போட்ட முதலுக்கு மேல் லாபத்தை ஈட்டக்கூடிய முன்னணி நடிகர் சல்மான் கானை இழக்க நேர்ந்தாலும் நேரும் என்ற உண்மையைப் புரிந்துகொண்டு, பாலிவுட் இப்போது தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கொள்ளத் தயாராகிவிட்டதைப் போலத் தோன்றுகிறது.
சல்மான் கானை கதாநாயகனாக வைத்துப் படம் எடுத்தால் நல்ல லாபத்தைச் சம்பாதிக்கலாம் என்பது நிச்சயமாகி விட்டதால், தனிப்பட்ட முறையில் தங்களுக்கு ஏற்படக்கூடிய பண இழப்புகளை பாலிவுட்டின் பல்வேறு தரப்பினரும் உணர்ந்தே இருக்கிறார்கள். அதனாலேயே அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் கேட்டதும் அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் உள்ளானார்கள். அதனாலேயே அவரை நேரிலும் தொலைபேசியிலும் தொடர்புகொண்டு ஆதரவு தெரிவித்தார்கள்.
49 வயதாகும் சல்மான் கான் கடந்த 5 ஆண்டுகளாகவே வசூல் சக்ரவர்த்தியாகப் படிப்படியாக வளர்ந்துவருகிறார். 2010-ல் 'தபாங்' திரைப்படத்திலிருந்து உச்சத்துக்குச் செல்லத் தொடங்கினார். அந்தப் பட வசூல் 100 கோடி ரூபாயைத் தாண்டியது. 'ஜெய் ஹோ'தவிர, மற்றவை எல்லாம் கடந்த 5 ஆண்டுகளில் வெற்றிப் படங்களே என்று கோமள் நாதா என்ற திரைப்பட வர்த்தக ஆர்வலர் தெரிவிக்கிறார். "தபாங் திரைப்படத்திலிருந்து சல்மான் கானுக்கு என்று ஒரு இமேஜ் ஏற்பட்டுவிட்டது. ரஜினிகாந்தைப் போலத் தனி அந்தஸ்து ஏற்பட்டுவிட்டது. நடிப்பு, நகைச்சுவை, ஒற்றை வரியிலான 'பஞ்ச்'டயலாக்குகள் போன்றவை அவருடைய திரைப்படத்தின் இன்றியமையாத அம்சங்களாகிவிட்டன" என்கிறார் வசனகர்த்தா ஒருவர்.
சல்மான் கான் இப்போது நடித்துவரும் 2 திரைப்படங்களில் இப்போதைக்கு ரூ.175 கோடி முதல் ரூ.200 கோடி வரையில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. 'பஜ்ரங்கி பைஜான்' என்ற திரைப்படத்தை கபீர் கான் இயக்குகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் பணிக்குத் திரும்பியுள்ள சூரஜ் பர்ஜாதியா, 'பிரேம் ரத்தன் தன் பாயோ' திரைப்படத்தை இயக்குகிறார். "நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பதாலும் அவருடைய மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றிருப்பதாலும் இவ்விரு படங்களை அவர் முடித்துக்கொடுப்பதற்கான வாய்ப்பு அதிகமாகியிருக்கிறது" என்கிறார் நாதா.
திரைப்படம் தவிர, வேறு துறைகளிலும் சல்மான் கான் முதலீடு செய்திருக்கிறார். ஆன்-லைன் சுற்றுலாப் பயணப் பதிவு நிறுவனமான யாத்ராவில் 5% பங்குகள் அவருக்கு இருக்கின்றன. சில பண்டங்களுக்கும் சேவைகளுக்கும் அவர் பிராண்ட் அம்பாசடர் என்கிற, பிரபலப்படுத்தும் பிரமுகராகவும் அவர் திகழ்கிறார். அவருக்கிருக்கும் செல்வாக்கு காரணமாக 'பீயிங் ஹியூமன்'நிறுவனத்தின் விற்பனை ஆண்டுதோறும் 40% அளவுக்கு அதிகரி்த்துவருகிறது. பீயிங் ஹியூமன் நிறுவனத்துக்கு 300 சில்லறை விற்பனை நிலையங்கள் இருக்கின்றன. ஆன்-லைன் மூலமும் 7 விற்பனை முனையங்கள் கிடைத்துள்ளன. "சல்மான் கானின் கைது பாலிவுட்டுக்கு மிகப் பெரிய அடி. திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவது குறைந்துகொண்டேவரும் நாளில், அவர் கைது செய்யப்பட்டிருப்பதும் அவருக்கு எதிராகத் தீர்ப்பு கூறப்பட்டிருப்பதும் கவலை அsளிக்கிறது" என்கிறார் திரைப்படத் தயாரிப்பாளர் மகேஷ் பட்.
சதீஷ் நந்த்காவோங்கர், தொடர்புக்கு: satish.nandgaonkar@thehindu.co.in