கல்வித் துறை காத்திருக்கிறது!
பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு,
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர்.
நம் கல்வித் துறையில் ஏராளமான சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி எல்லாம் பாஜக அரசு யோசிக்காமல் வியாபாரம் மற்றும் மதம் சார்ந்து கல்வியை அணுகுவது நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது. 1966-ம் ஆண்டில் கோத்தாரி குழு பரிந்துரையின்படி நாட்டின் மொத்த உற்பத்தியில் குறைந்தது 6% நிதி கல்விக்கு ஒதுக்க வேண்டும். ஆனால், அதிகபட்சமாக ஒரே ஒரு ஆண்டு மட்டும்தான் இதுவரை 4.2% ஒதுக்கப்பட்டது. மற்றபடி 3-4%தான். தவிர, ஒவ்வோர் ஆண்டும் குறைந்த அளவு நிதியையாவது உயர்த்துவார்கள். மாறாக இந்த ஆட்சியில் கடந்த ஆண்டை ரூ. 4,000 கோடியைக் குறைத்துவிட்டார்கள்.
இத்தனைக்கும் கல்விக்காக நமது அரசாங்கம் மக்களிடம் வரி வசூலிக்கிறது. அதுவே அரசுக்கு அவமானம். சுகாதாரம், ராணுவம், காவல் துறையைப் பராமரிப்பது போன்று கல்வித் துறையைப் பராமரிப்பதும் ஓர் அரசின் கடமை. நியாயமாகப் பார்த்தால் கல்வி வரி வசூலிக்கும் நமது அரசு, குறைந்தபட்சம் பள்ளி இறுதி ஆண்டு வரையிலாவது 100 சதவீதம் இலவசக் கல்வியை அளிக்க வேண்டும். இப்படி இருக்கும் ஏராளமான சிக்கல்களை எல்லாம் இந்த அரசு சிந்திக்கவே இல்லை. மாறாக, நாட்டின் மொத்த கல்வி அமைப்பையும் ஒற்றை மதம் சார்ந்து மாற்ற முயற்சிக்கிறது. எல்லாவற்றையும்விட பெரும் ஆபத்து இது!
நோயாளிகளை நினைத்துக் கலங்குகிறேன்!
மருத்துவர் ரெக்ஸ்,
முன்னாள் இயக்குநர், எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை.
ஒரு மக்கள் நல அரசு சுகாதாரத்துக்கு நிறைய ஒதுக்கீடு செய்வது கடமை. ஆனால், மோடி அரசில் நடப்பது என்ன? ஒதுக்கீடு குறைந்துவிட்டது. மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மருந்துகளின் விலை கட்டுப்பாட்டில் இருந்தது. இன்று உயிர் காக்கும் பல மருந்துகளின் விலை கடுமையாக ஏறிவிட்டது. மோடி அரசின் வணிகரீதியான, பன்னாட்டு மருந்து நிறுவனங்களுக்குச் சாதகமான கொள்கை காரணமாக நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், சிறுசீரக நோய்கள் போன்ற நீண்ட கால நோய்களுக்கான மருந்துகளின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே இருக்கும். அதாவது, சர்வதேச சந்தையில் தங்கம், பெட்ரோல் விலை ஏறுவதுபோல.
அரசின் அடுத்தடுத்த நகர்வுகளும் ஆறுதல் அளிப்பதாக இல்லை. ஒரு மருத்துவராக இந்திய நோயாளிகளின் நிலையை மிகுந்த வேதனையோடு பார்க்கிறேன்.
வாக்குறுதிகள் அப்படியே இருக்கின்றன!
பாலசுந்தரம்,
முன்னாள் தலைவர், இந்திய தொழில் வர்த்தக சபை, கோவை.
மக்களவைப் பொதுத் தேர்தலின்போது மோடி ஏராளமான வாக்குறுதிகளை அளித்தார். அதனால், இந்த அரசின் மீது மக்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏற்பட்டன. குறிப்பாக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இரண்டாவது ஐந்தாண்டுக் கால ஆட்சி முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிர்வாகத்தை எதிர்பார்க்கின்றனர். ஆனால், எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்வதாகத் தெரியவில்லை.
அலைக்கற்றை ஏலம், நிலக்கரிச் சுரங்க ஏலம் சர்ச்சை இல்லாமல் நடந்தது, 2013 கம்பெனிகள் சட்டத்தின் செயல்படுத்த முடியாத பிரிவுகளிலிருந்து நிறுவனங்களுக்கு விலக்கு தரப்பட்டது, ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகம் பெறுமானமுள்ள வணிகப் பூசல்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கத் தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது, மக்களிடம் பயன்படாமல் இருக்கும் தங்கத்தைத் திரட்டி கையிருப்பை உயர்த்துவதுடன், பெறப்படும் தங்கத்துக்கு எந்தவித வரிவிதிப்பும் இல்லாமல் வட்டி தரும் திட்டம் தொடங்கப்பட்டது - இதெல்லாம் வெற்றிகரமான விஷயங்கள்.
ஆனால், அரசு நிர்வாகத்தை எளிமைப்படுத்துவது வெறும் வாக்குறுதியாகவே தொடர்கிறது. முதலீடுகள் பெரிய அளவில் வரவில்லை. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற கோஷத்துக்கு ஏற்ப இங்கேயே உற்பத்தியைத் தொடங்க நடவடிக்கைகள் இல்லை. நம்முடைய பொருளாதார வளத்துக்குப் பொருந்தாத வகையில், அதிகப்படியாகவே கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை. இப்படி நிறைய இல்லை.