டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன் அமைப்பின் சார்பில் என்.சி.பி.எச். அமைத்திருந்த அரங்கு, புத்தகக் காட்சியின் முக்கிய அரங்கங்களில் ஒன்று. அம்பேத்கர் எழுதிய கட்டுரைகள், அவரது உரைகள் ஆகியவற்றைத் தொகுத்து தமிழ், இந்தி, மராத்தி, ஒரியா போன்ற மொழிகளில் வெளியிட்டிருக்கிறது டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன். இந்தியில் 25 பாகங்கள் தொகுக்கப்பட்டிருக்கும் அம்பேத்கரின் கருத்துகள் தமிழில் மட்டுமே முழுதாக 37 பாகங்களாக வெளியிடப்பட்டிருக்கின்றன.
இவற்றில் 14 பாகங்கள் தவிர, அனைத்தும் இந்த அரங்கில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அதுவும் மிக மலிவான விலையில். ஆம், ஒரு புத்தகத்தின் விலை ரூ. 40தான். இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அம்பேத்கர் பவுண்டேஷனின் புத்தகங்களைத் தவிர, இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர், எம்.சி. ராஜா போன்ற தலித் தலைவர்களைப் பற்றிய புத்தகங்களும் இந்த அரங்கில் கிடைக்கின்றன.