சிறப்புக் கட்டுரைகள்

தொடங்கியது அறிவுலகக் கொண்டாட்டம்

வெ.சந்திரமோகன்

700 அரங்குகள் | 5,00,000 தலைப்புகள் | 20,00,000 வாசகர்கள்

புத்தகக் காதலர்கள் ஆவலுடன் காத்திருந்த திருவிழா கொண்டாட்டத்துடன் நேற்று தொடங்கியது. தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் சார்பில் 38-வது ஆண்டாக நடத்தப்படும் இந்தப் புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் வரும் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது.

38 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்வமும் அக்கறை யும் மிக்க சில பதிப்பாளர்கள், புத்தக விற்பனை யாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு தொடங்கப்பட்டது தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி). வாசகர்களிடம் புத்தக வாசிப்பு தொடர்பான ஆர்வத்தை விதைப்பதற்கும், பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் என்று பலரையும் ஊக்கத்துடன் இயங்கவைப்பதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது இந்தச் சங்கம்.

சுமார் இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் 700 அரங்குகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பிரம்மாண்டமான புத்தகக் காட்சியில் 350-க் கும் மேற்பட்ட பதிப்பாளர்களுடன் ஊடகங்களும் பங்கேற்கிறார்கள். ஏறத்தாழ ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஐந்து கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்களும், கல்வி தொடர்பான குறுந்தகடுகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 30 ஆயிரம் புதிய புத்தகங்கள் இடம் பெறுகின்றன.

‘தி இந்து’ அரங்கு

தமிழ்ப் பதிப்புலகில் கால்பதித்துள்ள ‘தி இந்து’, இந்தப் புத்தகக் காட்சியில் அரங்கு அமைத்திருக்கிறது. புத்தகக் காட்சி வளாகத்தில் ‘சேரன் செங்குட்டுவன்’ வீதியில் நம்முடைய அரங்கு எண்கள்: 143-ஏ, 143-பி.

எதுவரை நடக்கிறது?

நேற்று தொடங்கிய இந்தப் புத்தகக் காட்சி, இந்த மாதத்தின் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் புத்தகக் காட்சி, வார நாட்களில் (ஜனவரி 12, 13, 19, 20, 21) பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். விடுமுறை நாட்களில் (ஜனவரி10, 11, 14, 15, 16, 17, 18) காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.

நிகழ்ச்சிகள்

புத்தகக் காட்சியின் விழா அரங்கில் தினமும் மாலை 6 மணிக்கு இலக்கியம் தொடர்பான நிகழ்வுகள் நடக்கவிருக்கின்றன. அவற்றுடன் வாசிப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குறும்படங்களுக்கான போட்டியில் தேர்வான குறும்படங்கள் திரையிடப்படுகின்றன. இசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் புத்தகக் காட்சிக்கு மசாலா சேர்க்கின்றன.

விருதுகள்

புத்தகத் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியில், இந்த ஆண்டின் சிறந்த தமிழறிஞருக்கான விருது சிலம்பொலி செல்லப்பனுக்கும், சிறந்த பதிப்பாளருக்கான விருது பி.ரத்தின நாயக்கர் அண்டு சன்ஸுக்கும், சிறந்த விற்பனையாளருக் கான விருது ஆர்.ராஜ் ஆனந்துக்கும், சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான விருது நெல்லை. ஆ.கணபதிக்கும், சிறந்த ஆங்கில எழுத்தாளருக் கான விருது ஸ்ரீகுமார் வர்மாவுக்கும், சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான விருது டாக்டர். இ.கே.தி.சிவக்குமாருக்கும், சிறந்த நூலகருக்கான விருது ஆர்.சம்யுக்தாவுக்கும் வழங்கப்பட்டன.

தொடக்க நிகழ்ச்சி

புத்தகக் காட்சி தொடக்க விழாவை, சந்திரயான் திட்ட இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை தொடங்கிவைத்துப் பேசினார். நிகழ்ச்சிக்கு நல்லி குப்புசாமி செட்டி தலைமை வகித்தார். காவல்துறைத் தலைவர் (பயிற்சி) க. வன்னியபெருமாள் விருது பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கி வாழ்த்திப் பேசினார். பபாசி தலைவர் மெ. மீனாட்சி சோமசுந்தரம் வரவேற்றார். பபாசி செயலாளர் கே.எஸ். புகழேந்தி நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT