சிறப்புக் கட்டுரைகள்

சமூகத்தைப் பற்றிப் பேச ஒரு பல்கலைக்கழகம்

இரா.தமிழ்ச்செல்வன்

ஜவாஹர்லால் நேருவின் கனவு அது! அந்தக் கனவுக்கு இந்திரா காந்தி கொடுத்த உருவம்தான் தலைநகர் டெல்லியில் அமைந்திருக்கும் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (சுருக்கமாக ஜே .என்.யூ.). மக்களவையில் 1966-ல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தைத் தொடர்ந்து 1969-ல் தொடங்கப்பட்டது இந்தப் பல்கலைக்கழகம். ஆரவல்லி மலைப் பகுதியில் அமைந்துள்ள இந்தப் பல்கலைக்கழகத்தின் புதிய வளாகம் 1976 முதல் இயங்கிவருகிறது.

இந்தப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக பார்த்தசாரதி என்ற தமிழர் நியமிக்கப்பட்டார். தரமான கல்வியாளர்களைக் கொண்டு பாடத்திட்டங்களை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் பணியாற்றிவந்த புகழ்வாய்ந்த பேராசிரியர்களையெல்லாம் ஜே.என்.யூவுக்கு அழைத்துவந்து அந்தப் பல்கலைக்கழகத்தை நாட்டின் முன்மாதிரிக் கல்வி நிறுவனமாக மாற்றியதில் பார்த்தசாரதிக்கு முக்கியப் பங்குண்டு.

அடிப்படை வசதிகளுடன் தொடங்கிய இந்தப் பல்கலைக் கழகம் கட்டமைப்பு வசதிகளைப் பொறுத்தவரை அடைந்திருக்கும் வளர்ச்சி அபாரமானது. மாணவர்கள் மிகக் குறைந்த செலவில் தங்கிப் படிக்கும் வசதியுடன் கட்டமைக்கப்பெற்ற 17 விடுதிகள் வளாகத்தினுள் உள்ளன. திருமணமானவர்கள் தங்கள் குடும்பத்துடன் தங்கிக்கொள் வதற்கென்றும் ஒரு விடுதி உண்டு. பல்கலைக்கழகத்தின் கடந்த ஆண்டறிக்கையின்படி (2012-2013) மாணவர் களின் எண்ணிக்கை 7677 (ஆண்கள் - 4054, பெண்கள் - 3623). இவற்றில் ஆராய்ச்சிப் படிப்பில் (எம்ஃபில், பி.எச்டி) ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் மட்டும் 4609 பேர். ஆசிரியர்களின் எண்ணிக்கை 478. இந்தப் பல்கலைக் கழகத்தில் தொலைதூரக் கல்வி முறை இல்லை.

அரசியல் விழிப்புணர்வின் நதிமூலம்

அரசியல் விழிப்புணர்வின் நதிமூலமான இந்தப் பல்கலைக் கழகத்தில் இரவு நேரங்களில் விடுதிகளில் அறிவுசார் அரசியல் கூட்டங்களும் விவாதங்களும் நடைபெறும். உலக அளவிலான அரசுகளின் கொள்கை முடிவுகள், இந்திய அரசின் செயல்பாடுகள் பற்றிய விவாதங்களும், அவற்றைத் தொடர்ந்து எதிர்ப்புப் போராட்டங்களும் அவ்வப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும். லிபியாவின் முன்னாள் பிரதமர் அலி ஜீதான், நேபாளத்தின் முன்னாள் பிரதமர் பாபுராம் பட்டாராய், அரசியல் தலைவர்கள் தாமஸ் ஐசக், திக்விஜய் சிங், பிரகாஷ் காரத், சீதாராம் யெச்சூரி, நிர்மலா சீதாராமன் போன்ற பலரும் இந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் என்பது அரசியல்ரீதியாக இந்தப் பல்கலைக்கழகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.

சமூக அறிவியல் துறை, பன்னாட்டாய்வுத் துறை, மொழி, இலக்கியம் & பண்பாட்டாய்வுத் துறை உட்பட 10 துறைகளையும் 4 சிறப்பு மையங்களையும் கொண்டிருக்கும் இந்தப் பல்கலைக்கழகம் ஆய்வுசார் உயர்கல்விப் படிப்புகளில் தனிச்சிறப்பு கொண்டது. மேலும், சீனம், ஜப்பானியம், ஜெர்மன், ரஷ்யன், பிரெஞ்சு, கொரியன், ஸ்பானிஷ், அரபு, பாரசீகம் உட்பட அயல்நாட்டு மொழிகள் பலவும் இளநிலை முதலே கற்பிக்கப்பெற்றுவருகின்றன. பாஷா இந்தோனேஷியா, பஷ்தோ, மங்கோலியன் முதலான மொழிகளும் பகுதி நேரப் படிப்பாகக் கற்றுத்தரப்படுகின்றன.

சமூக அறிவியல் துறை

பல்கலைக்கழகத்தின் புகழ் பெற்ற துறைகளில் ஒன்றாகச் சமூக அறிவியல் துறையைக் குறிப்பிட்டாக வேண்டும். இந்தத் துறையினுள் 15 மையங்கள் இயங்கிவருகின்றன. இந்த மையங்களில் முதுநிலை (PG), ஆராய்ச்சிப் படிப்பு களில் (M.phil., Ph.D) சேர்வதற்கு மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. உலக அளவில் சிறந்த வல்லுநர்களாகப் போற்றப்படுகிற பேராசிரியர்கள் ரொமிலா தாப்பர், விபின் சந்திரா, பிரபாத் பட்நாயக், அபிஜித் சென், சதீஷ் சந்திரா, செம்பகலட்சுமி முதலானோர் சமூக அறிவியல் துறையினுள் இயங்கிவரும் மையங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள். மேற்கூறிய மையங்களில் தற்போது பணிபுரிபவர்களில் ஜெயத்தி கோஷ், சி.பி. சந்திரசேகர், நீலதிரி பட்டாச்சார்யா போன்ற புகழ்பெற்ற பேராசிரியர்களும் அடக்கம். சமீபத்தில் மறைந்த பேராசிரியர் எம்.எஸ்.எஸ். பாண்டியன் சமூக அறிவியல் துறையின் வரலாற்று மையத்தில் பணியாற்றியவரே.

பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற ஆய்வுத் துறைகளில் ஒன்றான சமூக அறிவியல் துறை சிறப்பு வல்லுநர்கள் பலரையும் உருவாக்கிய பெருமையுடையது. நாட்டின் அரசியல் தலைவர்கள் பலரும், மத்திய அரசு ஆட்சிப் பணியாளர்களாகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் பலரும் இந்த சமூக அறிவியல் துறையில் பயின்றவர்களே. இந்தத் துறையின் கீழ் இயங்கும் மையங்களில் சேர்வதற்கு அதிகமான போட்டி நிலவுவதே இத்துறையின் சிறப்பை நமக்கு உணர்த்தும். அறிவுப் பரவலாக்கத்துக்கு அடித்தளமாக விளங்கும் இந்த சமூக அறிவியல் துறையின் நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெறுவது பெருமைக்குரியதாகக் கருதப்படுகிறது.

மொழிகள் மையம்

அறிவியல் சார்ந்த பிற துறைகள், பன்னாட்டாய்வுத் துறை, மொழி இலக்கியம் & பண்பாட்டாய்வுத் துறை முதலானவற்றில் உள்ள மையங்களில் சேர்வதற்கும், பல்கலைக்கழகத்தின் சிறப்பு மையங்களில் சேர்வதற்கும் மாணவர்களிடையே போட்டி நிலவுகிறது. பன்னாட்டாய்வுத் துறையின் கீழ் 14 மையங்களும் மொழி இலக்கியம் & பண்பாட்டாய்வுத் துறையின் கீழ் 13 மையங்களும் இயங்கிவருகின்றன. பன்னாட்டாய்வுகள் குறித்த உயர்கல்வி ஆய்வுகள் நமது நாட்டின் வெளியுறவுத் துறைசார் பணிகளுக்குப் பலவகையிலும் உதவி புரிந்துவருகின்றன. உலக அளவிலான வேலைவாய்ப்புகளை இவ்வகையான உயர்கல்வி ஆய்வுகள் அதிக அளவில் அளிப்பதால் மாணவர்கள் பன்னாட்டு ஆய்வு மையங்களில் ஆர்வமுடன் சேர்ந்து ஆய்வு மேற்கொள்கிறார்கள். இதுபோல இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்பு வரையில் அயல்நாட்டு மொழிகள், இலக்கியங்களைக் கற்றுத்தரும் மொழி இலக்கியம் & பண்பாட்டாய்வுத் துறையின் மையங்களிலும் மாணவர்கள் அதிகம் சேர்ந்து பயில்கிறார்கள்.

இந்திய மொழிகள் மையத்தில் இந்தி, உருது, தமிழ் ஆகிய மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. மேலும், இம்மொழிகள் தொடர்பாக ஆய்வுகளும் இங்கே மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ்ப் பிரிவில் தற்போது ஏறக்குறைய 30 மாணவர்கள் இளமுனைவர், முனைவர் பட்ட ஆய்வாளர்களாக ஆராய்ச்சி மேற்கொள்கிறார்கள். இந்திய மொழிகள் மையத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் கி. நாச்சிமுத்து, தமிழ்ப் பிரிவில் ஆய்வாளர்கள் அதிகம் சேர்வதற்கான வாய்ப்பை உருவாக்கி, இந்திய மொழிகள் மையத்தில் தமிழ் மொழி இன்றியமையாத இடம்பெற உறுதுணை புரிந்தார். பெரும்பாலும் ஒப்பாய்வு, மொழிபெயர்ப்பு முதலான பகுதிகளைச் சிறப்புப் பொருண்மையாகக் கொண்டே தமிழ்ப் பிரிவு மாணவர்கள் ஆய்வு செய்கிறார்கள்.

கல்விக் கட்டணங்களும் கல்வி உதவித்தொகையும்

இந்தப் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் மிகவும் குறைவே. ஓர் ஆண்டுக்குக் கல்விக் கட்டணமாக ரூ. 500-க்கும் குறைவுதான். விடுதிக் கட்டணம், விடுதி உணவகக் கட்டணம் போன்றவையும் குறைவே. மேலும், இளமுனைவர், முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் அனைவருக்கும் கல்வி உதவித்தொகை முறையே ரூ. 5,000, ரூ. 8,000 வழங்கப்பெறுகிறது. இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கும் அவர்களின் குடும்ப வருமான அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்பெறுகிறது.

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு இந்தியா முழுக்கவும் இருக்கும் மாணவர்கள் விரும்புவதால் அனைத்து மையங்களிலும் இன்றளவில் நுழைவுத் தேர்வுகளை ஏராளமானோர் எழுதிவருகிறார்கள். மாணவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கு ஊக்கத்தைத் தரக்கூடியதாகவும், மேன்மை நிலைக்கு ஆற்றுப்படுத்துவதாகவும் அமைந்திருக்கும் நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்கும் இந்தப் பல்கலைக்கழகத்தில் இணைய வேண்டும் என்கிற கனவு கடுமையாக உழைப்பதன் மூலமே நனவாகும். பல்கலைக்கழகத்தின் இந்தக் கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கைக்குரிய விண்ணப்பங்கள் கடந்த 06.02.2015 முதல் வழங்கப்பட்டுவருகின்றன. விண்ணப் பங்களை இணையம் மற்றும் தபால் மூலமாகப் பெறலாம். நுழைவுத் தேர்வு, படிப்புகள், சேர்க்கை பற்றிய மேலதிக விவரங்களை அறிந்துகொள்வதற்கு http://www.jnu.ac.in அல்லது admissions.jnu.ac.in என்ற சுட்டிகளுக்குச் செல்லலாம்.

- இரா. தமிழ்ச்செல்வன்,

தமிழ் முனைவர் பட்ட ஆய்வாளர், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடெல்லி. தொடர்புக்கு: tamil.jnu@gmail.com

SCROLL FOR NEXT