சிறப்புக் கட்டுரைகள்

வாசிப்பின் பக்கம் வரும் கணினி உலகம்!

செய்திப்பிரிவு

முதல் நாள் சென்னைப் புத்தகக் காட்சியின் ஆச்சர்ய - கவனம் கோரும் விஷயமாக அமைந்தது அரங்குகள் எங்கும் வியாபித்திருந்த கணினித் துறையினர். எந்த அரங்கில் புகுந்தாலும் மென்பொருள் துறையைச் சேர்ந்த இளைஞர்களைப் பரவலாகப் பார்க்க முடிந்தது.

“கம்யூட்டர்க்கு முன்னாடி உட்கார்ந்திருந்தாலே வாசிக்கிற பழக்கமோ, புத்தகம் வாங்குற பழக்கமோ போயிடும்கிறது தப்புங்க. உண்மையில நானெல்லாம் அதிகம் வாசிக்க ஆரம்பிச்சதே கம்ப் யூட்டர் முன்னாடி உட்கார ஆரம்பிச்ச பின்னாடிதான். ஃபேஸ்புக், ப்ளாக்ல நெறைய படிக்கிறோம்கிறது உண்மைதான். ஆனா, நாம விரும்பிப் படிக்குறது எதுவானாலும் புத்தகமா கையில இருக்கணும்கிற நெனப்பு எல்லோர் மாதிரியேதானே எங்களுக்கும் வரும்?” என்பதே பெரும்பாலான இளைஞர்கள் சொன்னது.

வாசிப்பு தொடர்பாகப் பேசியவர்கள் குறிப்பிட்ட ஒரு விஷயம் இங்கே அவசியம் குறிப்பிட வேண்டியது.

“முன்னெல்லாம் கவிதை, சிறுகதை, நாவல்தான் அதிகம் வாங்குவோம். இப்போ அரசியல் கட்டுரைகள் புத்தகங்களை அதிகம் தேடுறோம். என் பக்கத்து சீட்ல உட்கார்ந்து நேத்து வரைக்கும் வேலை பாத்துக்கிட்டு இருந்தவன் இன்னைக்கு வேலையில இல்லை. திடீர்ன்னு ஒரே நாள்ல ‘லே ஆஃப்’னு சொல்லி வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. கடந்த ஒரு மாசத்துல 10 பேர் எங்க ஆபிஸுல மட்டும் இப்படி. அதிர்ச்சிலேர்ந்து மீளவே முடியல. இப்போலாம் அரசியல், சமூக விழிப்புணர்வு புத்தகங்கள்தான் ரொம்பப் பிடிக்குது. தேடிக்கிட்டிருக்கோம்” என்பதே பெரும் பாலானவர்கள் தெரிவித்தது.

இந்தத் தலைமுறைக்குப் புத்தகங்கள் வாங்கும் பழக்கம் இல்லை என்று வருத்தப்படும் போன தலைமுறைக்கு இந்த நல்ல செய்தி முதல் நாள் பளிச்!

SCROLL FOR NEXT