சிறப்புக் கட்டுரைகள்

கோயம்பேடு - ஆலந்தூர் மெட்ரோ ரயில் பாதையில் பாதுகாப்பு ஆணையரக குழு விரைவில் ஆய்வு - மார்ச்சில் ரயில் சேவை தொடங்குமா?

கி.ஜெயப்பிரகாஷ்

கோயம்பேடு – ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பெங்களூர் குழுவினர் விரைவில் ஆய்வு நடத்த உள்ளனர். இதைத் தொடர்ந்து மார்ச்சில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ரூ.20 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. இருவழித் தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. வண்ணாரப்பேட்டையில் தொடங்கி உயர் நீதிமன்றம், அண்ணா சாலை, சைதாப்பேட்டை வழியாக விமான நிலையம் வரை 23.1 கி.மீ தூரத்துக்கு முதல் பாதையும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அண்ணா நகர், திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி, ஆலந்தூர் வழியாக பரங்கிமலை வரை 22 கி.மீ தூரத்துக்கு இரண்டாவது பாதையும் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள், கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டன.

இதில், 2-வது பாதையில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே 11 கி.மீ. தூரத்துக்கு பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. மேலும் கடந்த ஓராண்டாக பல கட்ட சோதனை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கிடையே, ஏற்கெனவே அறிவித்தபடி, மார்ச் மாதத்தில் கோயம்பேடு – ஆலந்தூர் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

கோயம்பேடு – ஆலந்தூர் இடையே முழுமையாக பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ஒரு சில ரயில் நிலையங்களில் பெயின்ட் அடிக்கும் பணி மட்டும் நடக்கிறது. ஒட்டுமொத்த கட்டமைப்பு பணிகள் முடிந்துவிட்டன. எனவே, இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்த பெங்களூரில் இருந்து 3 அல்லது 4 பேர் கொண்ட உயர்நிலை குழுவினருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

இந்தக் குழுவினர் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வந்து ஆய்வு நடத்துவார்கள் என எதிர்பார்க்கிறோம். ரயில் பாதைகள், பெட்டிகள், ரயில் நிலையங்களின் உள்ள பாதுகாப்பு அம்சங்கள், சிக்னல்கள், 2000 வரைபடங்கள், மென்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட பாதுகாப்பு ஆவண அறிக்கையை இந்த வார இறுதிக்குள் பெங்களூரில் உள்ள மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையரகத்திடம் நேரில் வழங்க உள்ளோம்.

பாதுகாப்பு தொடர்பான முழு ஆய்வுப் பணிகளும் மார்ச் முதல் வாரத்தில் முடிந்துவிடும். அதன் பிறகு எப்போது வேண்டுமானாலும் ரயில் சேவையை தொடங்கலாம். எனினும் தொடக்க விழா எப்போது என்பது பற்றி தமிழக அரசுதான் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT