- எஸ்.சசிதரன்
சென்னைக்கு தெலுங்கு கங்கை கால்வாய் வழியாக தண்ணீரைத் தரும் ஸ்ரீசைலம் நீர்த்தேக்கப் பகுதியின் பிரம்மாண்டத்தையும், அழகையும் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. கிழக்குத் தொடர்ச்சி மலையில், ஒன்றுபட்ட ஆந்திரத்தின் நல்கொண்டா மாவட்டம் முதல் சித்தூர் மாவட்டம் வரை நீளும் நல்லமலைத் தொடரின் இதயப்பகுதியில், மலைகளுக்கிடையே அமைந்துள்ளது.
தெலங்கானா (மஹபூப் நகர் மாவட்டம்) மற்றும் ஆந்திர மாநிலத்துக்கிடையே (கர்நூல் மாவட்டம்) செங்குத்தான பள்ளத்தாக்கில் கட்டப்பட்டுள்ளது. இதன் உயரம் சுமார் 980 அடி. 885 அடி வரை நீரைத் தேக்கலாம். அதாவது 253 டி.எம்.சி. நீர் கொள்ளளவு கொண்டது. 12 பெரிய மதகுகளுடன் கூடிய 1680 அடி நீளம் கொண்டது. மகாராஷ்டிரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 2 லட்சம் சதுர கி.மீட்டருக்கு அதிகமான நீர்பிடிப்புப் பகுதிகளில் இருந்தும், துங்கபத்ரா (கர்நாடகம்) மற்றும் ஜூராலா (தெலங்கானா) அணைகளில் இருந்தும் இங்கு தண்ணீர் வருகிறது.
மேட்டூர் அணையின் மொத்த நீர் தேக்கும் அளவு 120 அடி மட்டுமே. மேட்டூரை விட இரு மடங்குக்கும் மேலாக இது பெரிதானது. “இங்கு 834 அடிக்கும் கீழே நீர்மட்டம் குறைந்தால் குடிநீருக்கும், 854 அடி வரை இருந்தால் விவசாயத்துக்கும், அதற்கு மேலும் இருந்தால் மின் உற்பத்திக்கும் பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய நீர்ட்டம் 805 அடி,” என்கிறார் அணையின் கண்காணிப்பு பொறியாளர் அப்பல நாயுடு.
1960-ல் தொடங்கி, 1980-ல் கட்டி முடிக்கப்பட்ட இந்நீ்ர்த் தேக்கம் முதலில், மின்னுற்பத்திக்காக தொடங்கப்பட்ட போதிலும் பாசனம், குடிநீர்த்தேவை என ஆந்திரத்தின் மத்திய மற்றும் தெற்கு மாவட்டங்களின் தேவையைப் பூர்த்தி செய்யத்தக்க வகையில் பிற்காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் இடப்புறத்தில் உள்ள தெலங்கானாவின் சுரங்க மின்னுற்பத்தி நிலையத்தில் 900 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம். வலப்புறத்தில் உள்ள ஆந்திர ஆலையில், 770 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யலாம். இந்தியாவிலேயே மிகப் பெரிய நீர்மின்னுற்பத்தி வளாகம் இது.
ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்துக்கு கிருஷ்ணா நீர் வருவதற்கு முன்பாகவே, 3 கி.மீ. தொலைவில் உள்ள போத்திரெட்டிப்பாடு நீர்போக்கி வழியாக சோமசீலா அணைக்கு நீர் அனுப்பப் படுகிறது. இதுதவிர, நாகார்ஜுனசாகர் அணைக்கும் தென் மாவட்டங்களுக்கும் நீர் திறந்துவிடப்படுகிறது.
- டி.செல்வகுமார்
ஆந்திராவின் 3 அணைகள் வழி யாக சென்னைக்கு கிருஷ்ணா நீர் வருகிறது. இதில், நடுநாயகமாக இருப்பதுதான் சோம சீலா அணை. இதன் பக்கவாட்டு கிரானைட் மலையில் 101 அடி ஆழத் துக்கு கால்வாய் வெட்டப்பட்டு கிருஷ்ணா ஓடி வருகிறது.
ஸ்ரீசைலம் அணையில் புறப்பட்டு 177.941 கி.மீ. தூரத்தில் உள்ள சோம சீலா அணைக்கு வருகிறது கிருஷ்ணா நீர். அங்கிருந்து 45.172 கி.மீ. தூரத்தில் உள்ள கண்டலேறு அணைக்கு வந்து, பின்னர் 177.975 கி.மீ. பயணமாகி பூண்டி ஏரியை வந்தடைகிறது.
ஆந்திரத்தின் நெல்லூர் மாவட்டம், சோமசீலா என்னுமிடத்தில் பெண் ணாறு ஆற்றின் குறுக்கே கட்டப் பட்டுள்ளது . இவ்வணை, சோமசீலா திட் டத்தை 5-வது ஐந்தாண்டு திட்டத்தில் சேர்ப்பதற்காக 1973-ல் திட்ட கமிஷன் அனுமதி அளித்தது. அப்போது திட்ட மதிப்பீட்டு ரூ.17.20 கோடி. அணை கட்டுமானப் பணி 1976-ம் ஆண்டு தொடங்கி, 1989-ல் நிறைவுபெற்றது.
சோமசீலா அணையின் மொத்த கொள்ளளவு 78 டி.எம்.சி. இதன் பாசனப் பகுதி 4.5 லட்சம் ஏக்கர். புதிய பாசனப் பகுதி 1.79 லட்சம் ஏக்கர். இந்த அணையில் இருந்து 15 டி.எம்.சி. தண்ணீர் சென்னை குடிநீருக்காக திறந்துவிடப்பட்டு, கண்டலேறு அணை வழியாக பூண்டி ஏரிக்கு வருகிறது. சோமசீலாவில் அதிகபட்சமாக 2010-ம் ஆண்டு 73 டி.எம்.சி. தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.
இங்கிருந்து நெல்லூர் மாநக ராட்சிக்கு 1.8 டி.எம்.சி. தண்ணீர் குடிநீருக்காக திறக்கப்படுகிறது. மே 1-ம் தேதி நிலவரப்படி அணையின் நீர்இருப்பு 11.094 டி.எம்.சி. கடந்த ஆண்டு இதேநாளில் நீர்இருப்பு 33.121 டி.எம்.சி. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 169 கனஅடி. நீர் இருப்பு குறைவாக இருப்பதால் நீர் வெளியேற்றம் இல்லை. இதனால், கிருஷ்ணா நீர் கால்வாய் வறண்டு கிடக்கிறது.
சோமசீலா அணையின் தென்பகுதி யில் உள்ள கிரானைட் மலையில் 101 அடி ஆழத்துக்கு கிருஷ்ணா கால் வாய் வெட்டப்பட்டிருப்பது பிரமிப்பை அளிக்கிறது. அங்கிருந்து சிறிது தூரத்துக்கு கிரானைட் மலையை ஒட்டியே கால்வாய் செல்கிறது. அணை முகப்பு பின்னணியில் மலைமீது சோமேஸ்வர சுவாமி கோயில் அமைந்திருப்பது அழகு. இப்பகுதியை சுற்றுலா தலமாகவும் பராமரிக்கிறது ஆந்திர அரசு.
கிருஷ்ணா நதிநீர் திட்டம் ஒப்பந்தம் கையெழுத்தான போது முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருடன் இருந்த வர் அப்போதைய அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன். 'தி இந்து'வில் வெளியாகும் கிருஷ்ணா தொடரையொட்டி அவர் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது:
‘தி இந்து’ இதழில் கிருஷ்ணாவின் பயணம் என்ற தொடர் கட்டுரையின் முதற் பகுதியைப் படித்தேன். நல்ல தொடக்கம், பாதி நிறைவேற்றம் என்ற பழமொழிக்கேற்ப, இத்தொடர்க் கட்டுரையின் முதற் பகுதியே நல்ல தொடக்கமாக அமைந் துள்ளது. எம்.ஜி.ஆர் .உடன் கிருஷ்ணா நீரை சென்னைக்குக் கொண்டு வர ஒப்பந்தம் போட உறுதுணையாக இருந்தவன் என்ற முறையில் இத்தொடர்க் கட்டுரை இன்றைய நெருக்க டியில் பயன்படக் கூடியது.
கிருஷ்ணா ஆற்றில் இருந்து சென்னைக்கு குடிநீரை குழாய்கள் மூலம் கொண்டு வர திட்டமிட்டோம். ஆனால் அது பெரும் செலவுக்கு வழி வகுக்கும். அதற்கு மாறாக இயற்கை யாக உள்ள வாய்க்கால்களை பயன்படுத்தியும், தேவைப்படும் இடத்தில் கால்வாய்களை வெட்டியும் இந்நீரை கொண்டு வருகிறபொழுது, வழியில் பாசனத்துக்கும் பயன்படுத்தக் கூடும் என்பதால், ஏற்படும் செலவை ஆந்திர அரசும், தமிழக அரசும் பகிர்ந்து கொள்வதன் மூலம், இத்திட்டம் சிக்கனமான ஒன்று.
சென்னை பெருநகரம் வளர்ந்து வருகிறபொழுது மேலும் குடிநீர் தேவைப்பட்டால் அதற்கேற்ப வாய்க்கால்களையும், கால்வாய்களையும் அகலப்படுத்திக் கொள்ளலாம் என்றும் அப்பொழுது ஒப்புக் கொள்ளப்பட்டது. கிருஷ்ணாவில் இருந்து பெறப்படுகிற குடிநீர் சென்னைக்கு வர இடையில் மின்சாரத்தைக் கொண்டு இயக்கும் பம்பு செட்டுகள் தேவை இல்லை. இயற்கையாகவே வந்து சேரும்.
சென்னை பெருநகர வளர்ச்சி என்று பார்க்கிறபொழுது அதைத் தமிழ்நாட்டின் தலைநகரமாக மட்டும் பார்க்கக் கூடாது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் தென்னக மாநிலங்கள் அனைத்தும் சேர்ந்து சென்னை பெருநகர வளர்ச்சிக்கும் காரணமாக உள்ளது. ஆகவேதான் அந்த நோக்கோடு இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. எம்.ஜி.ஆரின் அணுகுமுறையே இந்த வரலாற்று சாதனைக்குக் காரணமாகும். இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
தமிழகத்துக்கான அளவு
ஒப்பந்தப்படி தமிழகத்துக்கு ஆந்திரா தரவேண்டிய கிருஷ்ணா நீர் விவரம்: ஆண்டுதோறும் ஜூலை மாதம் முதல், வினாடிக்கு 1000 கன அடிக்கு மிகாமல் அக்டோபர் மாதம் வரை தரவேண்டும். அதன்பின் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை வினாடிக்கு 1000 கன அடிவீதம் திறந்து விட வேண்டும். இந்த அடிப்படையில் தமிழக, ஆந்திரா எல்லையான ஜீரோ பாயின்ட்டில் இருமாநில நீர்வளத்துறை அதிகாரிகளும் நீர் திறப்பு அளவை சரிபார்க்கின்றனர்.
ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும் அடுத்ததாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும் அளிக்க வேண்டும்.
தற்போதைய சூழலில் தண்ணீர் இருப்பை பொறுத்து சென்னைக்கு தண்ணீர் தரப்பட்டு வருகிறது. சைலம், சோமசீலா, கண்டலேறு அணைகளில் நீர் இருப்பையும், ஆந்திராவின் தேவையையும் கருத்தில் கொண்டு திறந்துவிடப்படுகிறது. அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஏப்ரல் 23-ம் தேதி வரை, 5.358 டிஎம்சி நீர் சென்னைக்கு வந்துள்ளது.
- கி.கணேஷ்/ வி.சாரதா
ஸ்ரீசைலத்தில் தனது பயணத்தை தொடங்கினாலும் கடைசியாக கண்டலேறு அணையில் இருந்து தான் சென்னைக்குத் தண்ணீர் திறக்கப் படுகிறது. கண்டலேறு ஆற்றின் குறுக்கே இந்த நீர்த்தேக்கம் அமைந்திருந்தாலும் இதன் முக்கிய நீர் ஆதாரம் கிருஷ்ணாநீர் தான். இது 10752 மீட்டர் நீளமும், 49 அடி உயரமும் கொண்டது. 390 சதுர கி.மீ. பரப்பு நீர்ப்பிடிப்பு பகுதியை கொண்டது. இந்த நீர்த்தேக்கம் அமைந்த பின்னரே தெலுங்கு கங்கை திட்டம் அமலுக்கு வந்தது.
ஸ்ரீசைலம் அணையில் இருந்து சோமசீலா அணைக்கு கால்வாயில் பயணிக்கும் கிருஷ்ணா நீர் அங்கிருந்து 45 கி.மீ. தூரத்தில் நெல்லூர் மாவட்டம் ராப்பூர் அருகே கண்டலேறு அணைக்கு வருகிறது. கண்டலேறுவில் தேக்கி வைக்கப்பட்டு பின் 152 கி.மீ. தூரம் கண்டலேறு- பூண்டி கால்வாயில் தமிழக - ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட்டுக்கு வருகிறது.
1996-ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையின் மொத்த கொள்ளவு 69 டி.எம்.சி. இங்கிருந்து குடிநீர் தேவைக்காக 22.695 டி.எம்.சி நீர் ஒதுக்கப்படுகிறது.
இதில் 15 டி.எம்.சி. நீர் சென்னைக்கும், 5.88 டி.எம்.சி. நீர் நெல்லூர் மாவட்டங் களுக்கும், ஒரு டி.எம்.சி நீர் திருப்பதிக்கும், 0.25 டி.எம்.சி நீர் காளஹஸ்தி நகருக்கும், 0.5 டி.எம்.சி நீர் வெங்கடகிரிக்கும், 0.3 டி.எம்.சி நீர் கூடுருக்கும், 0.05 டி.எம்.சி நீர் ராப்பூரில் உள்ள பாசனதிட்டங்களுக்கும், 0.025 டி.எம்.சி நீர் பொதலுகூரில் உள்ள 15 கிராமங்களுக்கும், 0.04 டி.எம்.சி நீர் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மூன்று மண்டலங்களுக்கும் வழங்கப்படுகிறது.
மேலும் 5 டி.எம்.சி. தேக்கி வைப்ப தற்கான இடம் சென்னைக்கென்று தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர் பொதுவாக ஜீரோ பாயின்ட் வந்தடைய மூன்று முதல் நான்கு நாட்கள் ஆகும். சைலம் மற்றும் சோமசீலா அணைகளில் இருந்து திறக்கும் நீர், கண்டலேறு வர தாமதமாகும் என்பதால் அதை எதிர்பார்க்காமலேய கண்டலேறுவில் இருந்து பலமுறை நீர் திறக்கப்பட்டதற்கு சேமிப்பு வசதி பெரிதும் உதவி வருகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் 2015-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி வரை 5.3 டி.எம்.சி. நீர் கண்டலேறுவிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ளது.
கண்டலேறு அணையில் ஒரு முதன்மை நீர்போக்கி, ஒரு உயர் நிலை மதகுப்பகுதி மற்றும் ஒரு தாழ்நிலை மதகும் (low level shutter) விவசாயத்துக்கு தண்ணீர் திறப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது. தலைமை நீர்போக்குப் பகுதியில் இருந்து 9 மெகாவாட் மின்உற்பத்திக்கான வசதியும் உள்ளது. கடந்த மாதம் 27-ம் தேதி அணைப் பகுதியை பார்வையிட சென்ற நிலையில் அப்போதைய நீர்த்தேக்க அளவு 8.825 டிஎம்சியாக இருந்தது. கடந்த 2014 ஏப்ரல் 24-ம் தேதி 19.956 டி.எம்.சி. நீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பயணிப்போம்...
| படங்கள்: க.ஸ்ரீபரத் |