எஸ். சசிதரன்
பல நூற்றாண்டுகளாக திட்டமிடப் பட்ட தெலுங்கு கங்கை திட்டம் சாத்தியமாக சாதகமான அரசியல் சூழல் 1983-ல்தான் ஏற்பட்டது. அப் போதைய பிரதமரும், காங்கிரஸ் தலை வருமான இந்திரா காந்தி 25.5.1983 அன்று திட்டத்தைத் தொடக்கிவைத்தார். இதன் அரசியல் பின்னணி சுவாரசியமானது.
அதற்கு முந்தைய தேர்தலில் எலி யும், பூனையுமாக இருந்த அதிமுகவும், காங்கிரஸும் இந்த விழாவில் இணைந் ததை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
தெலுங்கு கங்கை திட்டம் தொடங்கு வதற்கு முன் 1980, மே மாதம் நடை பெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர் தலில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக வுடன் இ.காங்கிரஸ் கூட்டணி அமைத் திருந்தது. அதிமுக ஆட்சியை காங்கிரஸ் கலைத்ததாலேயே அந்தத் தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால், திமுக- இ.காங் கூட்டணியை வீழ்த்தி மீண்டும் அதிமுக கூட்டணியே ஆட்சியைப் பிடித்தது.
தமிழகத்தில் 1976 முதல் 1984 வரை திமுக, அதிமுக என தனது ஆதரவு நிலைப் பாட்டை இந்திரா காந்தி மாற்றியபடியே இருந்தார்.
1975-ல் அவசர நிலைப் பிரகட னத்துக்கு அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி கடும் எதிர்ப்புத் தெரிவித் ததைத் தொடர்ந்து, திமுக ஆட்சியை டிஸ்மிஸ் (31-1-1976) செய்தார் இந்திரா காந்தி. பின்னர், 1977-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் காங் கிரஸ் படுதோல்வியடைந்தது. ஆனால், தமிழகத்தில் மட்டும் அதிமுக கூட்டணி யில் 14 இடங்களை காங்கிரஸ் பெற்றது.
தனது செல்வாக்கால்தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது என்றெண்ணியதாலும், காங்கிரஸுக்கு கடும் எதிர்ப்பு இருந்த தாலும், 1977 ஜூனில் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணியை எம்ஜிஆர் தொடரவில்லை. இது, காங்கிரஸுக்கு ஆத்திரமூட்டியது. எனினும், அதிமுக வென்று எம்ஜிஆர் முதல் முறையாக முதல்வரானார்.
இதற்கிடையே, மக்களவை இடைத் தேர்தலில் இந்திரா காந்தி வென்றதை மொரார்ஜி தேசாய் அரசு ரத்து செய்தது. அந்தச் சூழலில் தஞ்சாவூரில் (எஸ்.டி.எஸ். அமைச்சரானதால் ராஜி னாமா செய்தார்) மக்களவை இடைத்தேர் தல் நடத்த வேண்டியிருந்தது. அங்கு போட்டியிட இந்திரா காந்தி விரும்பினார். ஆனால், பிரதமர் மொரார்ஜி தேசாய், எம்ஜிஆரை அழைத்து, இந்திரா காந்தியை ஆதரிக்கக் கூடாது என்று கூறி விட்டார். இதனால், காங்கிரஸ் ஏமாற்ற மடைந்தது.
1979 இறுதியில் சரண்சிங் தலைமை யிலான மத்திய அரசு கலைக்கப்பட்டு, 1980-ல் தேர்தல் நடந்தபோது, தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது காங்கிரஸ். இந்தக் கூட்டணி, ஆளும் அதிமுக-வைவிட அதிக இடங்களைப் பெற்றது. மத்தியில் ஆட்சியையும் பிடித்தார் இந்திரா காந்தி. தொடர்ந்து, 17-2-1980 அன்று எம்ஜிஆர் ஆட்சியை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்தது.
சென்னைக்கு கிருஷ்ணா குடிநீர்த் திட்டப் பணிகளை தொடங்கிவைக்கும் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. உடன் அப்போதைய தமிழக முதல்வர் எம்ஜிஆர், ஆந்திர முதல்வர் என்.டி. ராமாராவ், தமிழக ஆளுநர் சுந்தர்லால் குரானா.
அதற்குப் பிறகு மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ்- திமுக கூட்டணியைத் தோற் கடித்து எம்ஜிஆர் மீண்டும் முதல்வ ரானார். தனது ஆட்சியைக் கலைத்த இந்திரா காந்தியை வைத்தே அடுத்த 3 ஆண்டுகளில் தெலுங்கு கங்கை திட்டத்துக்கு அவர் அடிக்கல் நாட்டியது அரசியல் அதிசயம்தான். இருப்பினும், தெலுங்கு கங்கை திட்டத்துக்கு அப்போதைய ஆந்திர முதல்வர் என்டிஆரின் ஒத்துழைப்பும் முக்கிய காரணம். 1982-ல் அரசியலில் குதித்த என்டிஆர், “எம்ஜிஆர் எனக்கு வழிகாட்டி. அண்ணனைப் போன்றவர். அவரைப் பின்பற்றியே அரசியலுக்கு வந்தேன்,” என்று அறிவித்து, கட்சி தொடங்கிய 9 மாதங்களில் ஆட்சியைப் பிடித்தார். தன் மீது மிகுந்த மதிப்பை வைத்திருந்த என்டிஆர் ஆட்சியைப் பிடித்ததும், தெலுங்கு கங்கை திட்டத்தைச் செயல் படுத்தும் யோசனையை முன்வைத் தார் எம்ஜிஆர். என்டிஆரும் ஒப்புக் கொண்டார் . இரு மாநிலங்களுக்கிடை யே யான திட்டம் என்பதால் மத்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டியிருந்தது.
இதுகுறித்து அப்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
1976-ல் திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்தபிறகு, சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய இந்திரா காந்தி, “ஆந்திரம் (சென்னாரெட்டி), கர்நாடகம் (தேவராஜ் அர்ஸ்), மகாராஷ்டிரம் (வசந்த்தாதா பட்டீல்) ஆகிய மாநிலங்களின் முதல்வர்களோடு பேசி, கிருஷ்ணா நீரை சென்னைக்குக் கொண்டு வருவதற்கு சம்மதம் பெற்றிருப் பதாக அறிவித்தார். இந்நிலையில், 1980-ல் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி அமைந்தது.
அத்தேர்தலில் திருப்பத்தூர் மாவட் டத்தில் வென்ற காங்கிரஸ் எம்எல்ஏ அருணகிரி உயிரிழந்தார். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் வென்ற தொகுதி என்பதால், அந்தக் கட்சியை சேர்ந்த உறுப்பினரே மீண்டும் வெல்வதே சரி என்று கூறி அங்கு வேட்பாளரை எம்ஜிஆர் நிறுத்தவில்லை. ஆனால், காங்கிரஸின் கூட்டணி கட்சித் தலைவரான கருணாநிதி, காங்கிரஸுக்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டார். அந்தத் தேர்தலில் அதிமுக ஆதரவால் காங்கிரஸ் வென்றது. அதன்மூலம் காங்கிரஸும்- அதிமுகவும் நெருங்க ஆரம்பித்தன. அதற்கு அடுத்த 3 ஆண்டுகளில் சென்னையில் தெலுங்கு கங்கை திட்டத்தை இந்திரா காந்தி தொடங்கிவைத்தார் என்றார்.
சென்னைக்கு கிருஷ்ணா குடிநீர்த் திட்டத் தொடக்க விழாவுக்காக நேரு விளையாட்டரங்கின் மேடையில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகை. (கோப்புப் படம்)
வி. சாரதா
நீர்த்தேக்கங்களில் ‘டெட் ஸ்டோரேஜ்’ மற்றும் எம்டிடிஎல் என்ற சொற்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ‘டெட் ஸ்டோரேஜ்’ என்பது நீர்த்தேக்கத்தில் குறைந்தபட்ச உயரத்தில் உள்ள வடிகால்வாய்க்கும் கீழுள்ள நீர் இருப்பின் அளவாகும். இந்த அளவு நீர் இருந்தால் அதை வடிகால்வாய்கள் மூலம் வெளியேற்ற முடியாது. மிகவும் அவசியமெனில், பம்ப் செய்து நீரை எடுத்துக் கொள்ளலாம்.
இதேபோல், நீர்மின் திட்டங்கள் செயல்படுத்தப் படும் அணைகளில், நீர் எடுக்கப்படுவதற்கான குறைந்தபட்ச அளவே எம்டிடிஎல் (minimum draw down level) ஆகும். இந்த அளவுக்கு கீழுள்ள நீரை மின் திட்டங்களுக்கு பயன்படுத்துவதில்லை. பாசனத்துக்கும் குடிநீருக்கும் மட்டுமே பயன்படுத்தலாம். ‘டெட் ஸ்டோரேஜு’க்கும், எம்டிடிஎல்-க்கும் இடையில் உள்ள நீரின் அளவு இடையக சேமிப்பு (buffer storage) எனப்படுகிறது.
அணைகளில் ‘டெட் ஸ்டோரேஜ்’- தற்போதைய அளவு என்ற அடிப்படையில் விவரம்:
ஸ்ரீசைலம்: 54 டிஎம்சி - 30.7 டிஎம்சி
சோமசீலா: 7 டிஎம்சி - 11.12 டிஎம்சி
கண்டலேறு: 8.4 டிஎம்சி - 8.39 டிஎம்சி
கி. கணேஷ்
கிருஷ்ணா நீரில், நமக்குரிய 15 டிஎம்சியில் இழப்பு போக 12 டிஎம்சி நீர் மட்டுமே எல்லைப் பகுதியில் நமக்கு கிடைக்கிறது. இச்சூழலில் மேலும் நீர் இழப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக கால்வாய் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கண்டலேறு- பூண்டி கால்வாயில் ஜீரோ பாயின்ட்டில் இருந்து பூண்டி வரையிலான பகுதிகளில் கால்வாயின் இருபுறமும் உள்ள சாய்தள கரைப் பகுதியில் உடைப்பெடுத்து நீர் வீணாகியது. அதைச் சீரமைக்கவும், கால்வாயின் மேல் பகுதியை அகலமாக்கவும் சத்யசாய் டிரஸ்ட் சார்பில் ரூ. 200 கோடி வழங்கப்பட்டு, கால்வாய் பலப்படுத்தப்பட்டது. பின்னர், 2013-லிலும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது, ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்ட்- பூண்டி வரையிலான 25.275 கிமீ நீள கால்வாயில், 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மீண்டும் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க ரூ. 18.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் விரைவில் இறுதி செய்யப்பட்டு பணிகள் தொடங்கவுள்ளன.
தவிர, மீண்டும் சேதம் ஏற்படாமல் தடுக்க கால்வாயின் இருபுறமும் கால்வாயின் ஆழத்தைவிட கூடுதல் ஆழத்துக்கு சுவர் எழுப்பும் திட்டமும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
பூண்டி நீர்த்தேக்க மதகு சீரமைப்பு..
சென்னையின் குடிநீர் பஞ்சத்தை தீர்க்க வந்த முதல் நீர்த்தேக்கமாக அறியப்படும் பூண்டி என்றழைக்கப்படும் சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் 16 மதகுகள் உள்ளன. இவை 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படாமல் இருப்பதை கருத்தில் கொண்டு, ரூ. 3.25 கோடியில் மதகுகளைச் சீரமைத்து பழுதுகளை நீக்கும் பணியில் பொதுப்பணித் துறை பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணிகள் விரைவில் முடியும் என்று பொதுப்பணித் துறை நீர்வளப் பிரிவு அதிகாரிகள் கூறினர்.
டி. செல்வகுமார்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம் பரம்பாக்கம் ஏரி பல்லவர் ஆட்சிக் காலத்தில் கட்டப் பட்டது. புழல், சோழவரம் ஏரிகள் 1876-ல் கட்டப்பட்டன. பூண்டி ஏரி மட்டும் பின்னாளில் (1944) கட்டப்பட்டது.
பூண்டி ஏரியைக் கட்ட அரும் பாடுபட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சத்தியமூர்த்தி, ஏரியைக் கட்டி முடிக்கும் போது உயிருடன் இல்லை. காமராஜ ரின் வேண்டுகோளின்பேரில் பூண்டி ஏரிக்கு, சத்தியமூர்த்தி சாகர் என பெய ரிடப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத் தில் கொசஸ்தலையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது பூண்டிக்கும் காரனோடைக்கும் இடையே அமைந் துள்ள தாமரைப்பாக்கம் அணைக் கட்டில் இருந்து தண்ணீர் திருப்பி விடப்பட்டு சோழவரம், புழல் ஏரிகளில் நிரப்பப்பட்டது. அதன்பிறகும் பெருமளவு வெள்ள நீர் கடலில் கலந்தது. அவ்வாறு கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரை சேமிப்பதற்காக தாமரைப்பாக்கம் அணைக்கட்டு மேல் பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 1939-ம் ஆண்டு தொடங்கி 1944-ல் பூண்டி ஏரி கட்டி முடிக்கப் பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த ஏரிகளின் கொள்ளளவு அதிகரிக் கப்பட்டது.
தெலுங்கு கங்கை திட்ட காலமான 1983-1996 காலக்கட்டத்தில் தலா ரூ. 25 கோடி செலவில் புழல் ஏரியில் 675 மில்லியன் கனஅடி, செம்பரம்பாக்கம் ஏரியில் 525 மில்லியன் கனஅடி, பூண்டி ஏரியில் 450 மில்லியன் கனஅடி கொள் ளளவு அதிகரிக்கப்பட்டது.
2012-14 ஆம் ஆண்டுகளில் சோழ வரம் ஏரியில் ரூ. 50 லட்சம் செலவில் 100 மில்லியன் கனஅடி கொள்ளளவு அதிகரிக்கப்பட்டது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழ வரம் ஆகிய நான்கு ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,057 மில்லியன் கனஅடி (11 டிஎம்சி). நாடு சுதந்திரம் அடைந்த பிறகு சென்னை குடிநீருக்காக, தேர் வாய் கண்டிகை என்ற புதிய நீர்த்தேக்கம் கட்டப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே கண்ணன் கோட்டை, தேர்வாய் கண்டிகை ஆகிய கிராமங்களில் உள்ள இரண்டு ஏரிகளை இணைத்து ரூ.330 கோடி செலவில் தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் கட்டப்படுகிறது. 0.5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில், ஆண்டுக்கு 1 டிஎம்சி (ஆயிரம் மில்லியன் கனஅடி) கிருஷ்ணா நீரைத் தேக்கிவைக்க முடியும்.
0.5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில், ஆண்டுக்கு 1 டிஎம்சி கிருஷ்ணா நீரைத் தேக்கிவைக்க முடியும்.
சென்னையின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமாகா தலைவர் ஜி.கே. வாசன் ‘தி இந்து’-விடம் கூறியதாவது:
மக்கள் தொகை கூடும்போது தண்ணீர் தேவையும் அதிகரிக்கிறது. எனவே, தண்ணீர்த் தேவையை நிறைவு செய்யும் வகையில் தமிழக அரசு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்த வேண்டும்.
கிருஷ்ணா நீர் வீணாகாமல் முழுமையாக கிடைக்க செய்ய வேண்டும். ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி சீரமைக்க வேண்டும். புதிய ஏரி, குளங்கள் உருவாக்குவதுடன், மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சிக்கு விடுவதற்கு ஆய்வு செய்ய வேண்டும். சென்னையைச் சுற்றி ஆழ்துளை கிணறுகள் மூலம் கூடுதல் தண்ணீர் பெற வேண்டும். தமிழகத்தில் உள்ள ஆறுகளை இணைப்பதுடன், கடலில் வீணாக கலக்கும் நீரைத் தேக்கி சேமிக்க வேண்டும். இவற்றுக்கான திட்டங்களை தமிழக அரசு வகுக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு முழு நிதியையும் மானியமாக வழங்க வேண்டும்.
தமிழக மக்களின் முக்கிய தேவையான தண்ணீர் பற்றி ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் கடந்த சில நாட்களாக கட்டுரை வெளியிட்டு வருவது நல்ல முயற்சி என்றார்.