சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னால் பூமியின் பருவநிலையில் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலகின் சில பகுதிகளில் அதிகமாகப் பனி பொழிந்தது. மண்தரைகள் மூடப்பட்டன. பனிப் பாறைகள் உருவாகின. ஏரிகள் உறைந்தன. அந்தக் காலத்தை ‘சின்னப் பனி யுகம்' என சொல்கிறார்கள்.அப்படிப்பட்ட ஒரு பனிப் பிரதேசம் கனடா நாட்டிலும் உள்ளது. அந்தப் பாறைகள் ஆண்டுக்கு மூன்று முதல் நான்கு மீட்டர் ஆழம் என்ற அளவில் 2004 முதல் மிகவேகமாக உருகிவருகின்றன. அவற்றை ஆராய கனடாவின் அல்பர்டா பல்கலைக்கழகத்தில் இருந்து ஆய்வாளர்கள் போனார்கள். பனி உருகிய பிறகு தெரியும் தரையில் பாசித் தாவரங்களை அவர்கள் பார்த்தனர். அவற்றில் பசுமை மறுபடி மலர்ந்து இருந்ததைப் பார்த்து அதிசயித்த நாள் இன்று. சூரிய ஒளியே காணாமல் 400 ஆண்டுகாலம் இருந்த அவற்றில் எப்படிப் பசுமை என வியந்தனர். அவற்றை ஆய்வகத்துக்கு எடுத்துச்சென்று ஆய்வு செய்தனர். அங்கே அவற்றின் தண்டுகள் வளர்ந்ததையும் கண்டனர்.
பாசித் தாவரங்களில் அவற்றின் எல்லா பாகங்களுக்கும் திரவத்தை எடுத்துச்செல்லும் உறுப்புகள் கிடையாது. அவை பருவகால மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்பவைதான். ஆனால் பனிப் பாறைகளுக்கு அடியில் நூற்றுக் கணக்கான ஆண்டுகள் புதைந்து கிடந்தாலும் அவை மீண்டும் உயிர்த்தெழும் என்பது விஞ்ஞானிகளை ஆச்சரியப்பட வைக்கிறது. பனிப் பாறைகளுக்கு இடையே இருந்து தப்பிய பனிப் பிரதேச உயிரினங்கள் முற்றிலும் வேறுமாதிரி இருப்பதையும் நாம் ஆய்வு செய்ய வேண்டும். வேகமாக உருகிக்கொண்டு இருக்கும் பனிப் பாறைகளுக்கு உள்ளே விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய தனி உலகமே இருக்கிறது என்கிறார் டாக்டர் லா பர்ட்ஸ். பூமியைப் போன்ற உயிர்ச்சூழல் இல்லாத விண்வெளியில் கூட பாசித் தாவரங்கள் வளர முயலுமா என ஆய்வு சிறகடிக்கிறது.
அது மட்டும் நடந்தால் வானமே பசுமைதான்.