சிறப்புக் கட்டுரைகள்

ஒரு நதியின் வாக்குமூலம்: மனிதர்களால் களங்கப்படாத மோயாறு!

டி.எல்.சஞ்சீவி குமார்

பவானியின் துணை ஆறுகளில் மிகப் பெரியது மோயாறு. ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடுகிறது. மனிதர்களால் களங்கப்படாத சொற்ப ஆறுகளில் ஒன்று அது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்குருத்தி பகுதியில் உற்பத்தியாகும் மோயாறு, அங்கிருந்து பைக்காரா அணைக்குச் சென்று கூடலூர் வழியாக கர்நாடகத்தின் பந்திப்பூர் தேசியப் பூங்கா, முதுமலை சரணாலயம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய தெங்குமரஹெடா பள்ளத்தாக்கு, தெப்பக்காடு வழியாக பயணித்து சமவெளியில் பவானி சாகர் அணையை அடைகிறது. சத்தியமங்கலம், பவானி, ஈரோடு வரையிலான கீழ் பவானியின் பாசனத்தில் மோயாற்றின் பங்கு மிக முக்கியமானது.

சவால் நிறைந்த தெங்குமரஹெடா பயணம்

மோயாற்றை முதுமலை, பந்திப்பூரில் பார்ப்பதைவிட தெங்குமரஹெடா வனத்தில் பார்ப்பது கொள்ளை அழகு. ஆனால், அதற்கான பயணம் சவாலானது. சத்தியமங்கலம் –பவானி சாகர் அணையிலிருந்து தெங்குமரஹெடாவுக்கு பயணம் தொடங்குகிறது. பாறைகள் நிறைந்த கரடுமுரடான காட்டுப் பாதை அது. வழியில் ஏராளமான காட்டாறுகள். மழை இல்லை என்பதால் காட்டாறுகள் பொறுமையாகவே ஓடின. பூதிக்குட்டை, இஞ்சிப்பள்ளம், ஒண்டிக்காராஜிமரம் பள்ளம், கல்லாம்பாளையும் பிரிவு,

கருமட்டைராயன் பள்ளம், நித்யகுண்டி

மேடு, எமட்டாம்பள்ளம், மூலப்பட்டி கோம்பை ஆகிய இடங்களில் காட்டாறு களைக் கடந்தோம். மோயாறுக்கு வளம் சேர்க்கும் காட்டாறுகள் இவை.

இங்கே ஒருவரை அறிமுகப்படுத்த வேண்டியிருக்கிறது. ராமசாமி. அவர் உதவி இல்லாமல் இந்தப் பாதையை கடப்பது கடினம். பழங்குடியினரான ராமசாமியின் பூர்வீகம் தெங்குமர ஹெடா. குலத் தொழில் வேட்டை. வேட்டை தடை செய்யப்படாத காலகட்டத்தில் வன விலங்குகளை வேட்டையாடியிருக்கிறார் ராமசாமி. ஒருகட்டத் தில் அது தவறு என்பதை உணர்ந்தவர், கானுயிர் செயல்பாட்டாளராக மாறிவிட்டார்.

ராமசாமியின் உதவியுடன் கானு யிர் துறையில் முனைவர் பட்டம் பெற்ற வர்கள் ஏராளம். அவரது பாரம்பரிய கானுயிர் அறிவு, கூர்மையானது.

எச்சரிக்கை விடுத்த யானைகள்

நாம் சென்றபோது வழியில் பலமுறை பாதையை கடந்து சென்றன யானைகள். ஓர் இடத்தில் யானைக் கூட்டம் ஒன்று நகர மறுத்தது. கூட்டத்திலிருந்த யானை ஒன்று காதுகளை விறைத்து, முன்னங்கால் உதைத்து வனம் அதிர பிளிறியது. உற்றுப் பார்த்தோம். இரண்டு குட்டிகள் இருந்தன. அவற்றைச் சுற்றி வளைத்து, பத்து யானைகள் பாதுகாப்பாக நின்றன. திடீரென்று உயரமான ஒரு யானை, வாகனத்தை நோக்கி வேகமாக ஓடி வந்து, கார் கண்ணாடி அருகே தும்பிக்கையை வீசிச் சென்றது. கண்ணாடி முழுக்க யானையின் எச்சில். ‘குட்டியோட பெரியம்மா அது. தாய் யானை குட்டியை விட்டுட்டு எப்பவுமே வராது” என்றார் ராமசாமி.

|மோயாறு|

| மோயாற்றில் முதலை. படங்கள்: முத்து கார்த்தி |

தொடர்ந்து, வாகனத்தை விட்டு இறங்கினார். சிறு கல்லையும் கண்ணாடி துண்டையும் கொண்டு பாறைகளில் லேசாக உரசினார். மெதுவாக முன்னேறிச் சென்று தொண்டையிலிருந்து வினோதமான ஒலிகளை எழுப்பினார். சிறிது நேரத்தில் பாதையிலிருந்து விலகி வனத்துக்குள் சென்றன யானைகள். ராமசாமி போன்றோர் வன உயிரினங்களுடனே வாழ்பவர்கள்.

ஆனால், வேறு யாரேனும் காட்டுக்குள் செல்லும்போது எந்த விலங்கு எதிர்பட்டாலும் வாகனத்தை விட்டு இறங்கக் கூடாது. சத்தமிடக் கூடாது. குறிப்பாக, குட்டியுடன் யானைகள் இருந்தால் அபாயம் அதிகம். பின்னோக்கிச் சென்றுவிட வேண்டும். இப்படியாகத்தான் தெங்குமரஹெடாவின் மோயாற்றை அடைய முடிந்தது. தெங்குமரஹெடா கிராமத்துக்குச் செல்ல மோயாற்றை பரிசலில்தான் கடக்க வேண்டும். நாம் சென்ற நேரம் பரிசல்காரர் இல்லை.

‘சும்மா வாங்க’என்று ஆற்றின் கரையோரமாக கொஞ்சத் தொலைவு அழைத்துச் சென்றார் ராமசாமி. ஓர் இடத்தில் ஆற்றில் இறங்கச் சொன்னார். அங்கு முழங்கால் அளவு மட்டுமே ஆழம் இருந்தது. மெதுவாக ஆற்றைக் கடந்தோம். மறுகரைக்கு சென்ற பிறகு, ‘அங்கே பாருங்கள்’என்று ஆற்றைக் காட்டினார். நாம் இறங்கிய இடத்திலிருந்து சற்று தொலைவில் ஆற்றில் ஒரு பாறை மீது வெயில் காய்ந்து கொண்டிருந்தது பெரிய முதலை!

தெங்குமரஹெடாவில் நகரத்தின் வாசனை துளியும் இல்லாத அழகான சிறு கிராமம் இருக்கிறது. ஒரு பக்கம் மோயாறு, மறுபக்கம் அடர்ந்த வனம் சூழ்ந்த கிராமம் அது. சுமார் 800 குடும்பங்கள் வசிக்கின்றன. முழுக்க முழுக்க ஆற்றை நம்பி வாழ்கிறார்கள் மக்கள். ஆண்டு முழுவதும் ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள், நிலக்கடலை, குண்டு மல்லி என விவசாயம் செழிப்பாக நடக்கிறது. கால்நடைகள் வளர்க்கிறார்கள். அரசு கூட்டுறவு சங்கம் இவர்களின் விளை பொருட்களை வாங்கிக் கொள்கிறது. ஓர் அரசு உயர்நிலைப் பள்ளியும் ஓர் ஆரம்ப சுகாதார நிலையமும் இருக்கின்றன. பெரும்பான்மையாக இருளர்கள் இருக்கிறார்கள். இங்கெல்லாம் புலிகள், யானைகள் சாதாரணமாக வந்துபோனாலும் அவைகளிடம் இவர்களுக்கு எந்தப் பிணக்கும் இல்லை.

(பாய்வாள் பவானி)

SCROLL FOR NEXT