புத்தகக் காட்சியில் புத்தகம் வாங்க உடல்நலம் ஒரு பொருட்டா? “இல்லவே இல்லை” என்று அழுத்தமாகச் சொல்கிறார் மூத்த எழுத்தாளரும் மார்க்ஸிய - பெரியாரிய அறிஞருமான எஸ்.வி. ராஜதுரை.
உடல்நலம் பாதிக்கப்பட்டு, கோவை அருகே ஒரு சின்ன கிராமத்தில் ஓய்வில் இருந்தாலும், அவருடைய மனது இந்தப் புத்தகக் காட்சியையும் புத்தகங்களையும் விட்டு நீங்கிவிடவில்லை. நண்பர்களுக்கு ஒரு பெரிய பட்டியலை அனுப்பியிருக்கிறார்.
“அடிப்படையில காஸ்மோபாலிடன் பார்வை கொண்டவன் நான். ஒரு மார்க்ஸியவாதியா இருந்தாலும் மார்க்ஸியத்தைத் தாண்டி எல்லா விஷயங்களையும் தெரிஞ்சுக்கணும்னு நெனைக்கிறவன்; எதிர்க் கருத்து கொண்டவங்ககிட்டயும் கத்துக்க முடியும்னு நம்புறவன். இந்தக் கத்துக்குற எண்ணம்தான், வாசிப்பு இல்லாத ஒரு நாளைக்கூடக் கற்பனை செய்ய முடியாத ஒரு பிணைப்பைப் புத்தகங்களோடு எனக்கு உருவாக்கியிருக்கு. கண்ணுல அறுவைச் சிகிச்சை செஞ்சுக்கிட்ட பின்னாடி, வாசிக்கிறது ரொம்ப சிரமமாத்தான் இருக்கு.
ஆனாலும், உருப்பெருக்காடியை வெச்சுப் படிக்கிறேன். படிக்காம இருக்க முடியலை. என்னைப் பொறுத்த அளவுல புத்தகக் காட்சிங்கிறது ஒவ்வொரு நாளும் புதுசாயிட்டிருக்குற உலகத்தை மேலும் புதுசா பார்க்குறதுக்கான ஜன்னல் மாதிரி. தவிர, என்னோட வாசகர்கள், தோழர்களோட உரையாடுறதுக்கு ஒரு வாய்ப்பு. நான் மொழிபெயர்த்த ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ புத்தகத்துக்கும், ஜார்ஜ் தாம்சனின் ‘மனிதசாரம்’ புத்தகத்துக்கும் இந்தப் புத்தகக் காட்சியில நல்ல வரவேற்பு இருக்குன்னு நண்பர்கள் சொல்லுறாங்க.
இந்த முறை பெரிய பட்டியலையே கொடுத்து அனுப்பியிருக்கேன் நண்பர்கள்கிட்ட. அதிலிருந்து ஒரு பத்துப் புத்தகங்களை மட்டும் உங்களுக்குச் சொல்றேன். டெர்ரி ஈகில்டனோட ‘மார்க்ஸிய இலக்கிய விமர்சனம்’- மொழிபெயர்ப்பு, மு. நித்தியானந்தனோட ‘கூலித் தமிழ்’, ஆ. சிவசுப்பிரமணியனோட ‘தமிழக வண்ணார் வரலாறும் வழக்காறுகளும்’, சேகர் பந்தோபாத்தியாய எழுதிய ‘நாமசூத்திரர்கள் இயக்கம்’- மொழிபெயர்ப்பு, பாமயனின் ‘விசும்பின் துளி’, சைமன் சிபாக் மாண்டிஃபயரின் ‘ஜெருசலேம்: உலகத்தின் வரலாறு’- மொழிபெயர்ப்பு, ரே பிராட்பரியோட ‘ஃபாரென்ஹீட் 451’- மொழிபெயர்ப்பு, மயூரா ரத்தினசாமியின் ‘மூன்றாவது துளுக்கு’ சிறுகதைத் தொகுப்பு, யூமா வாசுகியோட ‘சாத்தானும் சிறுமியும்’ கவிதைத் தொகுப்பு. இதெல்லாம் அந்தப் பட்டியல்ல முக்கியமான புத்தகங்கள்.
இந்தப் பட்டியல்ல உள்ள மொழிபெயர்ப்பு நூல்களோட மூல நூல்களை நான் ஆங்கிலத்திலேயே படிச்சிருக்கேன். ஆனா, நானும் ஒரு மொழிபெயர்ப்பாளர்ங்கிற முறையில இன்னொருத்தர் மொழிபெயர்ப்புல அவர் என்னென்ன சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார்னு தெரிஞ்சுக்குறதுல எனக்கு ஆர்வம் அதிகம்.
இன்னொரு முக்கியமான விஷயம், நான் கருத்தியல் சார்ந்து இயங்குபவன் என்றாலும்கூட படைப்பிலக்கியங்களின் மீதுதான் எனக்கு ஈடுபாடு அதிகம். உலகத்தைப் பற்றி, வாழ்க்கையைப் பற்றி படைப்பிலக்கியங்கள்தான் நுட்பமாக நமக்குச் சொல்லுதுங்கிறது என்னோட எண்ணம்!”