உ.வே.சாமிநாதையர் பதிப்பித்த நூல்களின் தனிச்சிறப்பு அவற்றில் இடம்பெற்ற முன்னுரைகள் என்பதில் சந்தேகமில்லை. பதிப்பாசிரியர் ப.சரவணன் உ.வே.சா. முன்னுரைகள் அனைத்தையும் தொகுத்து ஒரு நூலாகப் பதிப்பிக்கவிருக்கிறார். காலச் சுவடு பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் இந்தப் புத்தகத்துக்கு எழுத்தாளர் பெருமாள் முருகன் கொடுத்த அணிந்துரையிலிருந்து சில பகுதிகள் இங்கே…
உ.வே. சாமிநாதையரின் முன்னுரைகள் பெரும் தகவல் களஞ்சியங்களாகவும் ஆவணத் தன்மை கொண்டவையாகவும் விளங்குகின்றன. அவை பலதரப்பட்டவை. நூற்செய்திகள் அனைத்தையும் ஒருசேரக் கொடுத்துவிடும் முன்னுரைகள் உண்டு. தமிழ்விடு தூது நூலுக்கான முன்னுரை அதற்கு பொருத்தமான சான்று. தூது இலக்கணம் தொடங்கி தமிழ் விடு தூதின் பொருளைச் சுருக்கித் தருதல் எனத் தொடர்ந்து பதிப்பு சார்ந்த விஷயங்களைப் பேசி முடிகிறது அது. பல சிறு நூல்களுக்கு இத்தகைய முன்னுரைகள் அமைந்திருக்கின்றன. பெரும்பாலான சிற்றிலக்கியங்கள், புராணங்கள் ஆகியவற்றின் முன்னுரைகள் இத்தன்மையவை. சில பொதுச் செய்திகளையும் பதிப்புத் தகவல்களையும் மட்டும் கொடுக்கும் முன்னுரைகள் இன்னொரு வகை. சங்க இலக்கியம், காப்பியங்கள் உள்ளிட்டவற்றின் முன்னுரைகளை இதற்குச் சான்றாகச் சொல்லலாம். இத்தகையவற்றில் ஆராய்ச்சிக் குறிப்புக்கள் என விரிவான பகுதி தனியே எழுதப்பட்டிருக்கும்.
அவர் பதிப்பித்த நூல் பட்டியலைக் காணும்போது சங்க இலக்கியங்களையும் காப்பியங்களையும் பதிப்பித் தவர் சாதாரணமான புராணங்களையும் சிற்றிலக்கியங் களையும் பதிப்பிக்க ஏன் முனைந்தார் என்று தோன்றும். அந்நேரத்தைச் சிறந்த நூல் ஒன்றைப் பதிப்பிக்கச் செலவிட்டிருக்கலாமே என்றும் எண்ணம் வரும். அகநானூற்றைப் பதிப்பிக்க எண்ணியுள்ளார். கம்பராமாயணத்தைப் பதிப்பிக்கும் எண்ணமும் இருந் துள்ளது. இம்முன்னுரைகளை வாசிக்கும்போது சாதாரண நூல்களைப் பதிப்பிக்க அவர் நேரம் செலவிட அவசியம் நேர்ந்துள்ளது எனப் புரிகிறது. அவர் நபர்களையும் மரபான நிறுவனங்களையுமே சார்ந்து தம் பணிகளைச் செய்ய முடிந்தது. அச்செயல்பாட்டில் ஒருவரின் வேண்டு கோளை ஏற்று அதற்காக ஒரு சாதாரண நூலைப் பதிப்பிக்க நேர்ந்திருக்கிறது.
தமிழ் நூல்களின் பதிப்பு வரலாறு முறையாக எழுதப்பட இவற்றில் பல தரவுகள் உள்ளன. ஏடுகளின் குடிவழி அறிவதற்கு அவர் ஏடு தேடிய இடங்கள், குடும்பங்கள், புலமை மரபினர் பற்றிய பல்வேறு தகவல்கள் சான்றாகும். பதிப்பை உருவாக்கவும் அதை அடுத்தடுத்து மேம்படுத்தவும் அவர் கையாளும் முறைகள், அவற்றைக் கற்றுக்கொண்ட செயல்கள், நாடிய உதவிகள், பின்னிணைப்புகளின் அருமையை உணர்ந்த பாங்கு ஆகியவற்றைக் கண்டறியலாம். தமிழ் நூல் பதிப்புகளுக்கென உள்ள தனித்தன்மைகளை விரிவாக இவை கொண்டிருக்கின்றன. ஒரு நூலின் முன்னுரையில் அடுத்து அவர் பதிப்பிக்க உள்ள நூல் பற்றிய விவரத்தை வெளிப்படுத்துவது உண்டு. அதன் தேவையும் அப்படிப்பட்ட பதிப்பு மரபு ஒன்றையே அவர் உருவாக்கியமையும் முக்கியமானவை.
ரூ. 1000 மதிப்புள்ள இந்த நூல் முன்வெளியீட்டுத் திட்டத்தில் ரூ. 650-க்குக் கிடைக்கும். இந்தச் சலுகை ஜனவரி 5, 2015 வரை மட்டுமே.
தொடர்புக்கு: காலச்சுவடு பதிப்பகம், தலைமை அலுவலகம் 669, கே. பி. சாலை, நாகர்கோவில் 629 001
தொலைபேசி: 91-4652-278525, மின்னஞ்சல்: nagercoil@kalachuvadu.com, chennai@kalachuvadu.com