ரோஹின்ஜா முஸ்லிம் மக்களுக்கான குடியுரிமையை மியான்மரில் ஜெனரல் நேவின் அரசு மறுத்தது. ‘ரோஹின்ஜா’ என்ற சொல்லைக் கூடப் பயன் படுத்த அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. ‘வங்காளிகள்’ என்றுதான் அவர்களை அழைக்க வேண்டும் எனச் சட்டம் இயற்றப்பட்டது. இதன் மூலம் மியான்மர் மக்களிடையே இந்த இனத்தவரை ‘வந்தேறிகள்’ என அடையாளப் படுத்தி, அந்நியப்படுத்தும் திட்டம் வெற்றிகரமாக முடுக்கிவிடப்பட்டது.
ரோஹின்ஜா முஸ்லிம்கள், ஒரு புத்த மதப் பெண்ணைப் பாலியல் வல்லுறவு செய்து விட்டார்கள் என ஒரு வதந்தி பரப்பபட்டு, ரோஹின்ஜா இன மக்களின் மீது வெறுப்பு விதைக்கப்பட்டது. 2012-ல் ஜூன் 10 ஆம் நாள் மியான்மர் அரசு அவசரநிலைப் பிரகடனம் செய்ததை அடுத்து, ராக்கைன் பவுத்தர்கள் அதை வசதியாகப் பயன்படுத்திக்கொண்டனர். ஊரடங்கு உத்தரவினால் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்த ஆயிரக் கணக்கான ரோஹின்ஜா முஸ்லிம்களை அவர்கள் கொன் றார்கள். எஞ்சியவர்களை வீட்டை விட்டு விரட்டி யடித்தார்கள். ராணுவமும் காவல் துறையும் இதற்கெல்லாம் துணைநின்றன.
உள்நாட்டில் வாழ வழியின்றி உயிருக்குப் பயந்து படகுகளில் தப்பியோடிய ரோஹின்ஜா முஸ்லிம்கள் வங்கதேசத்தின் கதவுகளைத் தட்டினார்கள். ஏற்கெனவே 3 லட்சம் அகதிகள் வங்கதேசத்தில் இருப்பதாகச் சொல்லி, அவர்களை ஏற்க மறுத்துவிட்டது வங்கதேச அரசு. நடுக்கடலில் படகுகளில் உணவின்றி, நீரின்றி எண்ணற்ற மக்கள் உயிரிழந்தனர். இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து என ஒவ்வொரு நாட்டின் கதவுகளை அவர்களைத் தட்டிக்கொண்டே இருக்கிறார்கள். எப்படியும் இறப்போம் எனத் தெரிந்தும் கூட்டம்கூட்டமாக அவர்கள் படகுகளில் ஏறுவதற்கு யார் காரணம்?
‘ரோஹின்ஜா முஸ்லிம்கள் பவுத்தத்தை மதிக்காதவர்கள். அவர்கள் இம்மண்ணில் வாழத் தகுதியற்றவர்கள்’ என்று அறைகூவல் விடுப்பதன் மூலம் பவுத்தப் பேரினவாதம் அவர்களைத் தரம் பிரித்து அவர்களை முற்றாக அழித்தொழிக்கும் செயல்திட்டத்துக்கு வந்துவிட்டது. மியான்மரில் கிட்டத்தட்ட 10 லட்சம் மக்கள்தொகை கொண்ட ரோஹின்ஜா மக்கள் கொடும் ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில் வாழ்ந்துவருகிறார்கள். வாக்குரிமை கிடையாது. உயர்கல்வி, மருத்துவம், வேலை, கடவுச்சீட்டு என எதுவும் அவர்களுக்குக் கிடையாது. உள்நாட்டிலேயே ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு இடம்பெயர அரசிடம் அனுமதி பெற வேண்டும். திருமணம் செய்துகொள்ள ராணுவத்தின் நான்கு எல்லைகளிடமும் அனுமதி பெற வேண்டும். 2 குழந்தைகளுக்கு மேல் அவர்கள் பெற்றுக்கொள்ளக் கூடாது. அவர்களுடைய நிலங்களை அரசு நினைத்தால் பிடுங்கிக்கொள்ளவும் முடியும்.
பாலம் கட்டுதல், பாதைகளைச் சீரமைத்தல் மற்றும் அபாயகரமான, கடினமான வேலைகளில், குறைந்த கூலியில் கொத்தடிமைகளாக வேலை செய்ய ரோஹின்ஜா முஸ்லிம்கள் நிர்ப்பந்திக் கப்படுகிறார்கள். 7 வயதுக் குழந்தைகள் முதல் இத்தகைய தொழில்களில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். இது மட்டுமின்றி, காவல்துறை நினைத்தால், எந்நேரமும் இம்மக்களின் வீடுகளில் புகுந்து சோதனை செய்யும். ஒன்றாகக் கூடினால் துப்பாக்கிச் சூடு நடத்தியும் கொலை செய்யும்.
இத்தகைய கொடும் ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் ஒரு சமூகம் கொதித் தெழுவது இயல்பு. ஆனால், அவர்களை வழி நடத்த ஒரு தலைவர் உருவாகியிருக்கவில்லை. ஆங் சான் சூச்சி இருக்கிறார். ஆனால், அவர் அமைதியாக இருக்கிறார். 2013-ல் பிபிசிக்கு அளித்த ஒரு நேர்காணலில் வன்முறைக்கு இரண்டு தரப்புமே காரணம் என அநியாயமாக உண்மையை மறுக்கிறார். இதற்கு அவர் மவுன மாகவே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
இரு தரப்புமே பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்படு வதாக அவர் கூறும் குற்றச்சாட்டில் துளியும் உண்மையில்லை. ரோஹின்ஜா மக்களைப் போல, பவுத்தர்கள் நாடு நாடாக நடுக்கடலில் தத்தளிக்கவில்லை. பவுத்தர்கள் ஒருபோதும் மியான்மரின் அகதி முகாம்களில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதில்லை. உலகிலேயே கடுமையாக ஒடுக்கப்படும் ஒரு சிறுபான்மை இனமாக, ஐ.நா-வால் பவுத்தர்கள் அடையாளப்படுத்தப்படவில்லை. பசியிலும் நோயிலும் அவர்கள் செத்து மடியவில்லை. இனக்கொலைக்கும் ஆள் கடத்தலுக்கும் அவர்கள் இரையாகவில்லை. பிறகு, ஏன் ஆங் சான் சூச்சி பேரினவாத பவுத்தர்களையும் ஒடுக்கப்படும் ரோஹின்ஜா முஸ்லிம்களையும் ஒரே தட்டில் வைத்து எடைபோடுகிறார்.
25 ஆண்டுகளுக்கு முன்பு சூச்சி சமாதானத்துக் கான நோபல் பரிசு வென்றதை ரோஹின்ஜா இன மக்கள், இன்று முற்றிலுமாக மறந்துவிட்டிருப் பார்கள். சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜனநாயகத் துக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் போராடிய ஒரு தலைவர், கடந்த சில ஆண்டு களாகவே பெரும்பான்மை பவுத்த இன மக்களின் பக்கமே நின்று பேசிவருகிறார். ரோஹின்ஜா இன மக்கள் ஒடுக்கப்படுவதுகுறித்துப் பேசினால், 2016 அதிபர் தேர்தலில் தனக்கு ஆதர வான பவுத்த வாக்குகள் குறைந்துவிடுமோ என்பது சூச்சியின் கணக்கு. மேலும், தான் தேர்தலில் நிற்கவே ராணுவத்தின் ஆதரவு தேவை என்பதால், ஒரு இனப்படுகொலையை முழுமையாக வெளிப்படுத்தவோ, கண்டனம் தெரிவிக்கவோ அவருடைய அரசியல் லாப நஷ்டக் கணக்கு இடம்கொடுக்கவில்லை. கொள்கை களைவிடப் பதவியும் அதிகாரமும் சூச்சிக்கு முதன்மையாகப்படுகின்றன. கண்ணெதிரே மற்றுமோர் இனப்படுகொலையை நோக்கி இவ்வுலகம் சென்றுகொண்டிருக்கிறது. அநீதிக்கு எதிரான வார்த்தைகளற்ற மவுனமும் ஒரு இனப்படுகொலைதானே.
- அ.மு. செய்யது, மென்பொறியாளர், சமூக - அரசியல் விமர்சகர்
தொடர்புக்கு: syed.kadhar@fisglobal.com