ஆந்திரத்தின் சித்தூர் மாவட்ட வனப்பகுதியில் செம்மரக் கட்டைகளை வெட்ட வந்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளிகள் ஆந்திரக் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளனர். இந்த அதிர்ச்சியூட்டும் படுகொலை மூலம் கட்டமைக்கப்படும் உளவியல் செய்தியானது, ‘அச்சப்படு' என்பது மட்டும்தான். சட்டத்தின் ஆட்சி, தண்டனை வழங்கும் நீதிமன்ற அதிகாரம் என எல்லாவற்றையும் புறக்கணித்துவிட்டு நிகழ்த்தப் பட்டுள்ளது இந்தப் படுகொலை. மனித உயிரின் மதிப்பு என்ன என்பதைக் கேள்விக்குள்ளாக்கிவிட்ட ‘அரச பயங்கரவாதமாகவும்’ இந்த விவகாரம் உள்ளது.
தமிழகத்தின் பழங்குடி மக்களின் மலைவாழ் கிராமங்கள் தொடர்ந்து அரசின் அலட்சியத்தாலும் மாற்றாந்தாய் மனப்பான்மையாலும் புறக்கணிக்கப்பட்ட பகுதியாகிவிட்டது. இந்தியாவிலேயே - அதிக பழங்குடி நிலங்கள் பழங்குடி அல்லாத பிறரால் கையகப்படுத்தப் பட்ட மாநிலம் தமிழகம்தான் என்கின்றனர். பழங்குடி மக்களின் நிலங்களைப் பாதுகாக்கச் சட்டம் இயற்றாத மாநிலமாகவும் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் பழங்குடி மக்களுக்கென உருவாக்கப்பட்ட வன உரிமைச் சட்டத்தின்படி ஒரு பட்டாகூட வழங்காமல், அந்தச் சட்டத்தையே - நீதிமன்ற வழங்குகளைக் காரணம் காட்டி - நடைமுறைப்படுத்தவும் தவறிவிட்டது.
ஐந்தாண்டுத் திட்டத்தில் பழங்குடி மேம்பாட்டுக்கென ஒதுக்கப்படும் தொகையை, பழங்குடி மக்கள் சாராத செலவுகளான நெடுஞ்சாலை அமைத்தல், இலவசங்கள் வழங்குதல் என மடைமாற்றம் செய்துவிடுகிறது அரசு.
இந்நிலையில், வறுமையில் சிக்குண்ட கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம், விழுப்புரம் மாவட்டங் களைச் சேர்ந்த ஜவ்வாதுமலை, ஏலகிரிமலை, சித்தேரிமலை, சேர்வராயன்மலை, அறுநூத்துமலை, கல்வராயன் மலைப் பகுதி மக்களையும் ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப் பகுதியினரையும் குறிவைத்து, சமூக விரோதக் கும்பல் அவர்களை அணுகி, ‘கூலித் தொழிலாளி’களாக இந்த மரம் வெட்டும் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளது.
கூட்டுச் சதி
இம்மக்களுக்கு முன்கடன் கொடுத்தும் குறிப்பிட்ட அளவு மரத்தை அவர்கள் வெட்டித்தர வேண்டும் என நிர்ப்பந்தப்படுத்தியும் கொத்தடிமைகளாக அவர்களைப் பயன்படுத்தியுள்ளது இந்தக் கும்பல். இந்த சமூக விரோதக் கும்பல் பல்வேறு மாநில பணக்காரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்புடனும் காவல் துறை, வனத் துறை கூட்டுடனும் செயல்பட்டு வந்துள்ளது. கடந்த வருடம் இதுபோன்ற மரம் வெட்டிய விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதியின் எஸ்.சிவா, எஸ்.விஜயகாந்த், எஸ்.வெங்கடேசன் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன் ஈரோடு மாவட்டம் பர்கூர் வனப் பகுதியைச் சேர்ந்த மாதன் கடுமையாகச் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதால் உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் பகுதியில் சிலர் கொல்லப்பட்டு வெளியே தெரிவிக்கப்படாமல் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட ஏராளமானோர் இன்றும் சித்தூர், கடப்பா மாவட்டச் சிறைகளில் வாடுகின்றனர். சிலரின் நிலை இதுவரை அவர்களின் குடும்பத்தாரால் அறியப்படாமல்கூட உள்ளது. சில மாதங்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சியில், இது போல மரம் வெட்டச்சென்ற ஒரு தொழிலாளி ஆந்திர வனத் துறையினரால் கடுமையாகத் தாக்கப்படும் வீடியோ பதிவும் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.
சட்ட விரோதச் செயல்
கடந்த 2010 முதல் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட வழக்குகள் இந்த மரக்கடத்தல் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் 3,893 பேர் கைது செய்யப்பட்டுளளதாகவும் அறிய முடிகிறது. இவர்களை அப்பாவிகள் என்றோ, ஏதும் அறியாதவர்கள் என்றோ சொல்லவரவில்லை. ஆனால், இவர்கள் குற்றத்தின் கடைசிப்புள்ளிகள். கதை இவர்களோடு முடியக் கூடாது. முதல் புள்ளிகள் வரை அனைவரையும் சட்டத்தின் பிடியில் கொண்டுவர வேண்டும்.
இந்தக் கொடூர மாஃபியா கூட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள், கடத்தல்காரர்கள், முதலாளிகள், ஏற்றுமதியாளர்கள், இடைத்தரகர்கள் என்று அனைவரையும் சுற்றி வளைக்க வேண்டும். ஆனால், ஆந்திரக் காவல் துறை ‘என்கவுன்டர்’ மூலம் பிரச்சினையை எளிதாக்கப் பார்க்கிறது.
மோதல் நாடகம்
ஆந்திரக் காவல் துறை, மரம் கடத்துபவர்களைச் சுடத் தீர்மானித்துள்ளதைக் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் திருப்பதி வனத் துறை அதிகாரிகள் ஊடகங்கள் வாயிலாக அறிவித்துள்ளனர். அந்த மாநில அரசும் சுடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இது முழுக்க முழுக்கச் சட்ட விரோதச் செயலாகும். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 46-ன்படி, ஒருவரைக் கைது செய்யும்போது, ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை பெறும் குற்றத்தைச் செய்யாதவரை குற்றவாளி என்று சந்தேகப்படுபவரைக் கொன்று பிடிக்கக் கூடாது என்ற பிரிவைத்தான் காவல் துறை தனக்குச் சாதகமாக்கிக்கொள்கிறது. ‘தன்னைத் தாக்க முயன்றபோது தான்’ திருப்பித் தாக்கியதாக, மோதல் நாடகத்தை அது அரங்கேற்றுகின்றது.
இது போன்ற மோதல் சாவுகளில் பெரும்பாலான சமயம் இறந்தவர்களையே குற்றவாளியாகச் சித்தரித்து வழக்கை மூடிவிடுவதை தேசிய மனித உரிமை ஆணையம் கண்டித்துள்ளது. மோதலில் ஈடுபட்ட காவல் துறையினர் மீது கொலை வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும், பாரபட்சமற்ற விசாரணை செய்ய ஏதுவாக சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க வேண்டும்.
அதுவரை சம்பந்தப்பட்ட போலீஸாருக்குப் பட்டம், பதவி வழங்கப்படக் கூடாது என்றும் ஆணையம் வழிகாட்டியது. கடந்த சில மாதங்களுக்கு முன் மும்பை மோதல் சாவுகள்குறித்து பி.யு.சி.எல். தாக்கல் செய்த வழக்கில் இதை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். சட்டத்தின் வழியில் மக்கள் நடக்க முன்னுதாரணமாக முதலில் காவல் துறை சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
மரம் வெட்டுவோர் 20 பேர் படுகொலை செய்யப்பட்டது அரச வன்முறையின் வெளிப்பாடாகவே உள்ளது. காவல் துறை தனக்கு, நீதிசார் நடைமுறையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வழியுள்ளதாகக் கருதுவதும், அதற்கு வழிவகைகள் செய்ய அரசு துணை போவதும் இந்தப் படுகொலைகள் தொடர வழிகோலுகிறது. ஏழைகள் மீது அரசுக்குள்ள இவ்வளவு கோபம், எஜமானர்கள் மீது ஏன் வருவதில்லை என்பதுதான் நாம் கேட்க வேண்டியது.
- ச. பாலமுருகன்,
‘சோளகர் தொட்டி’ என்ற நாவலின் ஆசிரியர்,
தொடர்புக்கு: balamuruganpucl@gmail.com