பவானி சாகர் அணை கட்டப்பட்ட பிறகுதான் கொங்கு மண்டலம் வளம் பெற்றது. குறிப்பாக, ‘கீழ் பவானி பாசன விவசாயி’ என்றாலே கவுரவமாகப் பார்த்தார்கள். வங்கிகள் வலிய வந்து கடன் கொடுத்தன. அதெல்லாம் பழம் பெருமையா கிவிட்டது. இன்றைக்கு விவசாயிகள் பலரும் கடனாளிகளாகிவிட்டார்கள். வேளாண் உற்பத்தி பல மடங்கு குறைந்துவிட்டது.
கடந்த காலங்களில் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ், தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தண்ணீர் தொழில்நுட்ப மையம் ஆகி யவை பவானி ஆற்றில் பல்வேறு ஆய்வுகளை நடத்தியுள்ளன. அந்த ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சிகரமாகவே இருந்தன.
பல மடங்கு குறைந்த வேளாண் உற்பத்தி
பொதுவாக, தண்ணீரில் டிடிஎஸ் அளவு (Total Dissolved Solids) 400 வரை இருந்தால், அது குடிக்கத் தகுதியானது. ஆனால், பவானி ஆற்றில் சில இடங்களில் டிடிஎஸ் அளவு லிட்டருக்கு 1,500-க்கும் அதிகமாக எகிறியது. இது, விவசாயத்துக்குக்கூட தகுதியற்றது. எனவேதான், வேளாண் உற்பத்தி பல மடங்கு குறைந்துவிட்டதை ஆய்வுகள் உறுதி செய்தன.
இதுகுறித்து சத்தியமங்கலம் ‘சுற்றுச் சூழல் நீராதாரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்புத் தலைவர்’ சின்னத்தம்பி மற்றும் இயற்கை விவ சாயி திருமூர்த்தி ஆகியோர் கூறும் போது, “சத்தியமங்கலம் பகுதியில் முன்பெல்லாம் 12 அடி வரை வளர்ந்த கரும்பு, இப்போது மூன்றடி மட்டுமே வளர்கிறது. நான்கரை அடி உயரம் வரை வளர்ந்த மல்லிச் செடி, தற்போது ஒன்றரை அடி மட்டுமே வளர்கிறது. மரத்துக்கு 10 கிலோ வரை காய்த்த வாழைப்பழங்கள், இப்போது 2 கிலோ வரை மட்டுமே காய்க்கிறது. தென்னையில் காய்ப் பிடிப்பதே அபூர் வமாகிவிட்டது. அப்படியே பிடித்தாலும், இளநீர் உப்பாக இருக்கிறது” என்றனர்.
கேள்விக்குறியான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை
உற்பத்தி குறைய தொழிற்சாலை களின் விதிமுறை மீறல்கள்தான் காரணம் என்கிறார்கள் விவசாயிகள்.
இதுகுறித்துப் பேசிய சமூக ஆய்வாளர் கே.நாராயணசாமி, “ஆற்றி லிருந்து 5 கி.மீ. தொலைவுக்குள் புதிய தொழிற்சாலை அமைக்கக் கூடாது. ஆனால், சில தொழிற்சாலைகள், விரிவாக்கம் என்ற பெயரில் கூடுதல் தொழிலகங்களை அமைத்துள்ளன. கடந்த ஆண்டுகூட ஒரு பன்னாட்டு நிறு வனம் விரிவாக்கம் செய்த வகையில் மாதத்துக்கு 15,000 டன் காகிதம் கூடுதலாக உற்பத்தி செய்ய அனுமதி பெற்றுள்ளது. இதன்மூலம் அந்தத் தொழிற்சாலை நாள் ஒன்றுக்கு 500 கியூபிக் மீட்டர் தண்ணீரை ஆற்றிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய குறிப்பிட்ட இனங் களில் ஒரு புதிய தொழிற்சாலை அமைக்கும்போதோ, விரிவாக்கம் அல்லது நவீனமயமாக்கும்போதோ ‘சுற்றுச்சூழல் தாக்கத்தின் மதிப்பீடு அறிவிக்கை 1994’-ன்படி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும். இதற்கு முன், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சம்பந்தப்பட்ட பகுதியில் மக்களிடம் பொது விசாரணை நடத்த வேண்டும். பொது விசாரணைக்காக நாளிதழ்களில் 30 நாட்கள் தொடர்ந்து விளம்பரம் செய்ய வேண்டும்.
பொது விசாரணைக் குழுவில் மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியப் பிரதிநிதி, மாவட்ட ஆட்சியர், மாநில சுற்றுச்சூழல் துறை பிரதிநிதி, உள்ளாட்சித் துறை பிரதிநிதி, மாவட்ட ஆட்சியரால் நிய மிக்கப்படும் மூத்த குடிமக்கள் 3 பேர் ஆகியோர் இடம் பெற வேண்டும். விசாரணைக் குழுவின் திட்ட விவரக் குறிப்பு மற்றும் சுற்றுச்சூழல் தாக்கத்தின் மதிப்பீடு அறிக்கையை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட தொழில் மையம், உள்ளாட்சி நிர்வாக அலுவலகங்கள், மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் மண்டல அலுவலகங்களில் வைக்க வேண்டும். ஆனால், கடந்த காலங்களில் இப்படி எந்த ஒரு நிகழ்வும் இங்கே நடைபெறவில்லை. அரசு அதிகாரிகளின் துணையோடுதான் தொழிற்சாலைகள் விதிமுறைகளை மீறி ஆற்றை நாசம் செய்கின்றன.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக திருப்பூரில் பெரும் சாயப்பட்டறைகள் மூடப்பட்டுவிட்டன. ஆனால், அவை சிறு தொழிற்சாலைகளாக சத்தியமங்கலம் பகுதிக்கு இடம் பெயர்ந்துவிட்டன. சத்தியமங்கலம் நகரம், வரதம்பாளையம், கோட்டுவீராம் பாளையம், தேவாங்கபுரம், தோப்பூர் காலனி ஆகிய இடங்களில் சாயம், டையிங், ப்ளீச்சிங், வார்ப்பிங் பட்ட றைகள் ஆற்றுக்குள் நேரடியாக ரசாயனக் கழிவுகளைக் கலக்கின்றன” என்றார்.
சுகாதாரமான குடிநீர் இல்லை
விதிமுறை மீறல்களால் பாதிக்கப் பட்டது விவசாயம் மட்டுமல்ல, குடிநீர் ஆதாரமும்தான்.சத்தியமங்கலத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 3.86 மில்லியன் லிட்டர் நகராட்சிக் கழிவுகள் 36 இடங்களில் பவானி ஆற்றில் விடப்படுகிறது. அந்த ஆற்றிலிருந்துதான் ரங்கசமுத்திரம், கோம்புப் பள்ளம் திட்டங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 4.3 மில்லியன் லிட்டர் தண்ணீரை குடிநீருக்காக எடுக்கி றார்கள். அதை சுத்திகரித்து விநியோகித் தாலும்கூட நகரின் பாதி பேருக்கு அந்த தண்ணீர் கிடைப்பதில்லை. ஏனெனில், நகரில் இருக்கும் 10,890 குடும்பங்களில் 5,148 குடும்பங்களுக்கு மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு உள்ளது. சுமார் 50% குடும்பத்தினருக்கு குடிநீர் இணைப்பு இல்லை. இவர் கள் ரசாயனக் கழிவுகளால் பாதிக் கப்பட்ட ஆற்று நீரையும், நிலத்தடி நீரையும் சுத்திகரிக்காமல் நேரடியாக பயன்படுத்துகின்றனர். இதனால், இவர்களின் ஆரோக்கியம் கேள்விக்குறி யாகியுள்ளது.
பவானி சாகர் அணையிலிருந்து கொத்தமங்கலம், இக்கரை நெகமம், சத்தியமங்கலம், குமாரபாளையம், சதுமுகை, பெரிய கொடிவேரி, தூக்கநாயக்கம்பாளையம், கோபிச்செட்டிப்பாளையம், பவானி ஆகிய ஊர்களை கடக்கும் பவானி ஆறு, இறுதியாக கூடுதுறையில் காவிரி ஆற்றுடன் இணைகிறது. இடைப்பட்ட இந்தப் பகுதிகளில் கீழ் பவானி மூலம் 2,07,000 ஏக்கர், கொடிவேரி அணை மூலம் 25,000 ஏக்கர், காளிங்கராயன் அணை மூலம் 15,000 ஏக்கர், ஆற்று மின் மோட்டார் திட்டங்கள் மூலம் சுமார் 15,000 ஏக்கர் என மொத்தம் 2,62,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பொதுவாக, தண்ணீரில் டிடிஎஸ் அளவு (Total Dissolved Solids) 400 வரை இருந்தால், அது குடிக்கத் தகுதியானது. ஆனால், பவானி ஆற்றில் சில இடங்களில் டிடிஎஸ் அளவு லிட்டருக்கு 1,500-க்கும் அதிகமாக எகிறியது. இது, விவசாயத்துக்குக்கூட தகுதியற்றது.
(பாய்வாள் பவானி)