என் பேராசிரிய நண்பருக்குக் கல்லூரி அலுவலகத்துத் தொலைபேசியில் அவசர அழைப்பு வந்தது. அப்போது கைபேசி கிடையாது. அவரது மனைவி அவசரமாக வீட்டுக்கு வரச் சொன்னார். அவரது வயல், தோட்டங்களைக் கவனித்தவரையும், அவரது மகனையும் காவலர் பிடித்துச் சென்றுவிட்டார்களாம். அவசரம் வரவும் என்றார். நண்பர் உடனே சென்றார். நானும் உடன் சென்றேன்.
நண்பருக்கு மிகவும் வேண்டியவர் அந்தக் காவல் நிலைய அதிகாரி. கொஞ்ச நேரப் பேச்சுக்குப் பின் அந்த விவசாயக் கூலியும் அவரது மகனும் விடுவிக்கப்பட்டார்கள். அவர்கள் ஊர் ஒதுக்குப்புறத்தில் இருந்த சுடலை மாடன் கோயிலின் பழைய பொருட்களைச் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்களாம்.
60 வயதுக்கு மேலான அந்த விவசாயி “நான் மாடன் கோயில் ஈட்டி வல்லயத்த தொடச்சுகிட்டிருந்தேன். அடுத்த வாரம் படுக்கை (சிறுவிழா). போலிஸ் வந்துச்சு. என்னைப் பிடிச்சு ஸ்டேஷனல்ல உக்கார வச்சுச்சு.‘நீங்கள்லாம் நச்சலைட்; ஆயுதங்கள் சேகரிக்கிறீக’ன்னுச்சு, என்ன லைட்டோ, எனக்கு நச்சலின்னாதான் தெரியும்” என்றார். அவரது மகன், “போலிஸ் சொல்லிச்சு நாங்க நச்சலைட்டாம்” என்றான்.
அவசர காலப் பரிசு
அவசரகாலச் சட்டம் அமலில் இருந்த காலத்தில் நடந்த நிகழ்ச்சி இது. 1975 இப்படியாகப் பல நிகழ்ச்சிகள்.
அவசர நிலை அமலில் இருந்த 21 மாதங்களில் ஏற்பட்ட பாதிப்பு நாட்டார் நிகழ்த்து கலைகளுக்கும் உண்டு. சாதாரண கரகாட்டப் பெண் கலைஞரைக்கூட அந்தக் கால நிகழ்வு பாதித்திருக்கிறது. நான் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணிக்கரைக் கிராமம் ஒன்றில் நடந்த விழாவுக்குச் சென்றிருந்தபோது, கரகாட்ட நிகழ்ச்சியில் துணைப் பாடகராய்ப் பாடிய ஒருவரைச் சந்தித்தேன். காலை இழுத்து இழுத்து நடந்து வந்தார்.
நான் அவரது ஊனத்தைப் பற்றிக் கேட்டதும் “... எல்லாம் அந்த அம்மா தந்தது; அவசரகாலச் சட்டம் தந்த பரிசு” என்றார். அவர் கப்பல் பாட்டு என்ற நாட்டார் நிகழ்த்துக் கலை நடத்தியவர். ஒருமுறை அவரையும் அவர் குழுவையும் போலீஸார் பிடித்துச் சென்றனராம். பொதுமக்கள் மத்தியில் ஆபாசமாய் பேசியதாகச் சொல்லி அடித்தார்களாம். மூன்று நாட்கள் அடியும் பட்டினியும். கப்பல் பாட்டுக் கலையை இனி வாழ்வு முழுக்க நடத்த மாட்டோம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே வந்தார்களாம். அப்போது ஏற்பட்ட ஊனம் இது.
கரகாட்டத்தின் துணைக் கலைகளான இடையன்- இடைச்சி கதை, கருப்பாயி கூத்து, கல்யாண காமிக், சந்தை காமிக், வண்ணான் - வண்ணாத்தி கூத்து போன்ற கலைகளை நிகழ்த்தியவர்கள் எச்சரிக்கப்பட்டார்கள். அறியாமல் நடத்திய வர்கள் பொதுமக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தப் பட்டார்களாம். இந்தக் கலைஞர்கள் சாதிச் சண்டைகளை உருவாக்கி, அமைதி குலையக் காரணமானவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டார்களாம்.
மதுரை கரகாட்டக்காரி ஒருத்தி என்னிடம் “அப்போதெல்லாம் கரகாட்டக்காரிகள் முழங்காலுக்கு மேல் பகுதி தெரியும்படி குட்டைப் பாவாடை அணியக் கூடாது, கணியான் ஆட்ட அண்ணாவி / கரகாட்டக் கோமாளி எனக் கலைஞர்கள் கலை நிகழ்வின் ஆரம்பத்தில் விழா நடக்கும் ஊர் போலீஸ் அதிகாரியின் பெயரைச் சொல்லி வாழ்த்துவது வழக்கம்” என்றார்.
அவசரகாலச் சட்டத்தை வாபஸ்பெற்ற (21 மார்ச், 1977) பின்பு பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் போன்றோர் அவசர கால நிலையைக் கிண்டலாக விமர்சித்து எழுதியதை - பேசியதைவிடக் கிராமத்துக் கலைஞர்கள் சிலர் கிண்டலாக விமர்சித்தார்கள், பாடினார்கள் என்பது பதிவுசெய்யப்படவில்லை.
சூர்ப்பனகை அராஜகம் ஒழிக!
1978 ஆரம்பத்தில் கன்னியாகுமரி - திருநெல்வேலி மாவட்டம் எல்லைக் கிராமம் ஒன்றில் சூர்ப்பனகை வதை தோல்பாவைக்கூத்து நிகழ்ச்சியைப் பார்க்கப் போயிருந்தேன். சூர்ப்பனகையின் மகன் செண்பக சூரனின் தலையை லட்சுமணன் அதிசய வாளால் வெட்டிவிடுகிறான். சூர்ப்பனகை அந்தத் தலையை எடுத்துக்கொண்டு கொன்றவனைத் தேடிச் செல்கிறாள். வனத்தில் வாழும் முனிவர்களிடம் கேட்கிறாள்; அவர்களை இம்சிக்கிறாள். முனிவர்கள் எல்லோரும் சூர்ப்பனகைக்கு எதிராகக் கோஷமிடுகின்றனர். அவர்களுக்குத் தலைமை தாங்கிய அகத்தியர் “அரக்கி சூர்ப்பனகை அராஜகம் ஒழிக; மூக்கறுபடப் போகிறாய் நீ” என்கிறார். பார்வையாளர்கள் புரிந்துகொண்டார்கள். அகத்தியர் பேசும்போது தமாஷ் பாத்திரம் உச்சிக் குடும்பன் மேடையில் தோன்றி “. . . . இது மட்டுமா அநியாயம்; குழந்தையில்லாதவனுக்கு நரம்பு வெட்டினாங்க (குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை) என்று சொல்லிவிட்டு ஓடுவான்.
இன்னுமா புத்தி வரலே!
மயில் ராவணன் தோல்பாவைக் கூத்திலும் இப்படி ஒரு நிகழ்ச்சி வரும். அனுமனின் பாதுகாப்பிலிருந்து ராமனைத் தன் கோட்டைக்குள் கொண்டுவருகிறான் மயில் ராவணன். அனுமன் எப்படியும் ராமனை விடுவிக்கக் கோட்டைக்குள் வருவான் என்பது மயில் ராவணனுக்குத் தெரியும். அவன் சபையில் “இன்று முதல் கோட்டையில் அவசரகாலச் சட்டம் அமலுக்கு வருகிறது” என்று அறிவித்தான். அப்போது உச்சிக் குடும்பன் தோன்றி, “ஒரு தடவை பட்டது போதாதா? இன்னுமா புத்தி வரல்லே” என்றான். பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தார்கள்.
மத்தியில் புதிய ஆட்சி வந்தபோது சில கிராமியக் கலை நிகழ்ச்சிகளில் பாடப்பட்ட பாடல்களில் பெரும்பாலாவை காவல் துறையினரையும், அரசு அதிகாரிகளையும் விமர்சித்தன.
“ஆலமர நிழலிலே
ஆத்தங்கரை பாலத்துலே
ஆசுவரசமா இருந்த எங்கள
அடிச்சு அடிச்சு பிடிச்சானே
அவசரகாலச் சட்டமாம்
அப்புறந்தான் அறிஞ்சுகிட்டோம்.
ஆலமரத்து அணிலுகூட
எட்டிப் பார்க்க வில்லையே.
**
முடிவளர்த்தா வெட்டுறானே
முணுமுணுத்தா அடிக்கிறானே
வெள்ளைக்காரன் தேவலயே இந்த
சொள்ளக்காரன் அநியாயம்!
- அ.கா. பெருமாள், நாட்டுப்புறவியலாளர்,
‘சடங்கில் கரைந்த கலைகள்', ‘சிவாலய ஓட்டம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: perumalfolk@yahoo.com