ஓர் எழுத்தாளன் என்ற முறையில் புத்தகக் காட்சிதான் எனது தீபாவளி, எனது பண்டிகைக் காலம். வாசகர்களைச் சந்திப்பது, தேடித் தேடிப் புத்தகம் வாங்குவது, வெளிநாட்டிலிருந்து வரும் நண்பர்களைச் சந்திப்பது என இந்த நாட்கள், ஆண்டின் மறக்க முடியாத நாட்கள்.
பள்ளி வயதில் புத்தகம் படிக்கத் தொடங்கினேன். ஓர் எழுத்தாளனாக என்னை உருவாக்கியது புத்தகங்களே. பள்ளி, கல்லூரிகளில் கற்றுக்கொண்டதைவிடவும் அதிகம் நான் நூலகத்தில்தான் கற்றுக்கொண்டிருக்கிறேன்.
புத்தகம் வாங்குகிற ஆசை எல்லோருக்கும் வந்து விட்டிருக்கிறது. ஆனால், படிக்கிற ஆசை வெகுவாகக் குறைந்துபோயிருக்கிறது. புத்தகங்கள் ஒருபோதும் காட்சிப் பொருட்கள் இல்லை. சினிமா பார்க்க நேரம் ஒதுக்குவதுபோல, ஷாப்பிங் மாலுக்குப் போவதற்கு நேரத்தை ஒதுக்குவதுபோல, வாசிப்பதற்கென்றும் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டும்.
நமது ஆளுமையை, அறிவுத்திறனை, அனுபவத்தை மேம்படுத்திக்கொள்ள உள்ள எளிய, சிறந்த வழி புத்தகங்களே. ‘உன் நண்பன் யாரென்று சொல்; உன்னைப் பற்றி நான் கூறுகிறேன்’ என்றொரு பொதுமொழி யிருக்கிறது. இதற்கு மாறாக, ‘நீ என்ன புத்தகம் படித்திருக்கிறாய் என்று சொல், உன்னைப் பற்றி நான் கூறுகிறேன்’ என நான் சொல்வேன்.
வேறு எந்த உயிரினமும் தனது அறிவை, அனுபவத்தைச் சேகரித்து இன்னொரு உயிரினத்துக்குப் பரிசாகத் தருவதில்லை. மனிதன் மட்டுமே செய்கிறான். அப்படித் தனது வாழ்வனுபவங்களையும் நினைவுகளையும், கற்பனையையும் ஒன்று சேர்த்து அவன் உருவாக்கிய புத்தகங்களே இன்று நாம் அடைந்துள்ள நாகரிக வளர்ச்சிக்கான பெரும் கருவி.
புத்தகச் சந்தையில் ஒவ்வொரு நாளும் புத்தகங்களை அள்ளிச் செல்வது என்னுடைய இயல்பு. இன்றைக்கு வாங்கிய புத்தகங்களில் முக்கியமானவை ரே பிராட்பரி எழுதிய ‘ஃ பாரென்ஹீட் 451’, வண்ணதாசனின் ‘சின்ன விஷயங்களின் மனிதன்’, ஜெ.டி. சாலின்ஜர் எழுதிய ‘குழந்தைகளின் ரட்சகன்’, சார்லஸ் ஆலன் எழுதிய ‘பேரரசன் அசோகன்’, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை’, தி.க.சி-யின் நாட்குறிப்புகள்.
நேற்று 50 வயதைத் தொட்ட ஒரு பெண், எனது ‘சஞ்சாரம்’நாவலின் மூன்று பிரதிகளில் கையெழுத்து வாங்கினார். எதற்காக எனக் கேட்டேன். எனது மகன் அமெரிக்காவில் வசிக்கிறான். நேரில் உங்களைச் சந்தித்து கையெழுத்து வாங்கி, புத்தகத்தை ஏர்மெயிலில் அனுப்பச் சொல்லியிருக்கிறான். ஒன்று எனக்கு, மற்றொன்று என் மகனுக்கு, மூன்றாவது எனது மகளுக்கு என்றார்.
இவரைப் போன்ற வாசகர்கள் இருப்பதே எழுத்தை நம்பி வாழும் எனக்குப் பெரும் நம்பிக்கை.