மேல்குப்சனூர் கிராமம். ஜவ்வாது மலையின் உச்சியில் சுமார் 1,100 அடி உயரத்தில் இருக்கிறது. அவ்வளவு உயரத்திலும் நெருப்பாய் வெயில் கொதிக்கிறது. ‘பட்டாம்பூச்சி விளைவு’ போலக் கொளுத்தும் வெயிலுக்கும் இப்போது நடந்த 20 பேரின் கொலைக்கும் முடிச்சுப் போட முடியும் என்று தோன்றுகிறது.
இங்கென்று இல்லை, கல்வராயன் மலை, ஏற்காடு, ஜவ்வாது, ஏலகிரி, கொல்லி மலை, பச்சமலை, சித்தேரி, அரூர், கிருஷ்ணகிரியின் சிறு மலைகள் என கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மொத்தமுமே சில பகுதிகள் தவிர்த்து, வறட்சியாகத்தான் இருக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையைப் போன்ற வனப்பை இங்கு காண முடிய வில்லை. ஆனால், 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த மலைகளும் வளமையாகத்தான் இருந்தன என்கிறார்கள் கானுயிரியலாளர்கள்.
ஜவ்வாது மலையில் அப்போது ஊட்டி போன்ற தட்பவெப்ப நிலை நிலவியது என்கிறார் இங்கு வேலை பார்த்த முன்னாள் அதிகாரி ஒருவர். சுமார் 10 லட்சம் சந்தன மரங்கள் இங்கிருந்தன என்பதை இன்று நம்புவது சிரமமாக இருக்கிறது. இன்று அமிர்தியில் மட்டும் வேலி போட்டு, கேமராக்கள் பொருத்தி சில சந்தன மரங்களைப் பாதுகாக்கிறார்கள். சந்தன மரங்கள் என்றில்லை, இங்கிருந்த செம்மரங்கள் உட்பட உயர் ரக மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுவிட்டன.
மரம் வெட்டும் சமூகம் எப்படி உருவானது?
மலைகள் மட்டும் அல்ல; இங்கு வாழும் - தமிழகத்தின் தொல்பழங்குடி இனங்களில் ஒன்றான - மலையாளிகள் இனத்தின் வாழ்க்கைத் தரமும் வறட்சியாகத்தான் இருக்கிறது. உயிர் போகும் அபாயம் இருப்பது தெரிந்தும் மீண்டும் மீண்டும் மரம் வெட்டக் கிளம்பிச் செல்வது அதனால்தான் என்கிறார்கள். ஜவ்வாது மலை உட்பட கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்த சந்தன மரங்கள், செம்மரங்கள் அனைத்தையும் இவர்கள்தான் வெட்டிவிட்டார்கள் என்கிறார்கள்.
ஆமாம், வெட்டியது இவர்களாகவே இருக்கட்டும். இவர்கள் வெட்டிய மரங்களின் மலைக்க வைக்கும் கணக்கைப் பார்க்கும்போது இவர்கள் எல்லாம் அம்பானிகள் ஆகியிருக்க வேண்டுமே. ஆனால், ஆகவில்லையே. ஏனென்றால், வெட்டியது மட்டுமே இவர்கள். வெட்டச் சொன்னது இன்னொரு சமூகம்.
அந்த இன்னொரு சமூகத்துக்குள் தமிழக, ஆந்திர வனத் துறையினர், வருவாய்த் துறையினர், அரசியல்வாதிகள், பெரும் முதலாளிகள், சர்வதேசக் கடத்தல் கும்பல்கள் எல்லோரும் அடக்கம். இன்றைக்கும் பழங்குடிகளுக்குத் தெரிந்ததெல்லாம் 10 நிமிடத்தில் ஒரு பெரும் மரத்தை எப்படி வெட்ட வேண்டும், அதனை எவ்வளவு உயரத்திலிருந்தும்/ பள்ளத்திலிருந்தும் எப்படி லாவகமாக தூக்கி வர வேண்டும் என்பது மட்டுமே.
அதற்குப் பிறகு அந்தக் கட்டைகள் எங்கு போகும்? என்ன விலைக்குப் போகும்? யார் விற்பார்கள்? யார் வாங்குவார்கள்? தமிழக, ஆந்திர வனத் துறையினருக்கு, காவல் துறையினருக்கு, அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு கோடிகள் லஞ்சமாகப் போகும் என்பதெல்லாம் இவர்களுக்குத் தெரியாது. தெரிந்துகொள்ளவும் விரும்புவதில்லை. இவர்களின் தேவை அன்றைய தினத்துக்குக் கறிக் கஞ்சி, மதுவுடன் ஓரளவு தாராளமாகச் செலவு செய்யப் பணம்.
பளியர்கள் போன்றோ காடர்கள் போன்றோ ஓரளவேனும் பழங்குடியினரின் கலாச்சாரத்தை ஒட்டி வாழும் சூழலிலும் இங்குள்ளவர்கள் இல்லை. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பே தங்களது பழம் கலாச்சாரத்தைக் கைவிட்டுவிட்டார்கள். இவர்களின் அரிய திறமைகளைப் பல்வேறு சமூக விரோதக் கூட்டங்கள் பயன்படுத்திக்கொண்டன. தொடர்ந்த இந்தச் சூழல் காரணமாக சமூகக் கட்டுப்பாடு குலைந்தது. வழக்குகள், சிறைகள் சகஜமாயின. வீட்டை விட்டுக் கிளம்பும்போதே போருக்குச் செல்வதுபோல ‘திரும்ப வந்தால் பார்க்கலாம்’ என்கிற மனோநிலையில்தான் கிளம்புகிறார்கள்.
துர்மரணங்கள் இவர்களுக்குப் புதிதல்ல. மாதத்துக்குச் சுமார் 10 பேர் சாகிறார்கள். பத்தில் மூன்று கணக்கு காட்டப்படுகின்றன. பிணங்கள்கூட இங்கே வருவதில்லை. சேஷாசலம் காடுகளில் புதைக்கப்படுகின்றன, எரிக்கப்படு கின்றன. அதற்கும் தனியாகத் தரகர்கள் இருக்கிறார்கள் என்கிறார்கள். இவை எல்லாம் இவர்களுக்கு நன்றாகவே தெரியும். கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 3 ஆயிரம் பேர் இந்த மலைகளில் காணவில்லை; அதற்கு அதிகாரபூர்வமான பதிவுகள் எதுவும் இல்லை. அதுபற்றி அரசுக்குக் கவலை இல்லை என்பதன் பின்னணியிலிருந்துதான் மரம் வெட்டும் குற்றவாளிகளாகச் சித்தரிக்கப்படும் இவர்களைப் பற்றி நாம் யோசிக்க வேண்டும்.
கொல்லும் வறுமை
இந்தப் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைப் பார்த்தால், அவை வீடு மாதிரியே இல்லை. எங்கும் வறுமை. அவர்கள் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் சம்பாதிக்கிறார்கள்; 10 ஆயிரம் சம்பாதிக்கிறார்கள் என்று நகரங்களில் பேசுவது எவ்வளவு அபத்தம் என்பது நேரில் பார்க்கும்போது உறைக்கிறது. கொலை செய்யப்பட்ட மேல்குப்சானூரைச் சேர்ந்த 19 வயது இளைஞர் வெள்ளிமுத்து, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி. அவரது 16 வயதான தம்பி கிருஷ்ணமூர்த்திக்கு வாயும் பேச முடியாது; காதும் கேட்காது. இருவருமே பெற்றோரை இழந்தவர்கள்.
இதுவரை அண்ணனின் அரவணைப்பில் இருந்த கிருஷ்ணமூர்த்தி, அரசாங்கம் கொடுத்த காசோலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டிருக்கிறார். இரண்டு மாதக் கருவை வயிற்றில் சுமந்து நிற்கும் இளம் பெண் நதியாவுக்கு வேறு துணை யாரும் இல்லை. அவருக்கு வேறு சில பயங்கள். இப்படி இந்த மலையில் இறந்துபோன 13 பேரின் பின்னணியுமே அவலமாகதான் இருக்கிறது. ஆகவே, தமிழக அரசு இப்போது கொடுத்த பணம் மட்டுமே இவர்களுக்கான தீர்வாகாது.
இவர்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், இனியும் இவர்கள் சமூக விரோதிகளின் கையில் சிக்காமல் இருக்க வேண்டும் என்றால் ஒரே தீர்வு, அரசு இவர்கள் மீது தனி அக்கறை எடுத்து, காரியங்களில் இறங்க வேண்டும். அது நிலம் அளிப்பதில் தொடங்கி வேலைவாய்ப்பு வழங்குவது வரை ஒரு நீண்ட, ஆனால் எளிய பயணம். உதாரணமாக, பழங்குடியினருக்கான வன, நிலம் அங்கீகாரச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, நாடு முழுவதும் பழங்குடியினருக்கு 75 லட்சம் ஏக்கர் பட்டா கொடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் மட்டும் ஒரு பட்டாகூட வழங்கப்படவில்லை. எவ்வளவு பெரிய அநீதி? 20 பேர் படுகொலைக்குப் பின்னர் நாம் இப்படிப் பேச வேண்டிய உண்மைகள் நிறைய இருக்கின்றன. அவற்றில் பல நம் சமூகமும் அரசும் சகித்துக்கொள்ள முடியாத உண்மைகள். அந்த உண்மைகளைப் பேச ஆரம்பிப்பதிலிருந்துதான் நம்முடைய அக்கறைகளை வெளிப்படுத்த நாம் தொடங்க வேண்டும்!
- டி.எல். சஞ்சீவிகுமார்,
தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in