உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், சென்னைப் புத்தகக் காட்சிக்குப் புத்தகம் வாங்க வருவதற்கு என்றே ஒரு வாசகர் கூட்டம் உண்டு. பிரசாந்தி சேகர் அந்த ரகம். தேர்ந்த வாசகரான பிரசாந்தி, கட்டுரையாளரும்கூட. யாழ்ப் பாணத்தில் பிறந்து, ஜெர்மனியில் வளர்ந்து, இப்போது துபையில் வசிக்கிறார். புத்தகங்கள் வாங்குவதற்காக சென்னைப் புத்தகக் காட்சிக்கு வந்தவர், தன் வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
“பகல் முழுதும் நிலத்தை வெப்பமேற்றிச் செல்லும் வெயிலுக்கு ஒவ்வொரு இரவிலும் மழையெனப் பெய்வது எனது வாசிப்பு. புத்தகங்களுடன் உண்டு உறங்கி நடப்பவள் நான். ஜெர்மனியிலும் துபையிலும் இன்னும் பல இடங்களிலும் புத்தகக் காட்சிகளில் பங்கேற்றிருக்கிறேன். ஆனாலும், சென்னைப் புத்தகக் காட்சி அனுபவம் தனி.
நான் ஒரு மூட்டைப் புத்தகங்கள் வாங்கி யிருக்கிறேன். முக்கியமானவை இவை: அம்பையின் ‘அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு’, அ. இரவியின் ‘1958’, தி. ஜானகிராமனின் ‘செம்பருத்தி’, குணா கவியழகனின் ‘நஞ்சுண்ட காடு’, எஸ். ராம கிருஷ்ணன் தொகுத்த ‘100 சிறந்த கதைகள்’ ‘சதத் ஹசன் மண்ட்டோ கதைகள்’, சே. பிருந்தாவின் ‘மகளுக்குச் சொன்ன கதை’ ” என்றார் பிரசாந்தி சேகர்.