சிறப்புக் கட்டுரைகள்

கிருஷ்ணாவின் பயணம்: தெலங்கானா - ஆந்திரா நீர்ப்பங்கீட்டுப் பிரச்சினை சென்னையை பாதிக்குமா?

செய்திப்பிரிவு

தெலங்கானா - ஆந்திரா நீர்ப்பங்கீட்டுப் பிரச்சினை சென்னையை பாதிக்குமா?

*

- வி.சாரதா

தெலங்கானா மாநிலம் ஆந்திரத்தில் இருந்து பிரிந்துவிட்டதால், ஸ்ரீசைலம் அணையில் நீர்ப்பங்கீட்டில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது, சென்னையின் தாகத்தைத் தீர்க்க பேருதவி புரிந்துவரும் கிருஷ்ணா நீர்வரத்தை பாதிக்கக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தெலங்கானா - ஆந்திரா எல்லையில் அமைந்துள்ளது நீலம் சஞ்சீவரெட்டி சாகர் திட்டம் (ஸ்ரீசைலம் அணை). இங்கிருந்துதான் கிருஷ்ணா நதியின் வெள்ள நீர், சென்னைக்கு தெலுங்கு கங்கைக் கால்வாயில் திருப்பிவிடப்படுகிறது. ஸ்ரீசைலம் அணையின் வலப்புறம் ஆந்திரத்துக்கும், இடதுபுறம் தெலங்கானாவுக்கும் சொந்தம். இங்கு இருபுறமும் அமைந்துள்ள நீர்மின் திட்டம், இந்தியாவின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்று. ஆந்திரப் பகுதியில் 770 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட மின்நிலையமும், தெலங்கானா பகுதியில் மஹபூப்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள இடதுகரையில் 900 மெகா வாட் மின்னுற்பத்தி நிலையமும் உள்ளது.

அபாய நிலையில் நீர்மட்டம்:

ஸ்ரீசைலம் அணையின் நீர் மட்டம் தற்போது குறைந்தபட்ச இருப்பு நிலையை விட கீழிறங்கிவிட்டது. கண்டலேறு அணையிலும் இதே நிலைமைதான். சோமசீலா அணையில் மட்டுமே ஓரளவு நீர் இருப்பு உள்ளது.

மேற்கண்ட அணைகளின் நீர் மட்டம், கடந்த ஆண்டு மே மாதம் 11-ம் தேதி நிலவரப்படி முறையே 53.18 டி.எம்.சி, 32.12 டி.எம்.சி, மற்றும் 18.63 டி.எம்.சி என ஒட்டு மொத்தமாக அவற்றில் 103.93 டிம்.எம்.சி நீர் இருப்பு இருந்தது. இந்த ஆண்டில் அதே தேதியில் அது சரி பாதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. மூன்று அணைகளிலும் உள்ள ஒட்டுமொத்த நீரின் அளவே 49.53 டி.எம்.சி தான் உள்ளது.

மழையளவும் குறைந்தது:

இந்த ஆண்டில் ஆந்திர மாநிலத்தின் மழைப் பொழிவில் வெகுவான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தெலுங்கு கங்கை திட்டத்தின் தலைமை பொறியாளர் எ.சுதாகர் "ஆந்திராவில் இந்த ஆண்டு பெய்த மழையின் அளவு கடந்த ஆண்டை விட 37 சதவீதம் குறைந்துள்ளது. தெலுங்கு கங்கை திட்டத்துக்கு உட்படாத மாவட்டங்களில் வறட்சி ஏற்கெனவே தொடங்கிவிட்டது. கடப்பா மாவட்டத்தில் பத்வேல் மண்டலத்தில் சில பகுதிகளிலும், நெல்லூர் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும் தண்ணீர் பஞ்சம் கடுமையாக உள்ளது." என்றார்.

பாசனமா மின்சாரமா?

ராயலசீமா மண்டலத்தின் முக்கிய நீராதாரம் என்பதால் இந்த அணையில் நீர் சேமிப்பை மேற்கொள்ள ஆந்திர அரசு முடிவு செய்தது. இதற்காக வலதுகரையில் மின் உற்பத்தியை நிறுத்தியது. ஆனால், தெலங்கானாவில் மின் பற்றாக்குறை முக்கியப் பிரச்சனையாக எழுந்துள்ளது. எனவே அந்த அரசு, இடது கரையில் மின் உற்பத்தியைத் தொடர்ந்தது. 77 டி.எம்.சி நீரைப் பயன்படுத்தி 428 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரித்தனர்.

இதனால், இரண்டு மாநிலங்களுக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. இப்பிரச்சனை கிருஷ்ணா நதிநீர் மேலாண்மை வாரியத்தின் ஜூலை மாதம் நடைபெற்ற முதல் கூட்டத்திலேயே எழுப்பப்பட்டபோதும் தீர்வு காண முடியவில்லை. இது தமிழகத்தின் நீர் வரத்தையும் பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தலாம்.

இதுபற்றி ஹைதராபாத் மத்திய பல்கலைகழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஹரகோபால் கூறியதாவது: "மின்சாரமா, பாசனமா என்ற மோதல் இரு மாநிலங்களுக்குமிடையே நடக்கிறது. இந்த பிரச்னைகள் எதிர்பார்க்கப்பட்டது தான். இது குறித்து இரு மாநில முதல்வர்களும் அமர்ந்து பேச வேண்டும். ஆனால், முதல்வர்கள் மக்களை கவருவதையே நோக்கமாக கொண்டுள்ளனர். இனி வரும் காலங்களில், தெலங்கானாவின் தேவைகளையும் பரிசீலித்து, தெலுங்கு கங்கை ஒப்பந்தத்தை அமலாக்க வேண்டும்.

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் சிவசுப்பிரமணியைன் கூறும்போது: "தேசிய நீர்க்கொள்கையின் அடிப்படையில் குடிநீருக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும். எனவே, தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாட்டைத் தடுக்க கிருஷ்ணா நீர் வேண்டுமென்று கேட்டால் அதனை யாரும் மறுக்க முடியாது."

தெலுங்கானாவின் தலையீடு

- கி.கணேஷ்

சோமசீலா அணைக்கு சுற்றுலா வந்த திருப்பதியைச் சேர்ந்த ஹரி என்பவர், "வரும் காலங்களில் தெலுங்கானா அதிக அளவு தண்ணீரை ஒதுக்க சம்மதித்தால் மட்டுமே சென்னைக்குத் தண்ணீர் தருவது எளிதாக இருக்கும். வரும்காலத்தில் இதில் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என்றார். இதே கருத்தை பேராசிரியர் ஹரகோபால் தெரிவித்திருந்தார். தண்ணீர் விநியோகத்தில் தெலங்கானைாவின் தலையீடு பிரச்சினையை ஏற்படுத்தும் என்ற கருத்து சாதாரண பொதுமக்கள் வரையில் பரவிக்கிடக்கிறது.

தலைநகர் அந்தஸ்தை சென்னை தக்கவைக்க உதவியதா கிருஷ்ணா?

- எஸ்.சசிதரன்

சென்னைக்குக் கிருஷ்ணா நீர் வருவதற்கு முன்பாக, குடிநீர்த்தட்டுப்பாடு பெரும் பிரச்சினையாக இருந்தது. 1981-ம் ஆண்டுவாக்கில், சென்னையில் இருந்து தலைநகரினை திருச்சிக்கு மாற்ற முயற்சித்தார் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். திருச்சி-தஞ்சைக்கிடையே உள்ள பகுதியில் தலைமைச் செயலகத்தை அமைக்க இடமெல்லாம் பார்க்கப்பட்டது. எம்.ஜி.ஆர். தங்குவதற்கு பங்களாவும் கட்டப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. மாநிலத்தின் மத்திய பகுதியில் தலைநகர் இருக்கவேண்டும் என்று அரசு கருதுவதாக ஒரு தகவல் பரவினாலும், குடிநீர்ப்பிரச்சினையும் முக்கிய காரணமாக அரசு கருதியது.

1981-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், மதுரையில் பேட்டி கொடுத்த, அப்போதைய வருவாய்த்துறை அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம், சென்னையில் குடிநீர் விநியோகம் பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பதாகவும், ஆண்டொன்றுக்கு ரூ.400 கோடி (அப்போதைய மதிப்பில்) அதற்காக செலவாவதாகவும், அந்தத் தொகையில் புதிய தலைநகரையே நிர்மாணித்துவிடமுடியும் என்பதால், திருச்சிக்கு அருகே புதிய தலைநகரை நிர்மாணிக்க அரசு பரிலீ்த்து வருவதாகவும் அறிவித்தார்.

அரசின் திட்டத்தை எதிர்த்த எதிர்க்கட்சித் தலைவர் மு.கருணாநிதி, "இது மக்கள் பிரச்சினைகளை மறைக்க அரசு செய்யும் வீழ்ச்சி, தலைநகரை மாற்ற முயன்றால் மக்கள் வீறு கொண்டு எழுவார்கள்," என்று கூறியிருந்தார்.

ஆனால், அடுத்த சில ஆண்டுகளில், ஆந்திரத்தில் எம்.ஜி.ஆரின் நண்பர் என்.டி.ராமராவ், ஆட்சியைப் பிடித்ததும், சென்னைக்குக் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் 'தெலுங்கு கங்கை' உபாயம் கண்டறியப்பட்டது. அதற்குப்பிறகு, தலைநகரை மாற்றும் பிரச்சினை கைவிடப்பட்டது. ஆனால், அதற்கான உண்மையான காரணம் தெரியவில்லை.

அறிவுப்பூர்வமான நீர்மேலாண்மை அவசியம்: தமிழிசை

- டி.செல்வகுமார்

தமிழகத்தில் போதிய அளவுக்கு மழைப்பொழிவு இருக்கிறது. ஆனால், மழைநீர் சேமிக்கும் பழக்கம் முழுமையாக இல்லை.

மாரித் தண்ணீரை சேமிக்காதவர்களே, லாரித் தண்ணீரை நம்பி இருக்கிறார்கள். மழை நீரை சேமித்தால், ஓரிரு ஆண்டுகள் மழை பொய்த்தால்கூட நிலைமையைச் சமாளிக்க முடியும்.

உதாரணத்துக்கு, எனது வீட்டில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.30 ஆயிரம் செலவு செய்து லாரி தண்ணீர் வாங்கி பயன்படுத்தினோம். அதன்பிறகு மழைநீர் கட்டமைப்பை ஏற்படுத்தியதால், தற்போது ஒரு பைசா செலவின்றி, கைக்கெட்டும் தூரத்தில் தண்ணீர் கிடைக்கிறது. இந்த நிலை, சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் உருவாக வேண்டும்.

மழை நீரை முழுமையாக சேமித்துப் பயன்படுத்தினால், குடிநீருக்கு அண்டை மாநிலங்களில் கையேந்தும் நிலையைத் தவிர்க்கலாம். வீணாக கடலில் கலக்கும் வெள்ள நீரை சிறிய சிறிய நீர்த்தேக்கங்கள் மூலம் சேமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிடைக்கும் நீரை சிக்கனமாக செலவழிப்பது பற்றி ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்றவற்றில் நமது உரிமைக்காகப் போராடும் நாம், நீர் மேலாண்மையை அறிவியல்பூர்வமாகச் செய்தால், உணர்வுப்பூர்வமாக சண்டையிட வேண்டிய நிலை ஏற்படாது. மழை நீர் சேகரிப்பும், நீரை சிக்கனமாகச் செலவிடுதல் உள்ளிட்ட நீர் மேலாண்மையுமே தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்கும் வழிகளாகும் என்றார் தமிழிசை சவுந்தர்ராஜன்.

கூட்டுறவு சமஷ்டிக்கு உதாரணம்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

'தி இந்து'வுக்கு திமுக தலைமைக் கழக செய்தித் தொடர்பு செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

இத்தொடரில், சென்னைக்கு கிருஷ்ணா நீர் வருவதை 1980-ம் காலகட்டத்திலிருந்து அதன் வரலாறு, தண்ணீர் வரும் தொழில்நுட்பம் ஆகியவற்றை சொல்லிவருவது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வாழ்த்துகள் , பாராட்டுகள். அரிய பல தகவல்களுடன் ஆய்வுக்கட்டுரையைப் போல் உள்ளது

கிருஷ்ணா நீர் சென்னைக்கு வரவேண்டுமென்று 1981 காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பழ.நெடுமாறன், தி.சு.கிள்ளிவளவன், மணலி.ராமகிருஷ்ண முதலியார், எம்.கே.டி சுப்பிரமணியம், மாத்தூர் ராமசாமி நாயக்கர், நான் உட்பட இதைக் குறித்து அறியவும், தரவுகளைத் திரட்டவும் கிராமப் பகுதிகளுக்கெல்லாம் அலைந்து திரிந்து ஆய்வுகள் செய்தது நினைவுக்கு வருகிறது.

தண்ணீர் என்பது இயற்கையின் அற்புத அருட் கொடை. இந்த தண்ணீருக்காக எதிர்காலத்தில் உலக நாடுகளுக்குள்ளே உலகப் போர் மூளுமோ என்று விவாதங்கள் நடக்கின்ற வேளையிலும், தமிழகத்திடம் கர்நாடகமும், கேரளமும் வம்பு செய்யும் நிலையிலும், ஆந்திரம் தண்ணீர் தருவது ஒரு கூட்டுறவு சமஷ்டி முறைக்கு உதாரணமாகும். தமிழகத்தில், அரசியல் மனமாச்சர்யங்கள் கடந்து கிருஷ்ணா நீர் வரவேண்டும் என்று அனைவரும் விரும்பினர்.

கிருஷ்ணாவின் நீர் சென்னைக்கு தொய்வின்றி வரவேண்டுமென்ற நோக்கத்தில் தங்களுடைய தொடர் உள்ளது. சென்னை மக்கள் இப்பணிக்காக "தி இந்து" நாளிதழுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளனர். கிருஷ்ணா நீர் சென்னைக்கு தொய்வின்றி வரவேண்டுமென்ற நோக்கத்தில் தங்களுடைய தொடர் உள்ளது.

SCROLL FOR NEXT