மலர்கள் பரவிக்கிடக்கும் சாலைகளின் வழியே செல்லும்போது, அவற்றை மிதித்துவிடாமல் செல்ல மனம் எவ்வளவோ பிரயாசைப்படுகிறது. மலர்கள் இயல்பாக ஒன்றை ஒன்றாகப் பலவாகப் பிணைத்துக்கொண்டு கிடக்கின்றன. கால்கள் எவ்வளவு கவனமெடுத்துக்கொண்டாலும் மலர்கள் நம் காலடிகளில் நசுங்கி மேலும் சிதைவுறுகின்றன. மனம் பதைபதைக்கிறது. மலர்கள் மரங்களிலிருந்தும் செடிகளிலிருந்தும் உதிர்ந்துவிட்டனதான். நம் கற்பனைப்படி இப்போது அவற்றுக்கு உயிரில்லை. ஆனாலும், மிதித்து நடப்பது மனதை வலிக்கச்செய்கிறது. மலர்களைக் குப்பையாக அள்ளி வெளியே தள்ளும்போது நம் உலகின் அழகையெல்லாம் சின்னாபின்னம் செய்துதான் குப்பைத் தொட்டிகளில் போடுகிறோம் என்கிற பரிதவிப்பில் மனம் சிக்கிக்கொள்கிறது.
மலர்கள் சரி; தேவையற்றபோது குப்பைகுப்பையாக அள்ளித்தானே தீர வேண்டும் என்று ஒருவகையாக மனதைத் தேற்றிக்கொள்கிறோம். ஆனால், மழலைகளையும் இப்படி குப்பைகுப்பையாக அள்ள முடியுமா? அப்படியே அள்ளி சவக்குழிகளில் கொட்ட முடியுமா? இப்படியெல்லாம்கூட ஒரு மனித இனத்தின் வாழ்க்கை அமைய முடியுமா?
மார்க்க விசுவாசம்?
தெஹ்ரிக்-இ-தலிபான்கள் பெஷாவரில் நிகழ்த்திய படுகொலைகளை என்னவென்று சொல்வது? இந்தப் படுகொலைகளைத் தங்களின் மார்க்கத்தின்மீதே வெறுப்பும் அவநம்பிக்கையும் கொண்ட மனிதர்கள் மட்டுமே நிகழ்த்தியிருக்க முடியும். ஆனால், அந்த மார்க்கத்தின் பொருட்டாகத்தான் அவர்கள் இன்று உலக நாடுகளால் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். இந்த மார்க்கத்துக்கு நேர்ந்த அவலம் இது. ஒவ்வொருவரின் மார்க்க விசுவாசத்தின்மீதும் எப்போதும் கேள்விக்கணைகளைத் தொடுத்துக்கொண்டிருந்த ஒரு சமூகத்துக்கு, இறுதியாக இந்த சாபக்கேடு நிகழ்ந்திருக்கிறது. சமூகப் பொறுப்புணர்வுகளில் மார்க்கரீதியாக மனம் தோய முடியாமல் போகும்போது இத்தகைய விபரீதச் சிந்தனைகள் எழுவது இயல்பானது என்று இப்போது புரிந்துகொள்கிறோம்.
அமைதியின் யாசகம்
மகான்களெல்லாம் தீர்க்கதரிசிகளாகவோ அல்லது சமூகத் தலைவர்களாகவோ மாறி வந்ததன் நோக்கங்களை அறிந்துகொள்ள வழியில்லாதவர்களுக்குக் கடைசியில் ஆயுதங்கள் தோள் கொடுத்திருக்கின்றன. அந்தந்தக் காலகட்டத்தில் மக்கள் சமூகத்தின் இன்னல்களை உணர்ந் தவர்களாக, அவர்கள் தங்களின் வாழ்வின் இன்பங்களையும் குடும்ப மேலாண்மைகளையும் புறக்கணித்துத் தம்மைத் தாமே சமூக அர்ப்பணம் செய்கிறார்கள். அவர்களின் செயல்முறைகளுக்கு இறைநம்பிக்கை கைகொடுத்திருக் கலாம். இந்தக் கருத்தியல்களை முன்வைத்து அதிகார வர்க்கத்தை, அநீதியாளர்களை எதிர்கொண்டு வெல்வது அவர்களுக்குப் பெரும் உத்வேகத்தை அளித்தது; மதத்தின் வாயிலாக அன்பை நிலைநிறுத்துவது எளிது என்று நம்பிக்கொண்டிருந்தவர்களுக்கு இன்றைய மத விசுவாசங்கள் சவால் விடுக்கின்றன. மார்க்கம் என்பதை நபிகள் நாயகம் சமூக மேன்மையின் பொருட்டாக, அமைதியின் யாசகமாக ஒரு வாசமலர்போலத் தன் கைகளில் ஏந்திவந்தார். மக்களின் துயர் நீக்கப் போராடவும் தீமைகளை எதிர்த்துப் போராடுவதைத் தூண்டவும் அவர் தயங்கியதில்லை. மதங்களின் வரலாற்றைப் பார்க்கும்போது இஸ்லாம் காலத்தால் சற்றுப் பின்னால் தோன்றியது. அதன் சிந்தனைகள் மானுட நலவாழ்வுக்கான அனுபவச் சேகரங்களாக இருந்தன.
புத்தர் அரச பீடம் துறந்து ஞானம் தேடினார். ஏசுநாதர் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்த சமூகப் போராளியாகப் பரிணமித்தார். விவேகானந்தர் ஆட்சி பீடத்தை மனதில் கருதவில்லை. மேலும், மதங்களெல்லாம் துறவறத்தை வலியுறுத்தியும் வந்துள்ளன. ஆனால், ஆட்சிக் கட்டிலைக் குறிவைத்து முன்னேறியவர் நபிகள் நாயகம் மாத்திரமே. அது பதவியின் மீதான நாட்டமல்ல; மக்கள் சேவைகுறித்த ஒரு மகத்தான சமூகப் புரிதல்தான் அது. அவர் இறைவனின் திருநாமத்தைச் சமூகத்துக்கு அறிமுகம் செய்யும்போது, வெறும் பக்திமயமான வடிவத்தில் கருத்துரைத்ததில்லை. அதற்கொரு சமூகப் பொருண்மையை உருவாக்கினார். பக்தியின் உள்ளோடிய இழைகளிலிருந்து தன்னைப் பின்பற்றியவர்களின் நெஞ்சங்களில் ஏழை மக்களின் நல்வாழ்வுக்கான போராட்ட முறைகளை வடித்துக்கொடுத்தார். தன் சொந்த வாழ்வின் இன்பங்களை இதன் பொருட்டாகப் பின்னகர்த்திக்கொண்டது பலமுறை நடந்தது. ஊர்விட்டு ஊர் போக வேண்டியிருந்தது. கல்லடியும் சொல்லடியுமாக வாழ்க்கை கழிந்தது. ஆட்சித் தலைவராக நபிகள் நாயகம் இருந்தார்.
ஆனால், வசதியாகத் தொழக்கூட முடியாத குடிசையில், கிழிந்த பாயில் படுத்து, வாட்டி வதைத்த பசியோடு பூனை தூங்கிய அடுப்படிகளை அப்போதும் மனமுவந்து பார்த்தவராக அந்த அரசர் வாழ்ந்தார். அவரைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்தொடரும் கூட்டம் பெருகப்பெருக, அவரின் இன்னல்களும் பெருகியபடிவந்தது வரலாற்றில் நாம் கண்டறியாத ஒரு முரணான செய்தி. இவையெல்லாம் எதற்காக?
நபிகளின் வாழ்க்கையே செய்தி
தன்னோடு வாழ்ந்துவந்தோரின் நலம் கருதியும், அவர் கண்களின் முன்னே மக்கள் பட்டுக்கொண்டிருந்த துயரை நீக்கக் கருதியுமே! அந்தக் காலத்துக்குப் பொருத்தமான நடைமுறைகளில் ஒரு செயல்வடிவம் கொடுத்தார் நபிகள். தன் துயரங்களை வரலாற்றின் தடங்களாக மாற்றினார். அதற்கான காரணம், தன் வழிமுறைகளைக் கண்டறிந்து அதுபோன்ற செயலுறுதி மிக்கவர்களாக இறை விசுவாசிகள் திகழ வேண்டும் என்பதற்காக! சமூகநீதியைத் தேடும் போர்க்களங்களுக்கு அப்பால் ஏற்படும் ஒரு மனிதரின் மரணம் அவருக்கு உவப்பானதல்ல. தன்னைச் சாராமலும், தன் கொள்கையை ஏற்காமலும் இருந்த ஒருவரின் மரணத்துக்கும் அவர் மரியாதை அளித்தார். நபிகள் நாயகத்தின் வாழ்நாளைத் தொகுத்துப் பார்க்கும்போது யாருக்கும் அவரின் இறைபக்தி மட்டும் துலங்காது; சமூகப் போராளியாக, மக்களின் அரசராக அவர் மலர்ந்த விதமும் அதற்காக மேற்கொண்டிருந்த அரசியல் நடவடிக்கைகளும் புரியும். இறையச்சம் கொண்ட ஒரு நபருக்கு நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை மீறிய செய்திகள் தேவையில்லை.
எதற்காக இயக்கம்?
தெஹ்ரிக் - இ-தலிபான் இந்தப் படுகொலைகளுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது. கைபர் வடக்கு வஜிரிஸ் தான் பகுதிகளில் உள்ள தங்களின் குடும்பங்களின் மீது பாகிஸ்தான் அரசு மேற்கொண்ட ஷர்ப்-இ-அஸ்ப் தாக்குதலை நிறுத்தக் கோரி இந்தப் படுகொலைகளை அது புரிந்துள்ளது. இதில் மதம் சார்ந்த கோரிக்கை இல்லை என்பது கவனத்துக்குரியது. ஆனால், அது ஓர் இஸ்லாமிய அமைப்பாகக் கருதப்படுவதால் இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் செயல்பாடாகவும் அது நோக்கப்படுகிறது. இதில் நோக்கம் எதுவாயினும் அது தங்களின் மார்க்கத்தின்மீதான கடும் விமர்சனமாக மாறும் என்று அந்த இயக்கம் புரிந்துகொள்ளாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. தங்கள் உயிரினும் மேலாகக் கருதும் தங்களின் மார்க்கத்தின் மீதான கோபமாக இது வெடித்துவிடும் எனவும் அறிந்தே செயல்பட்டுள்ளனர். தக்க வழிமுறைகளில் தங்களின் அரசை எதிர்த்துப் போராடத் தெரியாதவர்களுக்கு எதற்கு ஒரு இயக்கம்?
இதுவரை நம்பப்பட்டுவருகின்ற கருத்துகள்படி மதங்கள் மனிதர்களை நல்வழிப்படுத்தவே உருவானவையாகக் கருதப்படுகின்றன. எப்போது ஒரு கருத்தியலை அல்லது தத்துவத்தைக் கோணலான பார்வையில் ஒருவர் அணுக ஆரம்பிக்கிறாரோ அல்லது அதனைத் தன் சுயநலத்துக்காகவும் ஆதிக்கத்துக்காகவும் கைக்கொள்கிறாரோ அப்போது எல்லாமே மக்கள் விரோதக் கோட்பாடுகளாக அல்லது செயல்முறைகளாக மாறிவிடுகின்றன. அவர்களுக்கு இனிமையாக இருப்பன அழிவும் படுகொலைகளுமே. உலகமே தங்களுக்கு எதிராகத் திரும்புவதைப் பற்றிக் கவலைகொள்வதற்கு அவர்களுக்கு ஏதுமில்லை. கொஞ்சம் நிதானத்தோடு ஆராய்ந்தால் வஞ்சகர்கள் அல்லது அவர்களின் தத்துவம் தம் உச்சத்தை எட்டும்போது, அதுதான் அந்தக் கடைசி நிமிஷ முழுமையாக இருந்துள்ளன. பின் அழிய ஆரம்பித்துவிடுகின்றனர். தெஹ்ரிக்-இ-தலிபான் அழிய ஆரம்பித்திருக்கிறது; அது அழிவதற்கான பிரார்த்தனைகளை அவர்களைச் சார்ந்த மக்களே மேற்கொண்டாக வேண்டிய அவசியத்தை அந்த அமைப்பு ஏற்படுத்தித்தந்திருக்கிறது.
- களந்தை பீர்முகம்மது,
‘பிறைக் கூத்து’ முதலிய நூல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: kalanthaipeermohamed@gmail.com