சில வாரங்களுக்கு முன்பு பிஹாரில் நடந்த சம்பவம் ஒன்றின் புகைப்படமும் விடியோவும் ஊடகங்களில் வெளியாகி நமக்கு அதிர்ச்சியூட்டின. பள்ளித் தேர்வு நடந்த தேர்வு மையத்தின் கட்டிடத்தில் மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஏறி, விடைகள் அடங்கிய தாள்களை ஜன்னல் வழியாகக் கொடுத்தனர்.
இதற்கு யாரைக் குற்றம்சாட்டுவது? யாரைப் பொறுப்பாக்குவது? இதையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், மனிதர்களின் மதிப்பை அளவிடுவதற்குப் போட்டித் தேர்வுகளும், கல்வித் துறையில் விடைத்தாளை மையங்கொண்ட அணுகுமுறையும் எந்த அளவுக்கு அழுத்தம் கொடுக்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கல்விமுறை, கற்றல், தேர்வுகள், போட்டிகள் போன்றவற்றுக்கு இடையிலான உறவையும் நாம் ஆழமாக உற்றுநோக்க வேண்டும்.
அசலான சுயமும் கல்வியும்
தனிநபர், சமூகம் ஆகியோரின் பொருளாதார முன்னேற்றத்துக்கான கருவியாகவே கல்வியை நாம் கருதுகிறோம். ஆராய்ந்து பார்க்கும் திறன் கொண்ட, ஜனநாயகபூர்வமான குடிமக்களாக இருப்பதற்கு உதவும் கருவியாகவும் கல்வியைச் சில சமயம் நாம் நினைக்கிறோம். அசலான சுயத்தை ஒருவர் உருவாக்கிக்கொள்ள உதவும் வழிமுறையாகக் கல்வியைப் பற்றி நாம் அநேகமாகக் கருதுவதே இல்லை. ‘அசலான சுயத்தை உருவாக்குதல்’ என்பதற்கும் ஆளுமைத் திறன் மேம்பாடு, நெறிசார்ந்த கல்வி போன்றவற்றுக்கும் சம்பந்தமில்லை. பொருளாதாரம், குடிமைத்துவம், ஆளுமை/நெறிகள் ஆகிய கல்வியின் மூன்று குறிக்கோள்களும் முக்கியமானவையே என்றாலும், ஒருவர் அசலான சுயத்தை உருவாக்கிக்கொள்வதில் அவை உதவுவதில்லை. மேலும், அதற்கு எதிராகவும் இவற்றைச் செயல்படுத்த முடியும்.
அசலான சுயம் என்பதன் அடிப்படையான மூன்று பண்புகளாக இவற்றைக் குறிப்பிடுவேன்: சுதந்திரம், நேர்மை, ஒத்திசைவு. அறிவுத் திறன்களைப் போலவே இந்த மூன்று குணங்களும் மிகவும் அவசியம்.
இந்த மூன்று அம்சங்களையும் ஆராய்வோம். முதலில் சுதந்திரம். தனிப்பட்ட முறையிலோ சமூக அளவிலோ ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒருவர் சுயமாகவே சிந்தித்துச் செயல்படுவதைத்தான் ‘சுதந்திரம்’ என்ற சொல் குறிக்கிறது. உலகத்தைப் பற்றியும் அதில் நமது நிலையைப் பற்றியும் மிகுந்த புரிதல் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். இதற்குத் தன்னம்பிக்கையும் சுயமதிப்பும் அவசியம். அதே நேரத்தில், இதெல்லாம் அகம்பாவமாகவோ தான்தோன்றித்தனமாகவோ ஆகிவிடக் கூடாது.
நேர்மை என்பது வெறுமனே சுதந்திரம் மட்டுமல்ல; அதற்கும் மேலே. ஒருவர் தனது அறிவார்த்தமான சிந்தனை களை அவரது செயலிலும் காட்டுவது; இதில் ஒரு ஒழுங்கும் தொடர்ச்சியும் இருப்பது. இப்படியாக ஒருவரின் ஆளுமையில் உள்ள ஸ்திரத்தன்மையை ‘நேர்மை’ என்ற இயல்பு தெரிவிக்கிறது.
ஒத்திசைவு என்பதை ‘அக அமைதி’ என்றும் உருவகப் படுத்தலாம். இன்னமும் துல்லியமாகச் சொல்ல வேண்டு மென்றால் ஒருவருடைய உணர்ச்சி, அறிவு, செயல் ஆகியவற்றுக்கு இடையிலான சமன்பாடுதான் அது. ‘பிளவுறாத நிலை’ என்பதையும் இதனுடன் நான் சேர்த்துக்கொள்வேன். ‘பிளவுறாத நிலை’ என்றால் மனத்தளவில் முற்றிலும் பதற்றமில்லாத நிலை என்று அர்த்தமில்லை. புதுப்புதுச் சூழ்நிலைகளை எப்போதுமே நாம் எதிர்கொள்கிறோம்; அவற்றைச் சமாளிக்க நமது உணர்ச்சிகளையும் அறிவையும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். ஆகவே, மனத்தில் குறிப்பிட்ட அளவு பதற்றம் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கும். ஆனால், இந்தப் பதற்றம் என்பது ஒருவருடைய இயல்புக்கு, அதன் சக்திக்கு உட்பட்டதாக இருக்கும்.
இப்படியான ஒரு தனிநபரின் ஒட்டுமொத்த வளர்ச்சியை அசலான சுயத்தின் உருவாக்கம் என்று சொல்லலாம். தனிநபர் ஒருவர் இப்படியான சுயத்தை உருவாக்கிக்கொள்வதற்கு பிரதானமாக உதவும் வழிமுறையே கல்வி. கல்வியின் உச்சபட்ச லட்சியமும் அதுதான்.
தேர்வுகள்
ஒருவருடைய அசலான சுயத்தின் வளர்ச்சியை அளவிடக்கூடிய எந்த வழிமுறையும் இதுவரை பின்பற்றப்பட வில்லை. இருக்கும் ஒரே பரீட்சை வாழ்க்கை மட்டும்தான். ஒருவருடைய கல்வி வளர்ச்சியை மதிப்பிடுவதற்கான மிகவும் குறுகிய வழிமுறைதான் தேர்வுகள். அசலான சுயத்தை அளவிடுவதைத் தேர்வுகள் ஒருபோதும் உள்ளடக்காது. ஒரு தனிநபர் தற்சமயம் எந்த அளவுக்கு அறிவு பெற்றிருக்கிறார் என்பதைப் பரீட்சிக்கும் அளவில் அவை சுருங்கிவிடுகின்றன. இந்த முறையிலும் நம்பகத்தன்மை இருப்பதில்லை. அறிவு என்பது முற்றிலும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய முழுமை. தேர்வுகளில் செய்வதுபோல் துண்டுதுண்டான தகவல்களைக் கொண்டு அதைப் பரீட்சித்துப்பார்த்துவிட முடியாது.
போட்டி என்பது அன்றாட வாழ்வின் தவிர்க்க முடியாத பிரச்சினையாக மாறிவிட்டது. தேர்வுகளும் சோதனைகளும் அதை மேலும் தீவிரமாக ஆக்கிவிடுகின்றன. ‘வெற்றி’ என்பதைச் சாக்காகக் கொண்டு பள்ளிகள் தனிநபர்களுக்கு இடையிலான போட்டியை ஊக்குவிக்கின்றன. இது 1-ம் வகுப்பிலிருந்தே தொடங்கிவிடுகிறது. ஒரு குழந்தையைக் கொண்டு இன்னொரு குழந்தையை மதிப்பிடுவது என்பதே இங்கு கற்றலின் உந்துசக்தியாக ஆகிவிடுகிறது. இதன் தொடர்ச்சியாக, ஒரு குழந்தை தன்னைப் பற்றிக் கொண்டிருக்கும் மதிப்புக்கு ஈடுகட்ட முடியாத சேதம் ஏற்பட்டுவிடுகிறது. பல சமயங்களில், ஆசிரியர் கையெழுத்திடும் ஒரு துண்டுத் தாள்தான் ஒரு குழந்தையின் மதிப்பு என்றாகிவிடுகிறது. பள்ளிகளில் மாணவர்கள் கிட்டத்தட்ட அறிவுரீதியிலான அடிமைகளாக ஆகிவிடுகிறார்கள். சந்தையில் தங்களுக்குக் கிடைக்கக் கூடிய பெரும் பங்குக்காக ஒருவருக்கொருவர் போட்டி யிடுகிறார்கள். இவர்களது அறிவுத் திறனைச் சோதிக்கும் வழிமுறைகள் நம்பகத்தன்மை அற்றவையாகவும் காலாவதி யானவையாகவும் இருக்கின்றன.
இப்படியாக, கல்வி என்பது, ‘சோதிப்பதற்காகப் போதித்தல்’ என்று ஆகிவிடுகிறது. ஒட்டுமொத்தமாக இதிலெல்லாம் சிக்கி, தனிநபர் என்ற அடையாளமே தொலைந்துபோய்விடுகிறது. இறுதியில் நம் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் மனிதத் திறனின் சிறு பகுதியின் மதிப்புதான். அதுவும் நம்பகத்தன்மை இல்லாத வழிமுறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடே.
சான்றிதழ்தான் ஒருவரின் மதிப்பா?
உலகம் முழுவதிலும் உள்ள கல்விமுறைகள் தனிநபர் களின் மதிப்பை அளவிடப் பயன்படுத்தப்படுபவை. சான்றிதழ்களையும் மதிப்பெண் பட்டியலையும் அவை வழங்குகின்றன. வேலை தரும் நிறுவனங்களோ, மேல்படிப்பு தரும் கல்வி நிறுவனங்களோ அந்த மாணவர்களுடைய திறன்களின் அளவீடாகக் கருதி, அந்த ஆவணங்களை ஏற்றுக்கொள்கின்றன. கண்ணுக்குத் தெரியக்கூடிய திறன்கள் ஒருவருக்கு என்னென்ன இருக்கின்றன என்பதை அடிப்படையாக் கொண்டே சமூகம் தனிநபருக்கு மதிப்பளிக் கிறது. ஆகவே, இந்த ஆவணங்கள் தனிநபரின் மதிப்பு என்ன என்பதைத் தெரிவிக்கும் அளவீடாக ஆகிறது. இப்படியாக ஒரு நபர் அவரது ஆளுமையின் சிறு அளவின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டு முத்திரை குத்தப்படுகிறார்.
இதுபோன்ற சான்றிதழ் முறைகளுக்கு வழங்கப்படும் அளவுக்கதிகமான முக்கியத்துவம்தான் மாணவர்களையும் பெற்றோரையும் ஆசிரியர்களையும் பிடித்துத் தள்ளுகிறது; என்ன வேண்டுமானாலும் செய்து தேவையான, எதிர்பார்த்த நல்ல மதிப்பீட்டைப் பெற வேண்டுமென்று முயல்கிறார்கள். ஆகவே, தேர்வுகளில் முறையற்ற வழிகளைப் பின்பற்றுவது நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கான எளிய வழியாகி விடுகிறது. மாணவரின் ஆளுமையில் சமநிலைக் குலைவை இது ஏற்படுத்திவிடுகிறது. அவரது தர்க்க அறிவு, குணாதிசயம், உணர்வுகளின் ஒத்திசைவு ஆகியவற்றின் வளர்ச்சி முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுகிறது. மதிப்பீட்டு முறைக்கு (தேர்வுக்கு) தேவையான ‘முக்கியமான தகவல்களை’ (விடைகளை) சமர்ப்பிக்கும் திறன் மற்ற எல்லாவற்றையும் மூழ்கடித்துவிடுகிறது. மாணவரின் அசலான ஆளுமை உருவாக்கத்தில் உதவ வேண்டிய கல்வி, இறுதியாக அவரின் ஆன்மாவையே சிதைத்து விடுகிறது.
எல்லாவற்றுக்கும் காரணம், போட்டிக்காகத் தேர்வுவைத்தல் என்பதுதான் என்பதை எல்லோரும் மறந்துவிட்டார்கள். இந்தச் சூழலும், இது போன்ற கல்விமுறையும் ஒரு குழந்தையின் வளர்ச்சியை அப்படியே தடுத்து நிறுத்திவிடுகின்றன. பரீட்சித்துப் பார்க்கக் கூடிய அறிவு என்ற மிகமிகச் சிறிய பகுதியைக் கொண்டு அந்தக் குழந்தையை புரிந்துகொள்ள முயன்றால் அப்படித்தான் ஆகும்.
இதுபோன்ற கல்விமுறைதான் ஒரு குழந்தையின் உள்ளத்தைப் போர்க்களமாக ஆக்குகிறது. இதனால் அதன் சுயம் சுக்குநூறாகிறது. அந்தக் குழந்தையின் ஆசைகள், புரிதல், நல்லியல்புகள், உணர்ச்சிகள் எல்லாமே ஒன்றுக்கொன்று மோதிக்கொள்கின்றன. தங்கள் ஆத்மாவின் எஜமானர்களாக அந்தக் குழந்தைகள் ஆவதற்கு உதவி செய்யாமல், நமது எதிர்பார்ப்புகளின் அப்பட்டமான நகல்களாகவே அவர்களை நாம் ஆக்கிவிடுகிறோம். இந்தியாவில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும், அமெரிக்க மாணவர்கள் அடிக்கடி துப்பாக்கிச் சூடு நிகழ்த்தும் சம்பவங்களும் தற்காலக் கல்வி முறை ஏற்படுத்திய பேதத்தின் நேரடி விளைவுகள் என்றே கருத வேண்டிவருகிறது.
- ரோஹித் தன்கர், பேராசிரியர்,
அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம், பெங்களூரு.
© ‘தி இந்து’ (ஆங்கிலம்), சுருக்கமாகத் தமிழில்: ஆசை