பழங்கால சீன-இந்திய நட்பின் மறுதொடக்கம்தான் மோடியின் சீனப் பயணம்!
இந்தியக் குடியரசும் சீன மக்கள் குடியரசும் 1950-ல் தூதரக உறவுகளை ஏற்படுத்திக்கொண்டன. சீனவியல் நிபுணரான பிரபோத் சந்திர பாக்சி, இரு நாடுகளுக்கும் இடையில் ஆயிரம் ஆண்டுகளாக நிலவிவந்த நட்புறவை நினைவுகூர்ந்து அப்போது ஒரு செய்தியை விடுத்தார். “சீனத்தில் இருக்கும் நண்பர்களுக்கு… இந்த சாலை மிக நீண்டது, எனவே இப்போதைய பரிசு (ராஜீய உறவுத் தொடக்கம்) சிறியதாக இருக்கிறதே என்று நினைக்க வேண்டாம்; இதை நீங்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம்” என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இப்போது சீனத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இரு நாடுகளுக்கும் இடையில் ஆயிரம் ஆண்டுகளாக இருந்த நட்பு, ஒத்துழைப்பை ஒப்பிடும்போது இப்போது இரு நாடுகளுக்கும் இடையில் இருக்கும் நட்பின் ஆழமும் ஒத்துழைப்பும் மிகச் சிறியதாகத்தான் இருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையில் எண்ணங்களில் இருக்கும் வேறுபாடுகளைக் குறைத்துக்கொண்டு ஒன்றாகப் பயணிக்க வேண்டிய பாதை மிக நீண்டதாக இருக்கிறது.
சகோதரர்கள் அல்ல கூட்டாளிகள்
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு இப்போது உச்ச நிலையில் இல்லை. இரு நாடுகளுக்குமே பரஸ்பரம் சந்தேகமும், இரு நாடுகளுமே பரஸ்பரம் எதிர்கொள்வதில் மாறுபட்ட எண்ண ஓட்டங்களும் இருக்கின்றன. இரு நாட்டு மக்களுக்குமே பரஸ்பரம் எதிர் நாட்டு மக்களைப் பற்றி அதிகம் தெரியாமல் இருக்கிறது. இரு நாட்டு உறவுகளில் நல்ல புரிதலையும் தொடர்ச்சியையும் தெளிவையும் கொண்டுவருவதில்தான் மோடியின் வெற்றி இருக்கிறது. இதைச் சாதிக்க அவர் சீனத் தலைவர்களும் புரிந்துகொண்டு ஏற்கும் வகையில் பேச வேண்டும். ‘பஞ்ச சீலம்’ என்று வெளியுறவில் எல்லா நாடுகளும் பின்பற்றத் தக்க 5 வகைப் பண்புகளை உலகுக்கு அறிவித்த இரு நாடுகளும் ஒன்றை மற்றொன்று விலக்கிவைத்துவிட்டு வாழ முடியாது. ‘சகோதரர்களாக அல்ல, கூட்டாளிகளாக’ இரு நாடுகளும் சேர்ந்து பணியாற்ற முடியும்.
சீனம் அறிய வேண்டிய கடினமான உண்மை ‘வளர்ச்சி’ என்றார் டெங் சியோபிங். அது இந்தியாவுக்கும் பொருந்தும். வலுவான, பாதுகாப்பான, பொருளாதாரரீதியாக வளர்ந்த இந்தியாவால்தான் உலக அரங்கில் தலைவராக உலா வர முடியும். வளர்ச்சியில் இரு நாடுகளும் ஒத்துழைத்தால் இரு நாடுகளுக்குமே அது வெற்றியாக அமையுமே தவிர எந்த நாடும் இழப்புக்கு ஆளாகாது. வளர்ச்சி என்னும் நெடும் பந்தயத்தில் நீண்ட தொலைவு செல்ல வேண்டிய இந்தியா, சீனத்திடமிருந்து முதலீட்டையும், அடித்தளக் கட்டமைப்புகளை உருவாக்கும் நிபுணத்துவத்தையும் ஈர்க்க முயற்சி செய்கிறது. இதுதான் காரிய சாத்தியமானது. சீன நிறுவனங்கள் பற்றிய நம்முடைய தேவையற்ற அச்சங்களைக் கைவிட வேண்டும். அந்தக் காலத்து காஷ்மீரமும் சீனத்தின் ஜின்ஜியாங் பகுதியும் மிக நெருக்கமாக இருந்திருக்கின்றன. இழந்த இந்தத் தொடர்புகளை 21-வது நூற்றாண்டு பட்டுப் பாதை முயற்சி மீட்டெடுக்க வேண்டும்.
சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளவும் வர்த்தக உறவுகளை வளர்க்கவும் இந்தியாவுக்கு வர விரும்பும் சீனர்களுக்கு விசா விதிகளை எளிமைப்படுத்த வேண்டும். சீன முதலீட்டாளர்களுக்கும் தொழில் முகவர்களுக்கும் இந்தியா உகந்த நாடாகத் திகழ்கிறது. சீன ஏற்றுமதிச் சந்தையில் 2001-ல் இந்தியாவின் இடம் 19 ஆக இருந்தது 2013-ல் 6 என்ற இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. சீனர்களின் பொருட்களை உடனடியாக விற்பதற்கான பக்கத்து வீட்டு வாடிக்கையாளராக இந்தியா திகழ்கிறது. சீனத்தின் சியோமி என்ற ஸ்மார்ட் ரக செல்பேசி நிறுவனத்துக்கு ஓராண்டுக்குள்ளாகவே மிகப் பெரிய சந்தையாகிவிட்டது இந்தியா. சீனத்திலிருந்து அதிகம் இறக்குமதியாவது கைபேசிகள்தான் என்பது குறிப்பிடத் தக்கது.
வர்த்தகம், சுற்றுலாவை ஈர்க்க
ராஜீய உறவுகளின் அடிநாதமே வர்த்தக உறவை மேம்படுத்துவதுதான். கடந்த பத்தாண்டுகளில் சீனத்துடனான நம்முடைய வர்த்தக உறவு பலமடங்கு உயர்ந்திருக்கிறது. அதே வேளையில் நாம் ஏற்றுமதி செய்வதைவிட இறக்குமதி செய்வது அதிகமாகிவிட்டதால் வெளிவர்த்தகப் பற்றாக்குறை சுமார் 2,75,000 கோடி ரூபாய் ஆகியிருக்கிறது. நம் நாட்டு மருந்துப் பொருட்களையும் சேவைத் துறையையும் தன் நாட்டில் நுழையவே அனுமதிக்க மறுக்கிறது சீனம். சமமற்ற நட்பு என்பது நெருடலான நட்பாகவே இருக்கும். சீன வர்த்தக அமைச்சகத்தில் இருப்பவர்களுக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவும், தேசிய கவுன்சிலும் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இதற்குப் பிரதமர் மோடிதான் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
பொருளாதாரம், ராணுவ ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளும் நெருங்கிச் செயல்பட வேண்டும். புதுடெல்லிக்கும் பெய்ஜிங்குக்கும் இடையில் தகவல் தொடர்பும் போக்குவரத்துத் தொடர்பும் அதிகரிக்கப்பட வேண்டும். ஆயுதக்குறைப்பு, அணு ஆயுதப் பெருக்கத் தடை, கட்டுப்பாடு ஆகியவை குறித்தும் இரு நாடுகளும் கலந்து ஆலோசிக்க வேண்டும். சமீபத்தில் ஆந்திர முதல்வர் சீனத்தில் பயனுள்ள சுற்றுப்பயணத்தை நடத்தி முடித்திருக்கிறார். இப்படி சீனத்துக்கும் மாநிலங்களுக்கும் இடையில் நேரடித் தொடர்பு அதிகரிக்க வேண்டும்.
சீனா-பாகிஸ்தான் உறவு
‘ஒரே பிராந்தியம் ஒரே பாதை’ என்ற கொள்கையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் தனி முத்திரை தெரிகிறது. ஆசிய நாடுகளின் அடித்தளக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான வங்கியை உருவாக்குவது இதில் அடக்கம். சீன விருப்பம், நலனுக்கு ஏற்ப இப்பகுதி நாடுகளை ஒரு அமைப்பில் இணைக்கும் திட்டம் இது. இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல், அட்லான்டிக் கடல் என்று எல்லா கடல் பரப்புகளிலும் சீனம் காலூன்ற வகுக்கப்பட்டதே 50 நாடுகள் வழியாகச் செல்லும் ‘கடல் பயணக்கால பட்டுப் பாதை புதுப்பிப்புத் திட்டம்’. சீனத் தொழில், வியாபாரத்துக்குத் துணை புரியும் துறைமுகங்களையும் பாதைகளையும் கட்டுவதுதான் இத்திட்டம். இலங்கை, மாலத்தீவுகள், வடக்கு கென்யா, பாகிஸ்தானின் க்வாதர் ஆகியவை இந்தப் பாதையில் வருகின்றன. சீனத்துடன் உறவு கொண்டாலும் அதனால் இந்தியாவுக்கு ஏற்படும் பயன்களை அளவிடுவது கடினம். மோடியின் இந்தப் பயணம் அதை மனதில் கொண்டுள்ளது என்பது உறுதி.
சீனத்தின் 21-வது நூற்றாண்டு பட்டுப் பாதையின் அங்கமாக காரகோரம் மலைத்தொடர் வழியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரைத் துளைத்துக்கொண்டு அரபிக் கடலில் உள்ள க்வாதர் என்ற துறைமுகத்தை அடையத் திட்டமிட்டிருக்கிறார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் இது பழைய பட்டுப் பாதையைப் போலத் தெரியும். உண்மையில் இது இந்தியாவுக்குள் டெல்லியிலிருந்து மும்பை வரை செல்லும் தொழில் தாழ்வாரத்துக்கு இணையான பாதையாகும்.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் சொல்வதுதான் சரி என்று சீனா ஏற்றுக்கொண்டதைப் போலத்தான் இருக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரம் வழியாக புதிய பட்டுப் பாதை செல்வதே அதற்கு சாட்சி. இவற்றைப் பற்றியும் பேச்சு நடக்கும்.
எல்லைப் பிரச்சினை
எல்லைப் பிரச்சினையை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகப் பேசி முடிவு செய்வது இரு நாடுகளின் வரலாற்றுக் கடமை என்று சீனப் பிரதமர் லீ கெகியாங் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இது அடைய முடியாத லட்சியம் அல்ல. இதைச் செய்வதற்கு அரசியல் உறுதியும், தன்னம்பிக்கையும், தான் செய்வது சரியானது என்ற உறுதியான எண்ணமும், எதிர்த் தரப்பு வாதத்தையும் ஏற்று இசைந்து சில மாற்றங்களுக்கு ஒப்புக்கொள்ளக்கூடிய போக்கும் அவசியம். அவை இருந்தால் எதுவும் சாத்தியம்தான்.
- நிருபமா ராவ் சீனா, அமெரிக்காவில் இந்தியத் தூதராகப் பணிபுரிந்திருக்கிறார், 2009 முதல் 2011 வரை இந்திய வெளியுறவுத் துறை செயலராகப் பதவி வகித்திருக்கிறார்.
© ‘தி இந்து’ (ஆங்கிலம்), சுருக்கமாகத் தமிழில்: சாரி