சிறப்புக் கட்டுரைகள்

கிருஷ்ணாவின் பயணம்: உயிரைப் பணயம் வைத்து தெலுங்கு கங்கை ஆய்வு

செய்திப்பிரிவு

உயிரைப் பணயம் வைத்து தெலுங்கு கங்கை ஆய்வு - ஆந்திர நீர்வளத் துறை அதிகாரியின் அனுபவம்

- வி.சாரதா

தெலுங்கு கங்கை திட்டத்தில் கால்வாய் அமைப்பதற்கான குழுவில் இளம் பொறியாளராக இருந்து, தற்போது தலைமைப் பொறியாளராக பணியாற்றி வருகிறார் ஏ. சுதாகர். இவரது மேற்பார்வையில்தான் சோமசீலா, கண்டலேறு அணைகள், கண்டலேறு பூண்டி கால்வாய் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் உள்ளன. அவர் இத்திட்டத்துடனான தனது நீண்ட அனுபவங்களை ‘தி இந்து’-விடம் பகிர்ந்து கொண்டார்.

தெலுங்கு கங்கை திட்டத்தில் எப்படி இணைந்தீர்கள்?

1978-ல் திருப்பதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் எம்.டெக் படித்து முடித்தேன். ஜூலை மாதத்தில் மெட்ராஸ் நீர் விநியோக ஆய்வுத் திட்டத்தில், கடப்பா வட்டத்தின் முதல் இளநிலைப் பொறியாளராக 21 வயதில் சேர்ந்தேன். 16 பேர் கொண்ட ஆய்வுக் குழுவில் 4 பேர் என்னுடன் படித்தவர்கள். 1978-ல் ஆந்திர அரசின் உத்தரவின்படி, அப்போதைய தலைமைப் பொறியாளர் என்.வி. முத்தைய கிருஷ்ண செட்டி தலைமையில் தெலுங்கு கங்கை வழித்தடத்தை ஆய்வு செய்யும் பணி, பானக செர்லா நீர்போக்கியிலிருந்து அக்டோபர் மாதம் தொடங்கியது.

வழித்தடத்தை முடிவு செய்தது எப்படி?

எங்கள் ஆய்வின்போது, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1958-ல் மெக்கின்சி என்ற பொறியாளர் ஆய்வு செய்து பதித்திருந்த கிருஷ்ணா- பெண்ணாறு திட்டத்தின் அலைன்மெண்ட் கற்களை (பாதை வழி காட்டும் கற்கள்) கண்டெடுத்தோம். மிகவும் அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் செல்லும்போது அடுத்த அடியில் என்ன இருக்கிறது என்பது தெரியாது. 10 அடி நடந்தாலே வந்த பாதை மறைந்துவிடும். சுண்ணாம்பு வைத்து பாதையைக் குறித்த படியே நடந்தோம்.

திட்டம் எங்கே தொடங்கி எங்கே முடிய வேண்டும் என்பது மட்டுமே தெரியும். ஆய்வு மற்றும் வரை பட ஆவணங்களை தயாரிக்கும் ‘சர்வே ஆப் இந்தியா’விடமிருந்து நாங்கள் செல்ல வேண்டிய நிலப்பரப்பின் தகவல்கள் கிடைத்தன. அதன் உதவியோடு, கால்நடையாகப் பயணம் செய்து மேடு, பள்ளம், மண் தன்மை ஆய்வு ஆகியவற்றை மேற்கொண்டு கால்வாய்க்கான பாதையை அமைத்தோம்.

காடுகளுக்குள் பயணம் எப்படி இருந்தது?

கல்லூரி நண்பர்கள் உடனிருந்ததும், இளம் வயதும் எங்களுக்கு ஒரு திகிலான, சுவாரசியமான பயண உணர்வைக் கொடுத்தது. இன்னொரு தருணத்தில் சிறுத்தை மிக அருகில் வந்தும் தப்பித்தோம். ஒரு துண்டுத் துணியை மட்டுமே உடுத்தி, காய்கறிகள் உண் ணாமல், மாமிச உணவை மட்டும் உண்ணும் பழங்குடிகளை சந்தித்தோம். முதலில் எங்கள் மீது கோபமடைந்த பழங்குடிகள் பிறகு நண்பர்களாகிவிட்டார்கள்.

கால்வாய் வெட்டும் பணிகள் குறித்து..

1980-களில் நவீன இயந்திரங்கள் கிடை யாது. அனைத்து வேலைகளையும் தொழிலாளர்களே செய்தனர். குறிப்பாக, போத்திரெட்டிபாடு நீர்போக்கியிலிருந்து கட்டப்பட்ட பிரதான கால்வாய் முழுவதும் தொழிலாளர்களால் கட்டப்பட்டது. 12 மணி நேரத்துக்கு ரூ. 4 கூலி. தொழி லாளர்கள் உயிரைப் பணயம் வைத் துத்தான் உழைத்தார்கள்.

1996-ல் முதன் முறையாக நீர் திறந்தபோது எப்படி உணர்ந்தீர்கள்?

20 ஆண்டு உழைப்புக்கு பலன் கிடைத்த போது, மிகவும் சந்தோஷமாக இருந்தது. நாங்கள் பட்ட துயரங்கள் எல்லாம் பறந்து போயின.

தெலுங்கு கங்கை திட்ட கால்வாய்களை அகலப்படுத்த முடியுமா?

இத்திட்டத்தின் மூலம், தேவையான அளவு மட்டுமே நீர் வழங்கப்பட்டு வருவதால், கால்வாயை அகலப்படுத்துவது அவசியமும் இல்லை, சாத்தியமும் இல்லை. கால்வாய் பராமரிப்புக்காக, 2015 ஏப்ரல் முதல் மார்ச் 2016 வரை ஒவ்வொரு மாதமும் ரூ. 10 கோடி தருவதாக தமிழகம் ஒப்புக்கொண்டுள்ளது.

*

கிருஷ்ணா வருகைக்கு முன்பும், பின்பும்

-டி.செல்வகுமார்

சென்னைக்கு வடகிழக்கு பருவமழைக் காலமான அக்டோபர், நவம்பர் மாதங்களில் கூடுதலான மழைநீர் கிடைக்கிறது. அந்த மழை பொய்த்துவிட்டால் அடுத்த 6 மாதங்களுக்கு திண்டாட்டம்தான்.

1986-ல் பருவமழை பொய்த்ததால் ஏரிகள் வறண்டுபோயின. நிறம் மாறி நாற்றம் அடித்த தண்ணீரை முதல் முறையாக அதிக செலவு பிடிக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுத்திகரித்து விநியோகித்தனர். 1993-ல் பருவமழை மீண்டும் பொய்த்து, தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. லாரிகள், டிராக்டர்கள், ரயில்கள் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

மீஞ்சூர், பஞ்சட்டி, தாமரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் விவசாய போர்வெல்களில் இருந்து தண்ணீர் எடுத்துவரப்பட்டு, ஒரு குடும்பத்துக்கு 5 குடம் மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டது. அந்த ஆண்டுதான் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்வது முதல் முறையாக நிறுத்தப்பட்டது.

சென்னைக்கு கிருஷ்ணா நீர் 29-9-1996 அன்றுதான் முதன் முதலில் வந்தது. தெலுங்கான மாநில பிரிவினை போராட்டம், ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம், சோமசீலா, கண்டலேறு அணைகளில் குறைவான நீர் இருப்பு, தெலுங்கு கங்கை கால்வாய் பராமரிப்புப் பணிகள் போன்ற காரணங்களால் 2003-ம் ஆண்டில் மட்டும் சென்னைக்கு கிருஷ்ணா நீர் வந்து சேரவில்லை. இருப்பினும், நிலத்தடி நீர், புறநகர் பகுதிகளில் இருந்து லாரிகளில் தண்ணீர் எடுத்து வரப்பட்டு நிலைமை சமாளிக்கப்பட்டது.

இப்போது தெலுங்கான மாநிலம் பிரிக்கப்பட்டுவிட்ட நிலையில், கிருஷ்ணா நதி நீரில் சமபங்கு உரிமை இருப்பதாக கூறி அதைப் பெறும் முயற்சியிலும் அம்மாநில அரசு இறங்கியிருக்கிறது. இருப்பினும், தேசிய நீர்க் கொள்கையின்படி சென்னைக்கு கிருஷ்ணா நீர் வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்று கூறப்படுகிறது.

சென்னை குடிநீர் வாரிய முன்னாள் தலைமைப் பொறியாளர் எஸ். சுந்தரமூர்த்தி கூறும்போது, ‘1993-94 இல் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பெரும் சிரமப்பட்டோம். அந்த காலக் கட்டத்தில் சென்னையில் தினமும் பல்லவன் பஸ்கள் 10 ஆயிரம் டிரிப்கள் இயக்கப்பட்டன. ஆனால், தண்ணீர் லாரிகள், டிராக்டர்கள் 18 ஆயிரம் டிரிப்கள் ஓடின. கிருஷ்ணா நதி நீர் சென் னைக்கு வந்தபிறகு அத்தகைய நிலைமை ஏற்படவில்லை’ என்றார்.

‘நீரைத் தேக்க போதிய கட்டமைப்பு இல்லை’

- தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

தமிழக மக்கள் மீது கொண்டிருந்த அளவற்ற அன்பின் அடையாளமாக, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் முயற்சியால், சென்னைக்கு கிருஷ்ணா குடிநீர் வழங்கும் திட்டம் 1983-ல் தொடங்கப்பட்டது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.057 டிஎம்சி. ஆனால், சென்னைக்கு ஆண்டுதோறும் 12 டிஎம்சி கிருஷ்ணா நீர் வழங்க வழிசெய்யப்பட்டுள்ளது. இதை முழுமையாக தேக்கி வைக்கவோ, சுத்திகரிப்பு செய்து பயன்படுத்தவோ நம்மிடம் போதிய கட்டமைப்புகள் இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது. சென்னை மாநகர் மக்கள் தொகை 1 கோடியை நெருங்கும் நிலையில், குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க எவ்வித புதிய திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை.

இச்சூழலில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் சென்னை மாநகர மக்களின் அடிப்படை பிரச்சினையாகக் கருதப்படுகிற குடிநீர் சம்பந்தமான கட்டுரைகளை, குறிப்பாக கிருஷ்ணா நதி நீர் திட்டம் குறித்த கட்டுரையை வெளியிடுவது பாராட்டுக்குரியது. இதுபோன்ற கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டு, தமிழக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

‘ஏரி, குளங்களை தூர்வார வேண்டும்’

- கும்மிடிப்பூண்டி தேமுதிக எம்எல்ஏ சேகர்

ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட் பகுதியை உள்ளடக்கிய கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏ சேகர் (தேமுதிக), கிருஷ்ணா நீர் குறித்து கூறியதாவது:

ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட்டில் இருந்து பூண்டி ஏரி வரையிலான கால்வாயில் பல பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்ததாகத் தெரியவில்லை. சேதத்தாலும் வெப்பத்தாலும் நமக்கு தண்ணீர் வீணாகிறது. இதுபோன்ற பிரச்சினகளில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

2012-ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா, 110 அறிவிப்பின் கீழ் தேர்வாய் கண்டிகை, ராமன்சேரி, திருத்தண்டலம் ஆகிய பகுதிகளில் 3 டிஎம்சி தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால், அதில் மற்ற 2 இடங்கள் கைவிடப்பட்டு, தேர்வாய் கண்டிகையில் மட்டுமே தற்போது பணிகள் நடக்கின்றன. தேர்வாய் கண்டிகையில் இருந்து சென்னக்கு நீர் தருவார்களா அல்லது அருகில் உள்ள ஆலைகளுக்குத் தண்ணீர் தரப் போகிறார்களா எனத் தெரியவில்லை.

எதிர்காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, சென்னையைச் சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரி அவற்றை இணைத்து கிடைக்கும் தண்ணீரை சேமிக்க வேண்டும். இதன்மூலம் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக உயரும் என்றார்.

- சி.கணேஷ்

சென்னை குடிநீர் விநியோகத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய ஆண்டு

- எஸ்.சசிதரன்

சென்னை குடிநீர் வரலாற்றில் குறிப் பாக, கிருஷ்ணா கால்வாய் திட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத் திய ஆண்டாக 2007-ஐ குறிப்பிடலாம்.

1996-ம் ஆண்டில் இருந்து தெலுங்கு கங்கை திட்டக் கால்வாய் வழியாக தமிழகத்தின் ஊத்துக்கோட்டையில் (ஜீரோ பாயின்ட்) நுழையும் கிருஷ்ணா நீர், முதலில் பூண்டி நீர்த் தேக்கத்தை சென்றடையும். அங்கிருந்து, இணைப்புக் கால்வாய், ஃபீடர் கால்வாய் வழியாக செங்குன்றம் நீர்த் தேக்கத்துக்கு (புழல் ஏரி) கொண்டு செல்லப்பட்டு, நகரின் இதர பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.

கிருஷ்ணாவில் இருந்து பெறப் படும் நீரை, சென்னையின் மற்ற ஏரிகளுக்கு நேரடியாகக் கொண்டு செல்ல முடியாத நிலை இருந்தது. அதே போல, சென்னையில் அதிக மழை பொழிந்து ஏரிகள் நிரம்பினாலோ, ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து அதிக தண்ணீர் திறந்துவிடப் பட்டாலோ, பூண்டி மற்றும் செங் குன்றம் நீர்த் தேக்கங்களில் மட்டுமே சேமிக்கும் நிலை இருந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில், பூண்டி நீர்த் தேக்கத்திலிருந்து செம்பரம்பாக்கம் நீர்த் தேக்கத்துக்கு தண்ணீரைக் கொண்டு செல்ல கால்வாய் அமைக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் முடிவெடுத்தனர்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை (நீர்வளத் துறை) அதிகாரிகள் கூறிய தாவது: தெலுங்கு கங்கை திட்டத்தில் அதிக தண்ணீர் வரும்போது சேமித்து வைக்க முடியாத நிலை இருந்ததைக் கருத்தில் கொண்டு, பூண்டி நீர்த் தேக்கத்தில் இருந்து செம்பரம் பாக்கம் நீர்த் தேக்கத்துக்கு இணைப்புக் கால்வாய் அமைக்கும் பணி 1996-1997 ஆண்டில் தொடங்கப்பட்டது.

இந்த இணைப்புக் கால்வாய், கூவம் ஆற்றை தரைக்கு அடியில் கடப் பதற்கான அமைப்பை (சைஃபன்) கட்டு வது சவாலாக இருந்ததால் பணிகள் தாமதமாயின.

2000-ல் கால்வாய்ப் பணி முடிந் தாலும், சுத்திகரிப்பு நிலையம் இல்லாத தால் செம்பரம்பாக்கத்துக்கு நீர் கொண்டு செல்ல முடியாத நிலை இருந்தது.

இதையடுத்து, தமிழக அரசு, வெளிநாட்டு உதவியுடன் ரூ. 256 கோடி யில் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவியது. நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர் குடிநீரைச் சுத்திகரிக்கும் அந்த அமைப்பு, நாட்டிலேயே இரண்டாவது மிகப்பெரிய தாகும். அது 2007-ல் திறக்கப்பட்டது.

அப்போது, பூண்டியிலிருந்து செம் பரம்பாக்கத்துக்கு நேரடியாக நீரை கொண்டு சென்று, விநியோகிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அந்த ஆண்டில் ஆந்திரத்திலும் நல்ல மழை பெய்ததால், அந்த ஆண்டிலேயே (2007), முதல் முறையாக, பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கத்துக்கு கிருஷ்ணா நீர் நேரடியாக கொண்டு செல்லப்பட்டு தேக்கி வைக்கப்பட்டது.

இதேபோல், 2007-ம் ஆண்டில்தான் முதல் முறையாக பூண்டி நீர்த் தேக்கத்தில் இருந்து செங்குன்றம் ஏரி மற்றும் சோழவரம் ஏரிகளுக்கு ஒரே நேரத்தில் நீர் கொண்டு செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது என்றனர்.

பயணிப்போம்..

SCROLL FOR NEXT