சிறப்புக் கட்டுரைகள்

மற்றுமொரு ஆட்சி அல்ல; புதிய நம்பிக்கை!

டி.எம்.கிருஷ்ணா

ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைத்த வெற்றி டெல்லி மக்களுக்கு மட்டுமல்ல, நம்மில் பலருக்கும் மகிழ்ச்சியைத் தந்து முகங்களில் புன்னகையை வரவழைத்துள்ளது. நம்முடைய மகிழ்ச்சிகளுக்கெல்லாம் காரணங்கள் வெவ்வேறு; இடதுசாரிகளும் சமத்துவ - சுதந்திரச் சிந்தனையாளர்களுக்கும் மகிழ்ச்சி ஏற்படக் காரணம், மதச்சார்பற்ற சக்திகளுக்குத் தேவைப்படும் ஆற்றலை இந்த வெற்றி அளித்திருக்கிறது. மத்தியவாத அரசியல் சார்புள்ளவர்களுக்கு, பிரதமர் வசிக்கும் சொந்த வீடான டெல்லியிலேயே பாஜக படுதோல்வி அடைந்திருக்கிறதே என்ற மகிழ்ச்சி.

பாஜகவிலேயே முக்கியத்துவம் இழந்த கட்சித் தலைவர்களும் இந்தத் தோல்வி இப்போதைய தலைவர் களின் கண்களைத் திறக்க உதவும் எச்சரிக்கை என்ற அளவில் நிம்மதி அடைந்திருக்கிறார்கள். எல்லாவற்றை யும்விட ஆஆக வெற்றியின் முக்கியமான அம்சம்; நாட்டு மக்களின் ஜனநாயக உணர்வுக்குப் புத்துயிர் ஊட்டி யிருக்கிறது. அரசியல் சாதனைகளுக்காக அல்ல, இந்த ஒரு ஆக்கபூர்வமான அம்சத்துக்காகவே நானும் இதை வரவேற்கிறேன்.

ஆஆக ஆதரவாளன் அல்ல

முதலிலேயே ஒரு விஷயத்தைக் கூறிவிடுகிறேன். நான் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆதரவாளன் அல்ல - அவருடைய ஆலோசகர்களில் சிலர் மதிக்கத் தக்கவர்கள் என்றாலும்கூட. அவருடைய எடுத்தேன் - கவிழ்த்தேன் போக்கு, வழக்கத்துக்கு மாறான அறிவிப்புகள், சமூகரீதியாக வலதுசாரிக் கொள்கைகளில் சார்பு, ஒரு தலைவராக சமூக - அரசியல் பார்வை இல்லாத குணம் போன்றவை எனக்குப் பிடிக்காது. ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார் என்பது மட்டுமே அவரிடம் உள்ள சாதகமான அம்சம்.

இவ்வளவு தயக்கங்கள் இருந்தபோதிலும் 2013-ல் அவர் டெல்லியில் முதலமைச்சராகப் பதவியேற்றபோது மகிழ்ச்சி அடைந்தேன். நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒரு சாதனையை அவர் நிகழ்த்தியிருந்தார். ஒரு சாதாரண மனிதர், விசுவாசமான தொண்டர்களின் உதவியோடு முதலமைச்சர் பதவியில் போய் அமர்வது சாதாரணமாக நடக்கக்கூடிய செயலா? சமூகத்திலோ அரசியலிலோ எது நடந்தாலும் - நமக்கென்ன என்று - வேடிக்கை பார்க்கும் மத்திய தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், வெளிப்படையான, நேர்மையான அரசியலும் வலுவானதுதான் என்று நாட்டுக்கே நிரூபித்துக் காட்டினார். நாம் கண்டிக்கும் பதவி, பணம், அதிகாரம் அனைத்தும் கொண்ட ஒருவரை முதல்வர் பதவியிலிருந்தே தூக்கி எறிந்தார். அரசியல் தலைவர்களின் வாரிசுகள்தான் ஆட்சிக்கு வர முடியும் என்ற மாயையை உடைத்து, சாதாரண மக்களும் ஆட்சிக்கு வர முடியும் என்று புதிய மாற்று அரசியலை அடையாளம் காட்டினார்.

நம்முடைய மாநிலத்திலும் அரசியல் கலாச்சாரமும் காட்சிகளும் இனி மாறாதா என்று துணிச்சலுடன் நம்பத் தொடங்கினோம். அது ஒரு புது அனுபவத்தைத் தந்தது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, நடைபாதையில் வடை சுடும் நபரிலிருந்து நாட்டில் சமூக அந்தஸ்து பெற்ற தொழிலதிபர் வரை பலரும், நம் நாட்டில் மீண்டும் ஜனநாயகம் செயல்படத் தொடங்கிவிட்டது என்று உணர்ந்தார்கள். அதுவரை தேசிய அரசியலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா என்ற ஜாம்பவான் களுக்கும் மாநிலங்களில் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., தெலுங்கு தேசம் கட்சி போன்றவர்களுக்கும்தான் வாய்ப்பு என்று முடிவு கட்டியிருந்தோம்.

சாதி, மத அடிப்படையில் அல்ல

கடைசியாக ஒரு தலைவரும் அவருடைய கட்சியும் நமக்குப் புதியதொரு மாற்று வாய்ப்பையும் வழியையும் காட்டினர். இருண்ட குகையின் எதிர் முனையில் வெளிச்சம் - மங்கலாக இருந்தாலும் - தோன்றியது. சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து உயர்ந்த பதவிக்கு வந்த அரசியல் தலைவர்கள் வரிசையில் நிதீஷ் குமார், மாயாவதி போன்று பலர் உள்ளனர். ஆனால், அர்விந்த் கேஜ்ரிவால் வித்தியாசமானவர். அந்த வித்தியாசம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சாதி அல்லது மத அடை யாளத்தைச் சொல்லிக்கொண்டு கேஜ்ரிவால் அரசியல் வெற்றியைப் பெறவில்லை. ஊழலுக்கு எதிராக அனைத்து இந்தியர்கள் உள்ளத்திலும் கனிந்துகொண்டிருக்கும் கோபத்தை விசிறிவிட்டு ஆதரவைப் பெருக்கிக்கொண்டார்.

பிறகு வீழ்ச்சி ஆரம்பித்தது. ஆட்சியில் 49 நாட்கள் இருந்தபோது அரசு நிர்வாக இயந்திரத்தைக் கையாள முடியாமல் அசௌகரியமாக இருந்ததைப்போலத் தெரிந்தது. இதனாலேயே பதவியிலிருந்து விலகியது ஆஆக. ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் கேலிகளும் கிண்டல்களும் உலவத் தொடங்கின. இந்த கேலி கிண்டல்களுக்கு அப்பால், அவருடைய பதவி விலகல் டெல்லிக்கு அப்பாலிருந்த அவருடைய ஆதரவாளர்களை வெகுவாகப் பாதித்தது. ஆஆக அரசை, மாற்றத்துக்கான முன்மாதிரியாகப் பலர் பார்த்தார்கள், ஊழலற்ற எதிர்காலத்துக்கு அச்சாரம் என்று நினைத்தார்கள். அந்தக் கனவு கலைந்துவிட்டது. அதற்குப் பிறகு நடந்தது அதைவிட மோசமானது. மக்களவைப் பொதுத் தேர்தலில் ஆஆக 432 தொகுதிகளில் போட்டியிட்டது. சாமானிய மனிதர்களை மீட்க வந்த ரட்சகராகவே அர்விந்த் கேஜ்ரிவால் காட்டிக்கொண்டார். நரேந்திர மோடி, ராகுல் காந்தி ஆகியோரைப் போல அவரையும் பிரதமர் பதவிக்கான வேட்பாளராகச் செய்தி ஊடகங்கள் பார்த்தன. ஆஆகவுக்கு ஆணவம் தலைக்கேறியது, தன்னம்பிக்கை பொங்கி வழிந்தது, தன்னை தேசியக் கட்சியாகவே நினைக்கத் தொடங்கியது. ஆனால், நீர்க்குமிழி போல அந்த ஆர்வம் வெடித்துவிட்டது. தேசிய அரங்கிலிருந்து ஆஆக துடைத்து எறியப்பட்டது. பஞ்சாபில் மட்டும் அந்தக் கட்சியின் 4 வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அந்தக் கட்சியின் மையக் களமான டெல்லியிலிருந்து ஒருவர்கூட வெற்றி பெறவில்லை.

தோல்வி யாருடையது?

பொறுப்புகளைக் கைவிட்டதன் மூலம் அர்விந்த் கேஜ்ரிவாலும் அவருடைய சகாக்களும் பலருடைய கனவுகளை நொறுக்கிவிட்டனர். ஆம் ஆத்மியின் தோல்வி என்பது ஆஆகவினுடையதோ, தனி நபருடையதோ அல்ல - இந்திய மக்களுக்கு அவர்கள் செய்யத் தவறிய கடமைதான் என்று நினைத்தேன். அவர்களால் மாற்று அரசை, மாற்று நிர்வாகத்தை அளிக்க முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்தியிருந்தனர். அதைச் செய்ய முடியாமல் அவர்கள் உள்ளுக்குள்ளேயே நொறுங்கியதன் மூலம் சாதி, மதச் சார்பு இல்லாமல் அரசியல் கட்சிகள் எதிர்காலத்தில் உருவாகும் வாய்ப்பையும் பாழாக்கிவிட்டார்கள் என்று கருதினேன். மக்கள் மீண்டும் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள், தொழில்முறை அரசியல் வாதிகளை விட்டால், தங்களுக்கு வேறு கதியில்லை என்று. பழைய கட்சிகளின் முகங்களிலும், “அப்போதே நாங்கள் சொல்லவில்லை” என்ற கேலி தெரிந்தது.

இப்போது, டெல்லி விரும்பியது - விரும்புகிறது ஆஆக வெற்றிபெற வேண்டுமென்று; கேஜ்ரிவாலின் கூட்டணியில் புதிய வழியை டெல்லி கண்டது. அவருக்கு மீண்டும் வாய்ப்பளித்திருப்பதன் மூலம் புதிய துணிச்சலான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை டெல்லி வழங்கியிருக்கிறது. கேஜ்ரிவால் லட்சியவாதி அல்ல; ஆனால், உண்மையான மனிதர் என்று அடையாளம் கண்டது டெல்லி. அதன் விளைவு தேர்தல் களமே வியத்தகு மாற்றத்தைக் கண்டது. நம்முடைய கண்களிலிருந்து மறைந்துகொண்டிருந்த ஒளிப்பொறியை மீட்டு மீண்டும் பிரகாசிக்கச் செய்யும் வகையில் டெல்லிவாசிகள் தங்களுடைய வாக்குரிமையைப் பயன்படுத்தியுள்ளனர்.

டெல்லிக்கு மட்டுமல்ல

இது டெல்லிக்கு மட்டுமல்ல, நமக்கும் நாம் எப்படி அரசியல் கட்சிகளையும் அரசியல் தலைவர்களையும் பார்க்கிறோம் என்பதையும் பற்றியது. பெரிய கட்சிகளைக் காணாமல் அடிப்பதைப் பற்றியதல்ல. நாட்டுக்கு முக்கியமான ஒரு கடமையை டெல்லிவாசிகள் நிறை வேற்றியிருக்கின்றனர். கட்சிகளுடைய செயல்பாட்டில் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் இருந்தால், அவர்கள் கடந்த காலத்தில் தவறு செய்திருந்தாலும் அதை மன்னித்து ஏற்றுக்கொண்டுவிடலாம் என்று உணர்த்தியிருக்கிறார்கள். மாற்றங்களில் நம்பிக்கை வேண்டும் என்பது அடுத்த அம்சம். மிகக் குறுகிய காலமே பதவியில் இருந்திருந்தாலும் அவர்கள் செய்த நன்மையை அங்கீகரிக்க வேண்டும் என்பது அடுத்தது. மிகப் பிரம்மாண்டமான பிரச்சாரம், அடுத்தடுத்த விளம்பரம் என்றெல்லாம் களத்தில் இடம்பெற்றாலும், தவறுகளை உணர்ந்து மன்னிப்புக் கேட்ட அக்கறையுள்ள அரசியல் கட்சிக்கும் அதன் வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க வேண்டும் என்பதைக் காட்டியிருக்கிறார்கள்.

நேர்மையான, வெளிப்படையான அரசியல் என்ற லட்சியத்தைப் பற்றவைத்துவிட்டு அணைத்த ஆஆகவுக்கு வாக்களித்து, அந்தச் சுடரை மீண்டும் டெல்லி மக்கள் தூண்டி யிருக்கிறார்கள். லட்சியவாதம் மீண்டும் மையத்துக்கு வந்திருக்கிறது அது நிலைக்குமா, மறையுமா என்பது கேஜ்ரிவால் அரசின் வெற்றியைப் பொருத்திருக்கிறது. அவருக்கு இப்போது எதிர்க் கட்சியே இல்லை. எனவே, அவரே அவருக்கு எதிர்க் கட்சிபோலச் செயல்பட்டுக்கொள்ள வேண்டும். இது சாதாரண வேலையல்ல, டெல்லி மக்களுக்காக அல்ல; இந்திய மக்களுக்காக இந்தக் கடமையை அவர் நிறைவேற்றியே தீர வேண்டும். அப்படி நடக்குமா? காலம் மட்டும்தான் பதில் சொல்ல முடியும், அதுவரையில் - நன்றி டெல்லி!

- டி.எம். கிருஷ்ணா, இசைக் கலைஞர், சமூக-அரசியல் விமர்சகர், தொடர்புக்கு: tm.krishna@gmail.com

தமிழில்: சாரி

SCROLL FOR NEXT