவையே அதிரவைத்தது.

அப்போது கிடைத்த தகவலின்படி, 1,800-க்கும் மேற்பட்டோர் போலிச் சான்றிதழ் மூலம், அரசுப் பணியில் சேர்ந்திருக்கிறார்கள். பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பி.எஸ்.என்.எல். தொடங்கி பாதுகாப்புப் படை வரை இந்த முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் அவர் தெரிவித்த விவரம் இது.

பாதுகாப்பு அமைச்சகம், அணுசக்தித் துறை வரை இந்தப் போலிப் பட்டதாரிகள் பணியில் சேர்ந்திருப்பதாக அந்தப் பட்டியல் தெரிவித்தது. கல்விச் சான்றிதழ்கள் மட்டுமல்லாமல், சாதிச் சான்றிதழைப் போலியாகத் தயாரித்துப் பணியில் சேர்ந்தவர்களும் இதில் அடக்கம்.

சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘நான்’ படத்தில், இறந்தவரின் ப்ளஸ் டூ சான்றிதழ்களை வைத்து ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப் படிப்பில் சேர்வான் நாயகன். நிஜத்தில் இதைவிட நுணுக்கமான ‘தொழில்நுட்ப’த்துடன் பல முறைகேடுகள் அரங்கேறுகின்றன.

2011-ல் நடந்தது இது: பிஹாரின் மகத் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு பெற்ற ஒரு பெண் இறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், அவரது சான்றிதழ்களைப் பணம் கொடுத்து வாங்கினார் மற்றொரு பெண். சான்றிதழை அப்பெண்ணுக்கு விற்றவர் பெங்களூருவின் ‘ஸ்ரீமஞ்சுநாதா எஜுகேஷன் சொசைட்டி’ எனும் கல்வி மையத்தைச் சேர்ந்த லட்சுமி எனும் பெண்.

2013-ல் இதேபோன்ற மோசடியில் ஈடுபட்டதாகக் கைதுசெய்யட்ட சஞ்சய் குமார் என்ற நபர், காவல் நிலையத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் இருக்கும் வீட்டில் வசித்தது பின்னர்தான் தெரியவந்தது. சென்னையில் பல்வேறு பட்டப்படிப்புகளுக்குப் போலிச் சான்றிதழ் வழங்கியதாக, தந்தை - மகன் உட்பட 4 பேர், கடந்த செப்டம்பர் மாதம் கைதுசெய்யப்பட்டார்கள்.

அவர்களிடமிருந்து கணினிகள், பிரின்டர்கள், கல்வித்துறை முத்திரைகள், சான்றிதழ்களில் ஒட்டப்படும் ஹாலோ கிராம் ஸ்டிக்கர்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ஒருவர் பள்ளிக்கல்வி இயக்குநரக அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்தவர். இந்தியாவில் நடைபெறும் போலிச் சான்றிதழ் முறைகேடுகளில் சில எடுத்துக்காட்டுகள் இவை. கல்வித் துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள், அவர்களிடம் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் இந்த முறைகேடுகளுக்கு மூலகாரணமாக இருக்கிறார்கள்.

படிப்புக்கு ஏற்பப் பணம்

பி.ஏ., பி.காம்., தொடங்கி பி.பி.ஏ., எம்.பி.ஏ., ஏன், பி.டெக்., எம்.டெக். வரை விருப்பமான படிப்பைத் தேர்ந்தெடுத்துச் சான்றிதழ் பெற்றுக்கொள்ள முடியும். படிப்பைப் பொறுத்து ‘கட்டண’த்தின் அளவு ஆயிரங்கள் முதல் லட்சங்கள் வரை வேறுபடலாம். தேர்தலில் போட்டியிடுவதற்குக் கல்வித் தகுதி தேவையில்லை. எனினும், தங்கள் தகுதியை மேம்படுத்திக் காட்டிக்கொள்ள விரும்பும் தலைவர்கள், தவறான தகவல்களைத் தந்து சர்ச்சையில் சிக்கிக்கொள்கின்றனர்.

ஆனால், போலிச் சான்றிதழ்களைக் கொடுத்து தங்கள் வாழ்க்கையைக் கட்டமைத்துக்கொள்ள முயற்சி செய்பவர்கள், எப்படியாவது வேலைநடந்தால் சரி என்ற எண்ணம் கொண்டவர்கள். கணிசமான பணம் வாங்கிக்கொண்டு இவர்களுக்கு உதவ இந்தியா முழுவதும் பல சட்டவிரோதக் குழுக்கள், வெவ்வேறு போர்வைகளின் கீழ் செயல்படுகின்றன. கணினி, ஸ்கேனர் உதவியுடன் அதிநவீனமாகச் செயல்படும் பல குழுக்கள், புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு ‘அச்சு அசலான’ போலிச் சான்றிதழ்களைத் தயாரித்து வழங்குகின்றன.

உண்மையான சான்றிதழ்களுக்கும் இவற்றுக்கும் இடையில் வித்தியாசம் காண்பது லேசான காரியம் இல்லை. போலியான பல்கலைக்கழகங்கள், அங்கீகாரம் பெறாத பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெற்று பாதிக்கப்பட்ட மாணவர்களின் பட்டியல் தனி.

முறைகேட்டில் பல்வகை

மதிப்பெண் சான்றிதழில் ஒன்றிரண்டு இலக்கங்களில் மாற்றம் செய்து முறைகேடு செய்தல், முழுவதும் போலியான சான்றிதழ்களைத் தயார் செய்து சமர்ப்பிப்பது என்று இந்த முறைகேட்டில் பல வகை உண்டு. அதேசமயம், போலிச் சான்றிதழ் கொடுத்து கல்லூரிகளில் சேர்பவர்கள், பணிகளில் சேர்பவர்களைக் கண்காணிக்க அமைப்பு இருக்கிறது.

ஒருவர் சமர்ப்பித்திருக்கும் சான்றிதழின் உண்மைத் தன்மையை, சம்பந்தப்பட்ட கல்லூரிகள், அலுவலகங்கள் அரசுத் தேர்வு இயக்ககத்தின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிச் சரிபார்த்துக்கொள்கின்றன. ஆனால், தாங்கள் கண்காணிக்கப்படுகிறோம் என்ற உண்மை பெரும்பாலானோருக்குத் தெரிவதில்லை. அதேசமயம், லட்சக் கணக்கான எண்ணிக்கையில் இருக்கும் சான்றிதழ்களைச் சரிபார்ப்பதற்கு மனித உழைப்பும், கால அளவும் தேவை. இதில் ஏற்படும் தாமத இடைவெளியில் பலர் தப்பிவிடுகிறார்கள்.

ஆனால், இதற்கும் தற்போது தீர்வு வந்திருக்கிறது. பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்கள் தற்போது ஆன்லைன் மூலம் பதிவுசெய்யப்படுகின்றன. எனவே, இம்மாணவர்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை உறுதிசெய்வது சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்குச் சுலபமாகியிருக்கிறது.

அதேபோல், டிஜிட்டல் வடிவத்துக்கு இன்னும் மாற்றப்படாத சான்றிதழ்களையும் டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகள் நடைபெற்றுவருகின்றன. இனியாவது இதுபோன்ற குற்றங்கள் குறையும் என்று எதிர்பார்க்கலாம்!

SCROLL FOR NEXT