ரோஹின்ஜா முஸ்லிம்களின் துயரம் என்பது இன்று மியான்மர் எல்லையைத் தாண்டி விரிந்துகொண்டே போகிறது. இந்தப் பிரச்சினையில் தொடர்புடைய நாடுகளின் நிலைப்பாடு, அங்கே ரோஹின்ஜா முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் போன்றவற்றைப் பற்றிய தொகுப்பு இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.
மியான்மர்
மியான்மரில் வசிக்கும் மக்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ரோஹின்ஜா முஸ்லிம்கள் என்று அடையாளம் காணப்படுகின்றனர். இவர்கள் ராக்கைன் என்ற மாநிலத்தில்தான் அதிகமாக வசிக்கின்றனர். முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வு விரவிக்கிடப் பதால் அடிக்கடி அவர்கள் விரோதிகளாகப் பார்க்கப்பட்டு கடுமையாக நடத்தப்படுகின்றனர். அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அரசு நினைக்கவில்லை என்று கூறினாலும், அரசின் கொள்கைகள் தங்களை விரட்டுகின்றன என்று ரோஹின்ஜாக்கள் கூறுகின்றனர். கூட்டம் கூட்டமாக மக்கள் வெளியேறுவதை உள்ளூர் அதிகாரிகள் ஊக்குவிப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
தாய்லாந்து
ரோஹின்ஜாக்கள் அகதிகளாக வெளியேறுவதற்கான கேந்திரமாக தாய்லாந்து இருக்கிறது. உள்ளூர் அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு இருக்கிறது. மலேசிய எல்லைக்கு அருகில் உள்ள ரகசிய முகாம்களுக்கு அகதிகளை ஆள் கடத்தல் இடைத்தரகர்கள் அழைத்துச் செல்கின்றனர். தாய்லாந்து எல்லையில் மிகப் பெரிய சவக்குழி கண்டுபிடிக்கப் பட்டதால் தர்மசங்கட நிலை அடைந்த தாய்லாந்து அரசு, ஆள் கடத்திகள் மீது கடும் நடவடிக்கை எடுத்துவருகிறது. இதனால், அகதிகளை ஏற்றிச்செல்லும் படகுகள், பிடிபடாமல் இருப்பதற்காக தாய்லாந்து கரையைத் தொடாமல் கடலிலேயே நிற்கின்றன அல்லது மலேசியா, இந்தோனேசியாவுக்குச் செல்கின்றன. அகதிகள் படகுகளுக்குத் தங்களுடைய கடற்படை, உதவிகளைச் செய்யும் என்று தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது. கரையில் அகதிகளுக்கு முகாம்களை அமைப்பதற்குக்கூட அது தயாராக இருக்கிறது. ஆனால், அவர்கள் தங்கள் நாட்டில் நிரந்தரமாகத் தங்குவதை அது ஏற்கவில்லை.
மலேசியா
இந்தப் பிராந்தியத்திலேயே செல்வந்த நாடு மலேசியாதான். பயிற்சி பெறாத தொழிலாளர்களுக்கு அங்கு பற்றாக்குறை. எனவேதான், அகதிகள் மலேசியாவுக்குக் குறிவைத்துச் செல்கிறார்கள். ஆயிரக் கணக்கானவர்கள், அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் உடனே ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். ஆனால், அவர்களை நாடற்றவர்கள் என்றோ, சட்டவிரோதக் குடியேறிகள் என்றோ வகைப்படுத்துகிறார்கள். ரோஹின்ஜாக்கள் மலேசியாவில் சுகாதாரக் கேடான குடியிருப்புகளில்தான் வசிக்கிறார்கள். அதுமட்டு மல்லாமல், மோசமான சுரண்டலுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். பாரபட்சமாக நடத்தப்படு கிறார்கள். உயிருக்கு ஆபத்தான, கீழ்நிலைப் பணிகளில் குறைந்த கூலிக்கு அவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அனுமதியில்லாமல் கடல்வழியே படகுகளில் வரும் அகதிகளை அனுமதிக்கக் கூடாது என்று மலேசிய அரசு உத்தரவிட்டிருக்கிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மட்டுமே அகதிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். மே 20-ல் நடந்த பேச்சில் கடலில் தவிக்கும் 7,000 அகதிகளுக்கு மட்டும் தற்காலிகத் தங்குமிடம் உள்ளிட்ட வசதி களை அளிப்பதாகக் கூறிய மலேசியா, ஓர் ஆண்டுக்குள் அவர்கள் வேறு எங்காவது குடியமர்த்தப்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.
இந்தோனேசியா
இந்தோனேசியா முஸ்லிம் நாடாக இருந்தாலும், ரோஹின்ஜா அகதிகள் முஸ்லிம்களாக இருந்தாலும் சட்டவிரோதமாகத் தங்களுடைய நாட்டுக்கு அவர்கள் வரக் கூடாது என்று கூறிவிட்டது. மத்திய கிழக்கிலிருந்து கடல் வழியாகப் படகுகளில் வரும் அகதிகள் ஆஸ்திரேலியா செல்லும் வழியில் தங்களுடைய நாட்டுக்கு அதிக எண்ணிக்கையில் வருவதால் ஏற்படும் பிரச்சினையே பெரிதாகிவிட்டது இந்தோனேசியாவுக்கு. அந்நாட்டுக் கடற்படை, கடல் பகுதியில் விழிப்போடிருந்து தங்கள் நாட்டை நோக்கி வரும் படகு களைத் திசை திருப்பிவிடுகிறது. ஒரு சமயம் அப்படி வந்த படகில் எரிபொருள் தீர்ந்துகொண்டுவருகிறது, அகதிகள் பட்டினியாக இருக்கிறார்கள் என்று தெரிந்ததும் எரிபொருள், உணவு, குடிநீர் ஆகியவற்றை அளித்துத் திசைதிருப்பி அனுப்பியது. மே 20-ல் நடந்த பேச்சில் பங்கேற்ற இந்தோனேசியாவும் கடலில் தவிக்கும் 7,000 அகதி களுக்கு உணவு, குடிநீர், தற்காலிகத் தங்குமிடம் அளிப்பதாகவும் பிறகு அவர்கள் வேறிடங்களில் தங்கவைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
வங்கதேசம்
ரோஹின்ஜா முஸ்லிம்கள் மியான்மர், வங்கதேசம் ஆகிய இருநாடுகளிலும் எல்லைப் புறத்தில் வசிக்கிறார்கள். 2 லட்சம் அகதிகள் வங்கதேச முகாம்களில் வசிக்கிறார்கள். சுகாதாரக் கேடான நிலையில் முகாம்கள் இருக்கின்றன. மியான்மர் அரசு கூறுவதைப்போல ரோஹின்ஜா முஸ்லிம்கள் வங்கதேசிகள் அல்ல என்று வங்கதேச அரசு கூறுகிறது. வங்க தேசிகளும் வேலை தேடி நாட்டின் தென் பகுதியை நோக்கிச் செல்கிறார்கள். ரோஹின்ஜா முஸ்லிம் அகதிகளை ஏற்றிவரும் அதே படகுகளைப் பயன்படுத்தித்தான் வங்கதேசிகளும் தெற்கு நோக்கிச் செல்கிறார்கள்.
© 'தி நியூயார்க் டைம்ஸ்', சுருக்கமாகத் தமிழில்: சாரி