சிறப்புக் கட்டுரைகள்

தோல்வியுற்ற அரசும், அரசியல் அமைப்பும்

செய்திப்பிரிவு

தொடரும் மின்வெட்டுப் பிரச்சினை, தோல்வியடைந்த விமான சேவை, வெளியுறவுக் கொள்கையில் போதுமான கருத்துகள் இல்லாமை, வீங்கிக்கொண்டிருக்கும் பொதுத் துறை நிறுவனங்கள் என்று வடக்கு சைப்ரஸில் நடந்துகொண்டிருப்பவைதான் என்ன?

இதற்கான விடை எளிமையானது; முகத்தில் அறையக் கூடியது: நம்மிடம் இருக்கும் அரசும், அரசியல் அமைப்பும் அரசு நிர்வாகத்துக்குத் தகுதி இல்லாதவை. ஆனால், தற்சமயத்துக்கு நம்மிடம் வேறு மாற்றுகளும் இல்லை.

நமது நாடாளுமன்ற அமைப்பின் அபத்தத்தைப் பார்ப்போம். நமது நாட்டின் மக்கள் தொகை 2 லட்சத்து 50 ஆயிரம். இந்தச் ‘சிறு நகரத்தை’ நிர்வகிக்கும் நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை, 50. ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 40,000 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.2 லட்சம்) சம்பளமாகப் பெறுபவர்கள். அவர்களது மறைமுக வருமானம் எவ்வளவு என்பது யாருக்குத் தெரியும்? 6.2 கோடி மக்கள் தொகையைக் கொண்ட பிரிட்டனை எடுத்துக்கொள்வோம்.

அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 650. கிட்டத்தட்ட 1 லட்சம் பேருக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற கணக்கில் பிரிட்டன் நாடாளுமன்றம் செயல்படுகிறது. ஆனால், வடக்கு சைப்ரஸில் 5,000 பேருக்கு ஒருவர் என்ற கணக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறோம். மேலும், துருக்கி தரும் நிதியுதவியுடன் பிச்சைக்கார நாடாக நம் நாட்டை மாற்றியிருக்கிறோம். நமக்குக் கிடைக்கும் வருமானத்தின் பெரும் பகுதி, சூதாட்ட விடுதிகளிலும், பாலியல் தொழிலிலும் இருந்துதான் கிடைக்கிறது. அதிலும் லாபத்தின் பெரும் பகுதி வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் துருக்கி நமக்கு 400 முதல் 900 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி செய்கிறது. அதாவது வடக்கு சைப்ரஸின் வரவுசெலவுத் திட்டத்தில் மூன்றில் ஒரு பகுதி! நம்மிடம் இருக்கும் மிகப் பெரிய கேள்வி இதுதான். 1974-ல் கிரேக்கம் நம்மை ஆக்கிரமிக்க வந்தபோது நமக்கு உதவியது துருக்கிதான். 1983-ல் நமது விடுதலையை அங்கீகரித்த நாடும் துருக்கிதான். இந்த நாட்டிடம் நாம் வாங்கிக்கொண்டிருக்கும் கடனை எப்போது திருப்பிச் செலுத்தப்போகிறோம்? வடக்கு சைப்ரஸின் விடுதலைக்காக உயிர்நீத்த துருக்கி வீரர்களின் குடும்பங்களுக்கு நாம் செலுத்தும் நன்றி இதுதானா?

உலக நாடுகள் பலவற்றுடன், நாம் குறிப்பிட்ட அளவிலான உறவை வைத்திருக்கிறோம். ஆனால், அவற்றால் என்ன பயன்? மத்தியக் கிழக்கு நாடுகளை எடுத்துக்கொள்வோம். அபுதாபி, குவைத், பஹ்ரைன் போன்ற நாடுகளில் நமது ‘பிரநிதிகளின் அலுவலகங்கள்’ இருப்பதை நாம் அறிந்திருக்கிறோமா? நமது பிரதிநிதிகள் அங்கு என்னதான் செய்கிறார்கள்?

உள்நாட்டு நிர்வாகத்துக்கு வருவோம். நமது நகர வளர்ச்சித் திட்டங்கள் வெட்ககரமானவை. ரிசோகார்பாஸோ நகருக்குச் சாலைமார்க்கமாகச் சென்றவர்களுக்குத் தெரியும் அவற்றின் நிலை எப்படி இருக்கிறது என்று. நாம் சொல்வது இது ஒன்றுதான்: தகுதியான தலைவர்கள் நம்மை ஆள வேண்டும்.

நாம் செய்ய வேண்டியது என்ன? நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50-லிருந்து 5 ஆகக் குறைக்க வேண்டும். அரசின் செலவீனங்களைக் குறைக்க வேண்டும். திறனற்ற அதிகாரிகளால் நிர்வகிக்கப்படும் பயனற்றத் திட்டங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்.

சுற்றுலாத் துறையை ஊக்கப்படுத்துவதுடன், அதற்கான முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். இதுபோன்ற தீர்வுகளை ஒரே இரவில் நாம் எடுத்துவிட முடியாதுதான். ஆனால், நாம் எடுத்துவைக்கும் உறுதியான, சரியான பாதையில் நமது வருங்காலச் சந்ததியினர் வெற்றிகரமாகப் பயணிக்கத் தேவையான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும் என்பதுதான் இதில் முக்கியம்.

- வடக்கு சைப்ரஸ் நாளிதழ் தலையங்கம்

SCROLL FOR NEXT