பயங்கரவாதத்தைக் கண்டு பதற்றமடையாமல் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
இப்படி ஏன் நடக்கிறது? அரசியல்ரீதியாக இப்படியொரு வன்முறைத் தாக்குதல் நடக்கும் போதெல்லாம் எழும் அர்த்தபூர்வமான கேள்வி இது: எதற்காக இப்படிக் கொலைவெறித் தாக்குதலை நடத்துகிறார்கள்? இதன் மூலம் எந்த மாதிரியான கருத்துகள் மக்களிடமிருந்து வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் அல்லது வரக் கூடாது என்று எதிர்பார்க்கிறார்கள்?
பிரெஞ்சுப் பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதலில் 12 பேர் இறந்திருப்பதை யாரும் கவனிக் காமல் இருக்க முடியாது. ஆயுதக் காவலருடன் இருந்த பத்திரிகை அலுவலகத்துக்குள்ளேயே நவீன ஆயுதங்களுடன் புகுந்து கொலைவெறித் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் என்றால், தாக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு அனைத்து வகையிலான ஆதரவும் இப்போது தேவைப்படுகிறது. கருத்துச் சுதந்திரத்தைத் தூக்கிப் பிடித்ததற்காகக் கொல்லப்படுகிறார்கள், படுகாயப்படுத்தப்படுகிறார்கள் என்றால், அவர்களுடைய தொழில் ஆர்வத்தைப் பாராட்ட வேண்டும். அவர்களுடைய இறப்புக்கு அஞ்சலி செலுத்தப்பட வேண்டும்.
ஆயிரம் வார்த்தைகளை அடுக்கடுக்காக எழுதித் தங்களுடைய கருத்தைச் சொல்கிறவர்களைவிட, சில கோடுகளாலும் புள்ளிகளாலும் தாங்கள் சொல்ல வருவதை ரத்தினச் சுருக்கமாகவும் மனதில் பதியும் வகையிலும் நகைச்சுவை பொங்கச் சொல்கிற கேலிச்சித்திரப் பத்திரிகையாளர்கள் துணிச்சல் மிக்கவர்கள். தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் கேலிச்சித்திரங்களுக்கு இணையான வடிவம் வேறு இல்லை. கொலைகாரர்களின் கைகளில் இருந்த நவீன துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்களைவிட அவர் களுடைய பேனாவும் தூரிகையும் வலுவானவை. ஜனநாயகத்தின் வலிமையான ஆயுதங்களில் ஒன்றுதான் கேலிச்சித்திரம். அதை வரையும் பத்திரிகையாளர்கள் அதற்குத் தரும் விலை சமயத்தில் உச்சபட்சமாக இதைப் போன்ற உயிர்த் தியாகமாகவும் அமைந்துவிடுகிறது.
பயங்கரவாதம் என்றொரு தொழில்நுட்பம்
பயங்கரவாதத்தை ஒழிக்க எளிதான வழி ஏதும் இல்லை என்று அதை ஆய்வுசெய்த ரிச்சர்ட் இங்கிலீஷ் எழுதியதைத்தான் அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். பயங்கரவாதம் என்பது பயங்கரவாதிகள் கையாளும் தொழில்நுட்பம்தானே தவிர, அது சித்தாந்தம் அல்ல; பயங்கரவாதம் என்பது ஒரு செயலைச் செய்யும் விளைவுதானே தவிர, அதற்கான காரணம் அதுவல்ல.
ஏராளமானோரின் உயிர்களைப் பலிவாங்குவதன் மூலம் பயங்கரவாதிகள் இரண்டு விஷயங்களைச் சாதிக்கப் பார்க்கிறார்கள். எங்களைப் பற்றி விமர்சித்தால் இதுதான் நடக்கும் என்று விமர்சித்தவர்களுக்கும் விமர்சிக்கப்போகிறவர்களுக்கும் எச்சரிக்கை செய் கிறார்கள். பிரெஞ்சு மக்களுடைய மனங்களில் தங்களைப் பற்றிய அச்சத்தைப் பரப்பியிருக்கிறார்கள்.
வேறு மாதிரியாகச் சொல்வதானால், சுதந்திரமாகச் சிந்திக்கும் மனிதர்களைக்கூட இனி குழு சார்ந்து சிந்திக்கவைக்க முயல்கிறார்கள். மேற்கத்திய ஜனநாயகம் அளிக்கும் சுதந்திரம் என்பது பெயரளவுக்குத்தான் என்று கருதும் அவர்கள், தங்களுடைய (மதம் சார்ந்த) கட்டுப்பாடு ஒருமுகமானது, வலுவானது, துணிச்சலானது, நிரந்தரமான முத்திரையைப் பதிக்கவல்லது என்று கருதுகிறார்கள்.
அடிப்படைவாதத்தைப் படிக்கத் தவறிவிட்டோம்
மேற்கத்திய நாடுகள் கடந்த 25 ஆண்டுகளாகவே மத அடிப்படைவாதத்தை ஊன்றிக் கவனித்து, உரிய பாடம் படிக்கத் தவறிவிட்டன. எகிப்தின் சையித் குதுப் தொடங்கிய முஸ்லிம் சகோதர அமைப்பு, ஆப்கானிஸ்தானின் தலிபான்கள், ஈரானின் அயதுல்லாக்கள், பின் லேடனின் அல்-காய்தா, சிரியா-இராக்கின் ஐ.எஸ். ஆகிய அமைப்புகளில் மேற்கத்திய எதிர்ப்பு என்பது வெவ்வேறு அளவுகளில் கொதிநிலையில் உள்ளது.
மத்தியக் கிழக்கில் மேற்கத்திய நாடுகளின் தலையீட்டுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவது அவர்களுக்கு கலாச்சாரமாகவே ஆகிவிட்டது. இந்த இயக்கங்கள் தங்கள் மதத்தவர் வாழும் நாடுகளிலேயே மதச்சார்பற்ற அரசுகளைக்கூடச் சகித்துக்கொள்ள முடியாமல் கவிழ்ப்பதில் ஈடுபட்டன. பாத் கட்சியின் ஆட்சிகள் அப்படித்தான் எதிர்க்கப்பட்டன.
ரத்தத்துக்கு ரத்தம் என்ற வகையில் பழிவாங்குவது மனித இனத்தின் சாபக்கேடு. ஆனால், அல்-காய்தாவைப் போலவே அமெரிக்காவும் உணராததால் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, சில ஆண்டுகளுக்குத் தாக்குதல்கள் தொடர்ந்தன. அல்-காய்தாவின் கனவு பலித்தது. மூன்று டிரில்லியன் டாலர்கள் செலவாகும் அளவுக்கு மேற்கத்திய நாடுகள் எதிர்த் தாக்குதல்களில் ஈடுபட்டன. ஆயிரக் கணக்கான உயிர்கள் பலிவாங்கப்பட்டன.
ஏராளமான அரசுகள் நிலைகுலைந்தன. ஜனநாயக நாடுகள் சர்வாதிகார நாடுகளாக மாறின. பல நாடுகள் தங்களுடைய மக்களுக்கு அளித்த சுதந்திர உரிமைகள் பலவற்றைப் பறித்தன. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யும் உரிமை, தனிப்பட்ட நபரின் தகவல் தொடர்பு உரிமை, சட்டபூர்வ மான நடவடிக்கைகளுக்கான உரிமை - ஏன் சில வேளைகளில் பேச்சுரிமையும்கூட - மறுக்கப்பட்டன அல்லது குலைக்கப்பட்டன. அடக்குமுறையைக் கட்ட விழ்த்துவிட்ட அரசுகள், நாட்டு நலனுக்காக அதைச் செய்வதாகக் கூறிக்கொண்டு தப்பித்தன.
பயங்கரவாதிகளின் எதிர்பார்ப்பு
பிரான்ஸ் நாட்டில் இப்போது செயல்பட்டுள்ள பயங்கரவாதிகளும், அரசு அதைப் போலவே செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அரசு தன்னுடைய கெடுபிடிகளை மேலும் இறுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஊடகங்கள் தங்களுடைய செயல்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அரசு கூற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
புதிய சட்டம், புதிய கட்டுப்பாடுகள், சுதந்திரமான செயல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைப் பட்டியலில் மேலும் சில சேர்க்கப்பட வேண்டும் என்பதே இதைச் செய்தவர்களின் நோக்கம். பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் கட்டுப்பாடுகளை அதிகரித்துக்கொண்டே செல்ல விரும்பும் அதிகார வர்க்கம், வாய்ப்புக்காக ஆவலோடு காத்துக்கொண்டிருப்பது அவர்களுக்குத் தெரியும்.
பலவீனமான, தோல்வியுற்ற அரசுகள்தான் இத்தாக்குதலைத் தங்கள் மீது தொடுக்கப்பட்ட போராகக் கருதும். அவைதான் தங்களுடைய தலைவர்களுக்குப் பாதுகாப்பை அதிகரித்து அவர்களை நிலவறைகளில் தங்கவைக்கும். மக்களுடைய உரிமைகளைக் கொடூரமாகக் கட்டுப்படுத்தும். உண்மையை வரவழைப் பதாகக் கூறிச் சித்ரவதைகளைக்கூடக் கட்டவிழ்த்துவிடும். இப்படிப்பட்ட தாக்குதல்கள் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என்பதை அரசியல் தலைவர்கள் ஏற்க மாட்டார்கள். சுதந்திரமான சமூகமே அதைக் கட்டுப்படுத்திவிடும் என்பதை அவர்கள் ஏற்க மாட்டார்கள்.
அச்சம்தான் அடிப்படை
பயங்கரவாதம் சாதாரணமான குற்றச்செயல் இல்லை. அது ஏற்படுத்தும் விளைவுகளையும் பொறுத்திருக்கிறது. ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றும் அளவுக்கோ அரசுகளைக் கவிழ்க்கும் அளவுக்கோ அது ஆற்றல் மிக்கது அல்ல. மக்களின் மனங்களில் அச்சத்தை மூட்டக்கூட அது செய்தி ஊடகங்களையும் அரசியல்வாதிகளையும்தான் நம்பியிருக்கிறது.
பயங்கரவாதத்தை அதனுடைய எல்லை, அதிகாரத் துக்கு உட்பட்டுச் சென்றே சந்தித்தாக வேண்டும். பதிலுக்கு அச்சமூட்டினால் அது பயந்து விடாது. பயங்கரவாதச் செயல் நடந்த பிறகு அச்சத்தைக் காட்டக் கூடாது, அதிகமாக உணர்ச்சி வசப்படக் கூடாது, நடந்த சம்பவங்கள்குறித்து அதிக விவரங்களை வெளியிடக் கூடாது. ஒவ்வொரு தாக்குதலையும் ஒரு பயங்கர அனுபவமாக மட்டும் கருதி அதை அப்படியே கடந்து செல்ல வேண்டும். அப்படிச் செய்தால்தான் பயங்கரவாதிகளுக்கு குரூரத் திருப்தி ஏற்படாமல் போகும். பயங்கரவாதத்தை வெல்ல அது ஒன்றே வழி.
- © ‘தி கார்டியன்’, தமிழில்: சாரி