சிறப்புக் கட்டுரைகள்

வீழ்கிறாரா நிதீஷ் குமார்?

ராமசந்திர குஹா

சமீபத்தில், ‘ஜனதா பரிவார்’ என்ற பெயரில் சில அரசியல் கட்சித் தலைவர்கள் இணைந்து ஒரே கட்சியாகச் செயல்படுவது என்ற செய்தியுடன் வெளியான புகைப்படத்தைப் பார்த்ததும் என்னுடைய மனது அப்படியே சுருங்கி வாடிவிட்டது. அந்த புகைப்படத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் எச்.டி. தேவ கவுடா, இந்திய தேசிய லோகதள கட்சியின் அபய் சவுதாலா, ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதீஷ் குமார் ஆகியோர் இருந்தனர்.

இந்த 5 தலைவர்களில் கடைசியாகக் குறிப்பிடப்பட்டவர் வித்தியாசமானவர். யாதவ், சவுதாலா, கவுடா ஆகியோரைவிட நிதீஷ் குமார் 3 அடிப்படையான அம்சங்களில் வேறுபட்டவர். முதலாவதாக, அவருடைய தந்தையோ மனைவியோ மகனோ சகோதரரோ அரசியலில் இல்லை. இரண்டாவதாக, அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எதுவும் கிடையாது. மூன்றாவதாக, இந்த 5 பேரில் அவர் ஒருவர் மட்டும்தான் தன்னுடைய மாநிலத்தில் நல்ல நிர்வாகத்தைக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் மிக்கவர்.

2005-ல் நிதீஷ் குமார் முதலமைச்சராக பதவி ஏற்றபோது நாட்டிலேயே மிகவும் மோசமான நிலையில் இருந்தது பிஹார். சட்டம்-ஒழுங்கு நிலைமை முழுதாகக் கெட்டிருந்தது. கொலைகளும் ஆள் கடத்தலும் சகஜமாக நடந்துகொண்டிருந்தன. பல மாவட்டங்களில் பகலில்கூட வாகனங்களில் செல்வது பாதுகாப்பானதல்ல என்ற நிலையே நிலவியது. லாலு பிரசாத்தும் அவருடைய குடும்பமும் ஆட்சி நடத்திய 15 ஆண்டுகளில் மாநிலத்தின் நிதி வளம் குன்றியது. அதிகாரவர்க்கம் ஆட்சி செய்வதற்கான மன உறுதியை இழந்துவிட்டது. அந்தக் காலத்தில் பயன் அடைந்தது ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினர்கள், மாநில அமைச்சர்கள், அவர்களுடைய நெருங்கிய, தூரத்து உறவினர்கள் மட்டுமே.

நிதீஷ் ஆட்சியில்...

லாலுவின் ஆட்சிக் காலத்துக்கு நேர்மாறாக இருந்தது நிதீஷ் ஆட்சிக் காலம். தவறான செயல் எதிலும் அவர் ஈடுபடவில்லை. கடுமையான உழைப்பாளி என்று பெயரெடுத்தவர் நிதீஷ். வாஜ்பாய் அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக நன்றாகச் செயல்பட்டார். தத்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையை அவர்தான் அறிமுகப்படுத்தினார். பிஹாரைப் பீடித்திருக்கும் குண்டர்கள் ராஜ்ஜியத்தை ஒழிப்போம், அமைதி, நிலையான ஆட்சி, வளர்ச்சி ஆகியவற்றைக் கொண்டுவருவோம் என்று வாக்குறுதி அளித்து அவருடைய ஐக்கிய ஜனதா தளமும் பாரதிய ஜனதாவும் சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தன.

இந்தக் கூட்டணி 2005 நவம்பரில் பிஹாரில் ஆட்சிக்கு வந்தது. ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த நிதீஷ் குமார் முதலமைச்சராகவும் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த சுசீல்குமார் மோடி துணை முதல்வர், நிதியமைச்சராகவும் பதவியேற்றனர். இருவரும் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் மாணவர்களாக இருந்தபோதே சேர்ந்து பணியாற்றியவர்கள். ஒற்றுமையுள்ள அரசியல் சகாக்களாகப் பணியாற்றினார்கள். பிஹாரின் நிலைமை மெல்ல மெல்ல மேம்படத் தொடங்கியது. சட்டம்-ஒழுங்கு நிலைமையில் இது வெளிப்படையாகத் தெரிந்தது.

அடுத்து கல்வித்துறையில் முன்னேற்றம் ஏற்பட்டது. உயர் நிலைப் பள்ளிகளில் சேரும் மாணவிகளுக்கு சைக்கிள்கள் இலவசமாக வழங்கப்பட்டதால் படிப்பைத் தொடர்வது அதிகமானது. பயிலும் வழிகளையும் கற்றுத்தரும் உத்திகளையும் கண்காணித்து அரசு மேம்படுத்தியது.

அடித்தளக் கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் அரசு கவனம் செலுத்தியது. புதிய சாலைகள் போடப்பட்டன. ஆறுகளைக் கடக்க பாலங்கள் கட்டப்பட்டு வட்டங்களும் மாவட்டங்களும் சாலை வழியாக இணைக்கப்பட்டன. சமூகச் சூழலும் மேம்படத் தொடங்கியது. சாதி, மதப் பூசல்கள் அடியோடு மறையாவிட்டாலும் அவை வளரவும் தொடரவும் வாய்ப்புகள் குறைந்தன. முஸ்லிம்கள், தலித்கள், மகளிர் மற்றும் நலிவுற்ற பிரிவினர் அனைவரும் முன்பைவிட பாதுகாப்பாக இருப்பதாக உணரத் தொடங்கினார்கள்.

நிதீஷ் குமாரும் சுசீல்குமார் மோடியும் மாநிலம் முழுவதும் மக்களுடைய மரியாதையைப் பெற்றனர். அவர்கள் மீது மக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கை 2010 சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் எதிரொலித்தது. பேரவையின் ஐந்தில் நான்கு பங்கு தொகுதிகளை அந்தக் கூட்டணி கைப்பற்றியது. பிஹாரின் மோசமான காலத்தில் அந்த மாநிலத்தைவிட்டு வெளியேறியவர்கள் மீண்டும் சொந்த மாநிலத்துக்குத் திரும்பத் தொடங்கினர். தொழில் வளர்ச்சியை மேம்படுத்த அவர்கள் முதலீடு கொண்டுவருவார்கள் என்று நம்பும் அளவுக்கு அவர்களுடைய திரும்புதல் அமைந்தது.

அதே கூட்டணி மேலும் தொடர்ந்திருந்தால் மூன்றாவது முறையாகவும் அதுதான் ஆட்சிக்கு வந்திருக்கும். அந்தோ பரிதாபம், 2013-லிருந்தே நிலைமை மாறத் தொடங்கியது. நாட்டின் இன்னொரு மூலையில் இருக்கும் ஒரு அரசியல்வாதிதான் அதற்குக் காரணம். பிஹாரில் உள்ள மோடியுடன் நன்கு இணைந்து செயல்பட்ட நிதீஷ் குமார், குஜராத்தைச் சேர்ந்த மோடியைக் கட்டோடு வெறுத்தார். 2009 பொதுத் தேர்தலின்போது கூட்ட மேடையில் நரேந்திர மோடிக்குப் பக்கத்தில் நிறுத்தப்பட்ட நிதீஷ் குமார், அவர் தன்னுடைய கையைத் தூக்கிப் பிடித்திருப்பதையே விரும்பாமல் வேதனையிலும் தர்மசங்கடத்திலும் நெளிவதை அப்போது எடுத்த புகைப்படமே காட்டியது.

நரேந்திர மோடியை நிதீஷ் குமாருக்குப் பிடிக்காமல் போனது தனிப்பட்ட முறையிலானது, அதுவே அரசியலாகவும் மாறிவிட்டது. நரேந்திர மோடியை ஆணவக்காரராகவும் அதிகாரம் செலுத்துபவராகவும் பார்த்தார் நிதீஷ் குமார்.

மோடிக்கு முக்கியத்துவம்

2013 முழுக்க பாரதிய ஜனதா கட்சிக்குள் நரேந்திர மோடி மேலும் மேலும் முக்கியத்துவம் பெறத் தொடங்கினார். மார்ச் மாதம் கட்சியின் மத்திய ஆட்சிமன்றக் குழுவில் உறுப்பினரானார். ஜூன் மாதம் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவரானார். அந்த நிலையில், பாரதிய ஜனதாவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக நிதீஷ் குமார் அறிவித்தார். பாரதிய ஜனதா அதனால் நிலைகுலைந்துவிடவில்லை. செப்டம்பர் மாதம் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக மோடி நியமிக்கப்பட்டார்.

தனித்துப் போவது என்ற முடிவை 2 விஷயங்களைக் கருத்தில் கொண்டு நிதீஷ் குமார் எடுத்தார். முதலமைச்சராக இருந்த 8 ஆண்டுகளில் தனக்கும் தன்னுடைய கட்சிக்கும் தனிப்பட்ட ஆதரவை வலுப்படுத்திக்கொண்டிருந்தார் நிதீஷ் குமார். நரேந்திர மோடியுடன் சேர்ந்தால் தன்னை ஆதரித்துவரும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் மீண்டும் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்குப் போய்விடுவார்கள் என்று அஞ்சினார். 2014 மக்களவை பொதுத் தேர்தல் முடிவு அவருடைய கணிப்பு தவறானது என்று நிரூபித்தது. பிஹாரில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு வெறும் 2 தொகுதிகள்தான் கிடைத்தன. பாரதிய ஜனதா 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதனுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்ட லோக்சக்தி ஜனதா 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்தத் தோல்விக்கு தார்மிகப் பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியிலிருந்து மே 17-ம் தேதி விலகினார் நிதீஷ் குமார். ஜித்தன் ராம் மாஞ்சி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 6 மாதங்களுக்கு நிதீஷ் குமார் தன்னை அதிகம் வெளிக்காட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருந்தார். சில நாட்களுக்கு முன்னர்தான் முலாயம், லாலு பிரசாத் ஆகியோருடன் விருந்தில் கலந்துகொண்டார். நரேந்திர மோடிக்கும் பாஜகவுக்கும் எதிராக காங்கிரஸ் அல்லாத ஐக்கிய முன்னணியை ஏற்படுத்த அவர்கள் முடிவு செய்தனர்.

தவறான கணிப்பு

2013 ஜூன் மாதம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவது என்று நிதீஷ் குமார் எடுத்த முடிவு தவறானது என்று காலங்கடந்து பார்க்கும்போது தெரிகிறது. ஆனால், சமாஜ்வாடி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், இந்திய தேசிய லோகதளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது அல்லது இணைவது என்ற முடிவு தவறான அரசியல் கணிப்பு என்பதை இப்போதே கூறிவிட முடியும். நேர்மைக்கும் நிர்வாகத் திறமைக்கும் புகழ் பெற்றவர் நிதீஷ் குமார்; அவர் கைகோக்க நினைக்கும் தலைவர்களோ குடும்ப நலனைத் தவிர வேறு எதையும் சிந்தித்து அறியாதவர்கள், நல்ல நிர்வாகத்தைத் தர வேண்டும் என்ற அக்கறை இல்லாதவர்கள், ஊழலில் திளைத்தவர்கள். எனவே தார்மிகரீதியில் நிதீஷ் குமார் எடுத்த முடிவு சரியல்ல. அரசியல்ரீதியாகப் பார்த்தாலும் நிதீஷ் குமாருக்கு அது லாபத்தைத் தராது. இன்றைய இளைய வாக்காளர்கள் வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றைத்தான் விரும்புகிறார்கள். முலாயமும் லாலுவும் தங்களை மட்டுமே முன்னிலைப்படுத்தி அரசியல் செல்வாக்கை வளர்ப்பவர்கள். தங்களுடைய மாநிலங்களில் தங்களைத் தவிர மற்றவர்கள் செல்வாக்கைப் பெறுவதை சகிக்காதவர்கள்.

மக்களவைப் பொதுத் தேர்தலில் தன்னுடைய கட்சி பெரும்தோல்வியை அடைந்த பிறகு எதையாவது செய்து தன்னுடைய செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார் நிதீஷ் குமார் என்பது உண்மையே. தன்னுடைய வாழ்நாள் முழுக்க எதிர்த்த காங்கிரஸ் கட்சியுடன் அவரால் இணைந்து பணியாற்ற முடியாது; அரசியலில் முதிர்ச்சி பெற்ற அவரால், பக்குவப்படாத ராகுல் காந்திக்குக் கட்டுப்பட்டு அந்தக் கூட்டணியில் இளைய பங்காளியாக இருக்க முடியாது. இன்னொரு கட்சி ஆம் ஆத்மி. அந்தக் கட்சித் தலைவர்களின் நிர்வாகத் திறமை, ஆற்றல், அறிவு போன்றவை இதுவரை எந்த மாநிலத்திலும் சோதித்துப் பார்க்கப்படவில்லை. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அடுத்த இடத்திலும் நின்று நிதீஷால் செயலாற்ற முடியாது. வேறு வழியில்லாததால்தான் யாதவ்களுடன் கூட்டு சேர்ந்தார் நிதீஷ் என்று அவருடைய ஆதரவாளர்கள் கூற முடியும். முதல்வர் பதவி வேண்டாம் என்று முடிவெடுத்த அவரால், அரசியல் அடையாளத்தை நீக்கிவிட்டு மக்களுக்கு நேரடியாகவே சேவை செய்திருக்க முடியும். அவர் மிகவும் விரும்பிய ஜெயப்பிரகாஷ் நாராயணன் அதைத்தான் செய்தார்.

பாவம் மக்கள்

நிதீஷ் குமாருக்காகப் பரிதாபப்படும் வேளையில் பிஹார் மக்களுக்காக இரட்டிப்பாகப் பரிதாபப்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம். 2005 முதல் 2014 வரையில் பிஹாரை நல்ல முறையில் ஆட்சி செய்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஏற்படுத்திய ஆற்றலையும் நல்லெண்ணங்களையும் மீண்டும் எப்படி ஏற்படுத்துவது? பிஹாரில் அடுத்து நடைபெறவுள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் சுசீல்குமார் மோடியே முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் தன்னுடைய கட்சியில் உள்ள வகுப்புவாத சக்திகளாலேயே செயல்பட முடியாமல் அவர் முடக்கப்படுவார். ஜனதா பரிவாரம் அப்படியே வெற்றி பெற்றாலும் லாலுவையும் அவருடைய சொந்தபந்தங்களையும் சமாதானப்படுத்தி ஆட்சியைத் தொடர நிதீஷ் குமார் ஆற்றலையும் நேரத்தையும் அதிகம் செலவிட நேரும்.

பாட்னாவில் பிறந்து வளர்ந்து இப்போது மாநிலத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஒரு பெண் கல்வியாளர் எனக்கு எழுதியுள்ளார், “பயங்கரம்! பிஹாரில் என்ன நடக்கிறது? மிக நன்றாக நடந்துவந்த நிர்வாகம் படுபயங்கரமாக இவ்வளவு விரைவில் மாறிவிட்டதே!” என்று. இனி இது இப்படித்தான் தொடரும் அல்லது இதைவிட மோசமாகும்!

- ராமச்சந்திர குஹா, ‘இந்தியா ஆஃப்டர் காந்தி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

SCROLL FOR NEXT