பரபரப்பான பணிகளுக்கிடையிலும் வாசிப்புக்காகவும் எழுதுவதற்காகவும் நேரம் ஒதுக்க முடிந்த பாக்கியவான்கள் மிகக் குறைவு. அவர்களில் ஒருவர்தான் டாக்டர் கு. கணேசன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக, வார இதழ்கள், நாளிதழ்கள் என்று தமிழின் முக்கியமான பத்திரிகைகளில் மருத்துவம் தொடர்பான கட்டுரைகளை எழுதிவருபவர் இவர்.
ராஜபாளையத்தில் வசிக்கும் இவர், ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சிக்காக சென்னை வந்து ஆயிரக் கணக்கில் செலவுசெய்து புத்தகங்களை அள்ளிச் செல்வார். இந்த முறை புத்தகக் காட்சியில் கார் நிறைய புத்தகங்களை அள்ளிச் சென்றவரிடம் பேசினோம்.
“உன் வாசிப்பு எவ்வளவு நாள் இருக்குதோ அவ்வளவு நாள் வரைக்கும்தான் நீ புது மனுஷனா இருக்க முடியும். வாசிப்ப நீ விட்டுட்டா, பழையவனா ஆயிடுவேன்னு என் அப்பா சொல்லுவார். டாக்டராகிட்டா பலரும் தொழில் தொழில்னு ஓடுவாங்க. ஆனா, டாக்டரான பிறகுதான் நான் அதிகம் படிக்க ஆரம்பிச்சேன். ஒரு கட்டத்துல வாசிப்பு என்னை எழுத்தை நோக்கித் தள்ளிச்சு. எழுத்தும் வாசிப்பும் இப்போ பிரிக்க முடியாத அங்கமாயிடுச்சு. நெறைய மருத்துவர்கள் வாசிப்பைக் குறைச்சிடுறாங்க. இல்லேன்னா, ஆங்கிலப் புத்தகங்களோட அவங்க வாசிப்பு நின்னுபோயிடுது. அப்படி இருக்கக் கூடாது. தமிழ்ல படிச்சாத்தான் நம்ம சமூகத்தோட நிலையும் போக்கும் டாக்டர்களுக்குத் தெரியும். மக்களோட உணர்வுகளையும் புரிஞ்சுக்க முடியும்” என்றார்.
கார் கொள்ளாத புத்தகங்களை வாங்கியிருக்கும் டாக்டர் கணேசன், “ஒவ்வொரு வருஷமும் புத்தகக் காட்சிக்காகக் காத்திருப்பேன். இப்போ மூணு நாள் முழுக்கப் புத்தக வேட்டைதான். முதல் நாள் பாதி வரைக்கும் 35 புத்தகங்கள் வாங்கியிருக்கேன். இன்னும் பாதி நாள் இருக்கு. அதுக்கப்புறம் இரண்டு நாள் இருக்கு. மொத்தமா அள்ளிக்கிட்டுப் போனாதான் நமக்குச் சந்தோஷம்” என்கிறார். அவர் வாங்கிய புத்தகங்களில் சிலவற்றை வாஞ்சையுடன் காட்டுகிறார்.
“பூமணியின் ‘அஞ்ஞாடி...’, வாண்டுமாமா எழுதிய ‘நமது உடலின் மர்மங்கள்’, பாரதி தம்பியின் ‘தவிக்குதே தவிக்குதே’, ரே பிராட்பரியின் அறிவியல் புனைகதையான ‘ஃபாரன்ஹீட்’ ஆகிய புத்தகங்களோடு மருத்துவம் தொடர்பான புத்தகங்கள் 20-க்கும் மேல வாங்கியிருக்கேன்” என்கிறார். அத்தனைப் புத்தகங்களையும் பத்திரமாக காரில் வைத்துக்கொண்டு கையசைத்தபடி விடைபெறுகிறார் டாக்டர் கு. கணேசன்!
படம்: க.ஸ்ரீபரத்