சிறப்புக் கட்டுரைகள்

இந்து சமய மரபில் கலகக்குரல்!

லட்சுமி மணிவண்ணன்

வைகுண்டசாமியின் ஆன்மிகச் செயல்பாடுகள், சமூகச் செயல்பாடுகளால் நிறைந்தவை.

வைகுண்டசாமியின் 183-வது அவதார தின விழா தற்போது நடைபெறுகிறது. அவரைப் பற்றிய பொதுப்படையான பல காரியங்களை இப்போது எல்லோருமே தெரிந்து வைத்திருக்கிறார்கள். அவருடைய சாதி ஒழிப்புக் கோட்பாடுகள், இயக்கங்கள் இன்று பரவலாக அறியப்பட்டவை. “தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்” என்கிற அவருடைய தாரக மந்திரத்தைப் பலரும் குறிப்பிடுவதை இப்போது பார்க்க முடிகிறது. அய்யா வைகுண்டசாமி உருவாக்கிய ‘துவையல் பந்தி’ என்னும் இயக்கம், பல சாதி மக்களையும் ஒருங்கிணைத்த ஆன்மிக மக்கள் இயக்கம். அவர் வாழும் காலத்திலேயே உருவாக்கப்பட்ட மக்கள் இயக்கம் இது ஒன்று மட்டும்தான்.

இந்த இயக்கத்தைச் சேர்ந்த மக்கள் இன்றும் தமிழ்நாட்டின் தென்பகுதியில் குடும்பம் குடும்பமாக வாழ்கிறார்கள். இந்த இயக்கத்தில் கோனார்கள், தலித்துகள், முக்குலத்தோர், செட்டியார்கள், பிள்ளைமார்கள் வரை பங்குபெற்றிருக்கிறார்கள். ஊரல்வாய்மொழியூரில் செயல்படும் அய்யா வைகுண்டசாமியின் ‘நிழற் தாங்கல்’, துவையல் தவசு இயக்கத்தைச் சேர்ந்த முக்குலத்தோர் சாதியைச் சேர்ந்தவர்களுக்குரியது. துவையல் தவசு இயக்கத்தைச் சேர்ந்த பல்வேறு சாதியினரின் நிழற் தாங்கல்கள் தென் மாவட்டங்களில் பல இடங்களில் உள்ளன.

தலித்துகள் இந்த இயக்கத்தில் இப்போது மிகப் பெரிய எழுச்சி பெற்றிருக்கிறார்கள். பதிகள் அமைத்துச் செயல்படும் தலித்துகள் வைகுண்டசாமியின் ‘துவையல் பந்தி’இயக்கத்தைச் சார்ந்தவர்களாய்ப் பெரும்பாலும் இருப்பார்கள். அவர் வாழும் காலத்தில் நேரடித் தொடர்பு பெற்றிருந்தவற்றைப் ‘பதிகள்’ என்றும், பின் தோன்றியவற்றை ‘நிழற் தாங்கல்’ என்றும் அழைப்பது வழக்கம். இப்போது எல்லோருமே பதியென்றே அழைத்துக்கொள்கிறார்கள். தலித்துகள் தங்களுக்கென அமைத்துக்கொண்ட பதிகளும் இப்போது சிறப்புப் பெற்றுத் திகழ்கின்றன.

அய்யா வைகுண்டசாமி “சான்றோர்கள்” எனத் திரும்பத் திரும்பச் சுட்டும் ஒரு சொல், ஒரு குறிப்பிட்ட சாதியை மட்டும் குறிப்பதாக இன்று எடுத்துக் கொள்ளப்படுகிறது. அது ஒரு குறிப்பிட்ட சாதியைக் குறிப்பதல்ல என்பதை வைகுண்டசாமியின் ‘சாட்டு நீட்டோலை’ என்கிற நூலையும், அரிகோபாலன் சீடரால் இயற்றப்பட்ட ‘அகிலத் திரட்டம்மானை’ நூலையும் கற்றவர்கள் உணர்வார்கள்.

ஆன்மிகம்: விலகிச் செல்லும் தனி வழி

இவை ஒருபுறம் நினைவுகொள்ள வேண்டியவை எனில், அவரது ஆன்மிக நிலையில் ஆச்சரியத்தைத் தரும் இரண்டு செய்திகள் குறிப்பிடும்படியானவை. வைகுண்டசாமி உருவாக்கிய சமயச் சடங்குகளில் கண்ணாடி இடம் பெறுவதும், “உன்னை நீ உணர், என்னிலும் பெரியோன் நீங்கள்; உங்களிலும் பெரியோன் நான்” என்பதும், “கந்தைத் துணியதற்குள் தந்தேன் நான் பாகையது எடுத்துக்காட்டு, நீயே எல்லாம்” என்பதும் ஓரளவு எல்லோரும் அறிந்த விஷயங்கள். ஆனால், அகிலத் திரட்டு அம்மானையின் பல வரிகள் அவர் பற்றிய அறிதலில் புதிய அர்த்தத்தைத் தருபவையாக உள்ளன.

பற்றில் விலகுதல் எனும் பகவத் கீதையின் விளக்கத்துக்கு எதிரான ஒரு இந்து சமய மரபை வைகுண்டசாமி உருவாக்குகிறார். திருவள்ளுவரிடம் காணப்படுவதைப் போன்ற ஒரு ஆன்மிகப் பின்புலமே வைகுண்டசாமியிடம் வெளிப்படுகிறது. சைவம், வைணவம் பற்றிய உரையாடல்கள், புராண உருவாக் கங்கள் வைகுண்டசாமியிடம் வெளிப்பட்டாலும் அவரது தத்துவ நிலைப்பாடு முற்றிலும் மாறுபட்டது. இந்திய சாஸ்திர மரபுகளையும் தியான மரபுகளையும் அவர் நிராகரிக்கிறார். இது தத்துவார்த்தரீதியில் பொதுப் பண்பாட்டிலிருந்து அவர் விலகிச் செல்லும் தனித்த புதிய இடத்துக்கு அழைத்துச் செல்கிறது.

“சபித்தலும் பகை முடித்த”லும் திருவள்ளுவரைப் போலவே அய்யா வைகுண்டரிடமும் திரும்பத் திரும்ப இடம் பெறுபவை. அடக்கத்தைப் பற்றியும் பொறுமை பற்றியும் போதிக்கும் வள்ளுவர்

“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்” என்றும் சொல்லிவிடுவதைப் போல, அய்யா வைகுண்டரின் பற்றுறுதி “தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்” என்பதில் மட்டுமே அர்த்தம்கொள்கிறது. அய்யாவின் “பகை முடித்தல்” என்னும் வாக்குக்கு வேறு அர்த்தம் செய்துகொள்ள முடியாது என்பதற்கு இவ்வரிகளே சாட்சி:

சாஸ்திரத்திலும் தோன்றேன், சதுர் மறையைத் தாண்டி நிற்பேன்

சேத்திரத்திலும் அடங்கேன், செய்த தவத்திலும் அடங்கேன்

அன்பிலும் அடங்கேன், அறத்திலும் அடங்கேன்

வம்பிலும் அடங்கேன், வணங்கிடிலும் அடங்கேன்

நம்பிடிலும் அடங்கேன், ஞானத்திலுமடங்கேன்

யோகக் கிரியை உறுசரிதை யிலடங்கேன்

விற்பனத்தில் அடங்கேன் வினோத மதியில் அடங்கேன்

சொப்பனத்தில் அடங்கேன், தரிசனங்களில் அடங்கேன்

கனாவில் அடங்கேன், கைகாட்டலில் அடங்கேன்

அனாவிலும் அடங்கேன், அச்சரத்திலும் அடங்கேன்

இத்தனையிலும் அடங்காது இருந்து பகை முடிப்பேன்”.

நீராலான வழிபாடு

வைகுண்டசாமியின் வழிபாட்டுச் சடங்கு முறைகள் பெரும்பாலும் நீராலானவை. “காணிக்கை, கைக்கூலி, ஆடு, கிடா ஆயனுக்கு வேண்டாம் காண்; அவனவன் தேடும் முதல் அவனவன் வைத்தாண்டிடுங்கோ. எவன் எவனுக்கும் பதறி இனி மலைய வேண்டாமே” என்பதைப் போலவே “தீபாராதனை வேண்டாம்” என்கிறார். நாட்டார் சமய மரபுகளை அவர் நேரடியாக ஏற்றுக்கொள்ளாததைப் போலவே, இந்து மதத்தின் பொது மரபுகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெரிகிறது. அவரது நீர்ச் சடங்குகள் விவசாய வாழ்க்கை யோடு பிணைந்தவை. வைகுண்டசாமி வழிபாட்டில் தண்ணீரும் மண்ணுமே மருந்து. இடம் பெயர்ந்து வாழும் சமூகங்கள் தீபம், நெருப்புச் சடங்குகளிலும் விவசாயம் சார்ந்த குடிகள் நீர்ச் சடங்குகளிலும் ஈடுபடுவதை மானுடவியல் ஆய்வுகளும் உறுதிசெய்கின்றன. இடம் பெயரும் வாழ்க்கை சுடுகாட்டிலும் விவசாயிகளின் இருப்பு இடுகாட்டிலும் போய் முடிகிறது.

வைகுண்டசாமிகள் உருவாக்கிய மரணச் சடங்கு, இருந்த நிலையில் வடக்கு நோக்கி அடக்கம் செய்யும் ஒரு பிரத்யேகமான முறை ஆகும். கல்லறை கட்டி எழுப்பக் கூடாது. சமாதி வழிபாட்டுக்கு வைகுண்டசாமி வழிபாட்டில் இடமில்லை. இத்தகைய விவரங்கள் பெரும் சமய மரபின் மீறலாகவும், அதே சமயத்தில் இந்து மதத்தின் புதிய ஒரு கிளை போலவும் அவர் செயல்பட்டிருப்பதைத் தெரிவிக்கின்றன.அய்யா வைகுண்டசாமி உருவாக்கிய வழிபாட்டு முறைகள் அனைத்துமே முழுக்கத் தமிழ் மொழியால் மட்டுமே ஆனவை. திருமணம் நடத்தி வைப்பதற்குப் பின்பற்றப்படும் “மவ்னி கலியாணம் மணவோலை வாழ்த்தலுக்கு” எனத் தொடங்கும் வாழ்த்துப் பாடலுடன் கூடிய சடங்குமுறை முற்றிலும் தமிழால் அழகு நிறைந்தது.

வைகுண்டசாமியை அவருடைய சமூகச் செயல்பாடுகளிலிருந்து பிரித்து எடுப்பது என்பது சாத்தியமற்றது. அவரது ஆன்மிகச் செயல்பாடுகள், சமூகச் செயல்பாடுகளால் நிறைந்தவை. கடைசி யாக, ஒடுக்கப்படும் தாழ்த்தப்படும் தரப்பு ஒன்று இருக்குமாயின் அதுவரைக்கும் பாய்ந்து செல்லக் கூடியது வைகுண்டசாமியின் கலகக்குரல். அவரது செயல்பாடுகளை மறந்த சமயமாக அய்யாவைக் கொண்டுசெலுத்த யார் துணிந்தாலும் அதனைப் புறக்கணித்துவிடும் எல்லா அம்சங்களும் அய்யா வைகுண்டரிடமே உண்டு என்பது பெரும் சிறப்பு. அத்தகையவற்றை முதலில் எதிர்ப்பவரும் அய்யா வைகுண்டராகவே இருப்பார் என்பதிலும் சந்தேக மில்லை.

- லக்ஷ்மி மணிவண்ணன், எழுத்தாளர், தொடர்புக்கு: slatepublications@gmail.com

SCROLL FOR NEXT