குடிநீர் தரும் ஏரிகளை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தூர்வாரப்பட வேண்டும் என்ற முறையில், வீராணம் ஏரியைத் உடனடியாக தூர்வார வேண்டுமென விவசாயிகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து புதிய வீராணம் திட்டத்தின் செயல் இயக்குநராகவும் திட்டப் பணிகளின்போது சென்னை குடிநீர் வாரி யத்தின் நிர்வாக இயக்குநராகவும் இருந்த வி. தங்கவேலு கூறும்போது, ‘குடிநீருக்கு தண்ணீர் எடுக்கும் ஏரிகள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தூர்வாரப்பட வேண் டும். அந்த வகையில் வீராணம் இப்போது தூர்வாரப்பட வேண்டும்’ என்றார்.
வீராணம் விவசாயிகளின் ராயல்டி கோரிக்கை குறித்து கேட்டதற்கு அவர் மேலும் கூறியதாவது:
புதிய வீராணம் திட்டம் தொடங்கிய போது ரூ.116 கோடி செலவில், கீழணையிலிருந்து வீராணத்துக்கு காவிரித் தண்ணீர் கொண்டு வரப்படும் வாய்க் கால் தூர்வாரப்பட்டதுடன் வீராணம் ஏரிக்கரையும் பலப்படுத்தப்பட்டது. சென்னையின் குடிநீர் தேவையில் சுமார் மூன்றில் ஒரு பகுதியை வீராணம் நிறைவு செய்கிறது. ஆனால், ஒரு சில தொழில் நிறுவனங்களைத் தவிர வேறு எங்கும் தண்ணீர் விநியோகம் மீட்டர் வைத்து கணக்கிடப்படுவதில்லை. குடிநீர் வரியும் உயர்த்தப்படவில்லை.
புதிய வீராணம் திட்டத்தை செயல் படுத்தும் பணியில் அதிகாரிகள் உட்பட சுமார் 40 பேர் ஈடுபட்டுள்ளனர். இவர் களுக்கான ஊதியத்தைத் தவிர்த்து, திட்டத்தின் பராமரிப்பு செலவு மட்டும் ஆண்டுக்கு சுமார் ரூ. 35 கோடி. எனவே, வீராணம் தண்ணீரை வைத்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பெரிய அளவில் எந்த வருமானமும் இல்லை என்பதால் ராயல்டி வழங்குவது சாத்தியமில்லை” என்றார்.
பொன்னியின் செல்வனின் தொடக்கம்
சோழர் வம்சத்தில் வந்த சுந்தரசோழ னுக்கு ஆதித்த கரிகாலன், ராஜராஜன் என இரண்டு மகன்கள். சுந்தர சோழனுக்குப் பிறகு ஆதித்த கரிகாலன்தான் பட்டத்துக்கு வரவேண்டும். ஆனால், சுந்தரசோழனின் பெரியப்பா மகன் மதுராந்தக சோழனை அரியணை ஏற்ற முயற்சி நடக்கிறது. அதற்கு ஏதுவாக ஆதித்த கரிகாலன் காஞ்சிக்கும் ராஜராஜன் இலங்கைக்கும் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
இந்தச் சூழலில் குறுநில மன்னர்களின் சதி வலைக்குள் சுந்தரசோழன் சிக்கிக் கொள்கிறார். இதையறிந்து அவரை மீட்பதற்காக தனது நம்பிக்கைக்குரிய நண்பன் வந்தியத்தேவனிடம் தந்தைக்கும் தங்கை குந்தவை நாச்சியாருக்கும் இரண்டு ஓலைகளை கொடுத்து அனுப்புகிறான் ஆதித்த கரிகாலன்.
அவற்றை எடுத்துக் கொண்டு தஞ்சைக்குப் புறப்படும் வந்தியத்தேவன், வீராணம் ஏரிக் கரையில் அதன் எழிலை ரசித்தபடி வருகிறான். அன்று
ஆடிப்பெருக்கு என்பதால், நீர் தளும்பிக் கிடந்த வீராணத்தில் இளம் பெண்கள் கருகமணி வைத்துக் காவிரி தாய்க்கு படையல் வைக்கிறார்கள்.
அவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இளைஞர்கள், ஏரியில் சாகசங்களை நிகழ்த்துகிறார்கள். இத்தனையையும் ரசித்தபடியே தனது புரவியை செலுத்து கிறான் வந்தியத்தேவன். கல்கி தனது பொன்னியின் செல்வன் நாவலை இங்கி ருந்து தான் தொடங்குகிறார்.
ராமானுஜர் உருவகம்
நாதமுனிகள் அவதரித்த பூமி என்பதால் வீரநாராயணபுரத்துக் கும் வைணவத்துக்கும் ஆதிகாலம் தொட்டே பிணைப்பு உண்டு. இதுகுறித்துப் பேசிய வீரநாராயணப் பெருமாள் கோயிலின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் தத்தாத்ரி, ’’நாதமுனிகளின் திருமாளிகை காட்டுமன்னார் கோயில் அருகிலுள்ள குப்பங்குளத்தில் உள்ளது. ’வைணவத்தை செழிக்க வைக்க இந்த பூமியில் ஒரு மகான் தோன்றுவார். அவர் மூலம் இந்த உலகமெங்கும் வைணவம் பரப்பப்படும்’ இது நாதமுனிகளுக்கு நம்மாழ் வார் அருளியது. அவர் சொன்ன அந்த மகான்தான் ஸ்ரீபெரும்புதூரில் தோன்றிய ராமானுஜர்.
நாதமுனிகளுக்குச் சீடராக வீரநாராயண புரம் வந்த ராமானுஜர், அவர் அவதரித்த பூமியின் மண்ணை அள்ளித் தனது உடம் பெல்லாம் பூசிக் கொண்டு பரவசப்பட்டார். அந்தக் காலத்தில் வீராணம் ஏரியில் 74 மதகுகள் இருந்திருக்கிறது. வீராணம் ஏரியை ராமனுஜராக உருவகம் செய்யும் நாதமுனிகள், 74 மதகுகளையும் வைணவ சம்பிரதாயங்களை பரப்பும் 74 சிம்மா சனாதிபதிகளாகவும் விவரிக்கிறார். 74 மதகுகள் வழியாக செல்லும் வீராணம் தண்ணீர் நாட்டைச் செழிக்க வைப்பதுபோல் வைணவத்தையும் தழைக்க வைக்கும் என்பது நாதமுனிகளின் வாக்கு” என்று சொன்னவர், ’’வீராணம் ஏரி பெருமாளின் சொத்து. எனவே, ஏரியிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் ஒரு சிறு பங்கையாவது பெருமாளுக்கு கொடுக்க வேண்டும் என்பது எங்களது விருப்பம்” என்கிறார்.
பெருமாளுக்கு வந்த சீதனம்
“வீரநாராயணபுரம் ஏரி புராணத்திலேயே வருகிறது. வெகுகாலம் குழந்தை இல்லாமல் இருந்த ஜிர்ம்பனார் மகரிஷி தவமாய் தவமிருந்து ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். மரகதவல்லி என்று பெயர் சூட்டப்பட்ட அவளுக்கு திருமணம் முடிக்க நடந்த சுயம்வரத்தில் வீர்நாராயண பெருமாளும் கலந்துகொண்டார். அவரையே மணமகனாக தேர்வு செய்தார் மரகதவல்லி. மகளுக்குத் திருமணச் சீராக வீராணம் ஏரியை பெருமாளுக்குக் கொடுத்தார் மகரிஷி. அந்த மரகதவல்லிதான் மரகதவல்லி தாயாராக வீரநாராயணபெருமாள் கோயிலில் வீற்றிருக்கிறாள்”. வீராணம் ஏரி குறித்து இப்படியும் ஒரு நம்பிக்கை இருக்கிறது.
பயணிப்போம்...