சிறப்புக் கட்டுரைகள்

மெல்லத் தமிழன் இனி...! 37 - மது என்பது இங்கே அரசியல்!

டி.எல்.சஞ்சீவி குமார்

மது என்பது இங்கே அரசியல். அதன் வேர் ஆழமானது. அது சாதாரண அரசியல் அல்ல. பெரும் கூட்டத்தின் மூளையை மழுங்கச் செய்யும் அரசியல். கேள்விகளை மவுனிக்கச் செய்யும் அல்லது கேள்விகளை உற்பத்தி செய்ய விடாத அரசியல். மக்களின் உரிமைக்கான எல்லா விதமான போராட்டங் களையும் எழுச்சி பெற விடாத அரசியல். தண்ணீர் பிரச்சினை தொடங்கி ஊழல் பிரச்சினை வரைக்கும் மக்கள் சக்தியை ஒருங்கிணைக்க விடாத அரசியல். எட்டும் தூரத்தில் கொத்துக்கொத்தாக உயிர்கள் கொல்லப்பட்டாலும் வேடிக்கை பார்க்கச் செய்யும் அரசியல்.

மது மாஃபியாக்கள்!

நம்மிடையே இருக்கும் மதுவின் தீவிர நுகர்வு என்பது திணிக்கப்பட்ட கலாச்சாரம். மது அருந்துவது என்பது சமூக, பண்பாட்டுக் காரணியாக இருந்த நிலை மாறி, இப்போது அது முதலாளித்துவக் காரணியாகக் கட்டமைக்கப்பட்டுவிட்டது. இது எப்போதுமே ஆள்வோருக்கு ஆதாயம். மக்களைச் சிந்திக்க வைத்து ஆட்சியைப் பிடித்த திராவிடக் கட்சிகளுக்கு, இப்போது மக்களைச் சிந்திக்க வைப்பது ஆபத்து என்று புரிந்திருக்கிறது. கல்வி நிலையங்களைவிட, மருத்துவமனைகளைவிட மதுபானக் கடைகள் அதிகம் இருப்பதன் பின்னணியில் இருக்கும் ‘மது அரசியல்’ இதுதான்.

தமிழகத்தில் மதுவுக்கு எதிராகப் பெரும்பாலான கட்சிகள் குரல்கொடுக்கின்றன. ஏராளமான அமைப்புகள் போராட்டம் நடத்துகின்றன. ஊருக்கு ஊர் பெண்கள் கதறி அழுகிறார்கள். அப்படியிருந்தும் அரசிடமிருந்து சற்றும் சலனம் இல்லை. மணல் கொள்ளை, கனிமக் கொள்ளையைவிட ஆபத்து நிறைந்தது மது அரசியல். அதிலெல்லாம் இயற்கை வளத்தைச் சுரண்டுகிறார்கள். இதில் மனிதனின் பொருளாதாரத்தைச் சுரண்டுகிறார்கள். அதற்கும் மேலாக, மனிதனின் உயிரையே சுரண்டு கிறார்கள். மதுவை ஒழித்தால் பெரும் பகுதி ஓட்டுக்கள் கிடைக்கும் என்று ஆளும் கட்சிகளுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், முதலாளித்துவமோ அந்த ஓட்டுக்களை வேறு வகையிலும் பெறலாம் என்று அரசுகளுக்கு ஆசை காட்டுகின்றன. ஒவ்வொரு ஆட்சியின் பிற்பகுதியிலும் இந்த சஞ்சலத்தில் தள்ளாடுகின்றன அரசுகள். இப்போதும் அப்படியே!

மணல், கனிம மாஃபியாக்களைப் போல, கல்வித் தந்தைகளைப் போல, பன்னாட்டு நிறுவனங் களைப் போல இங்கே ஆட்சியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன மது ஆலைகள். கடந்த காலங்களில் 11 மதுபான நிறுவனங்கள் இருந்தன. இப்போது 13-ஆகப் பெருகிவிட்டன. பெரும் பாலான ஆலைகளை நடத்துபவர்கள் ‘அரசியல் செல்வாக்கு’ பெற்றவர்களே.

கொள்முதல் அல்ல, கொள்ளை!

ஆக, மதுவைப் பொறுத்தவரை இங்கே ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை. எப்படி என்று பார்ப்போம். மதுபானங்களைக் கொள்முதல் செய்வது தொடங்கி, அதன் அனைத்து நடவடிக்கைகளையும் பற்றி முடிவெடுக்கக் குழு ஒன்று இருக்கிறது. அதன் தலைவராக உள்துறைச் செயலாளர் மற்றும் உறுப்பினர்களாக நிதித் துறைச் செயலாளர், டாஸ்மாக் நிறுவன நிர்வாக இயக்குநர் உட்பட ஐந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உள்துறைச் செயலாளரைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கி விட்டார்கள். அந்தப் பதவி, துறையின் அமைச்சர் வசம் சென்றுவிட்டது.

இப்போதைய நிலவரம் என்னவென்றால், எந்த ஆலையிடம் எவ்வளவு கொள்முதல் செய்ய வேண்டும் என்று அதிகாரத்தில் உள்ள ஒருவரும் அதிகாரத்தில் இல்லாத இருவரும்தான் தீர்மானிக்கிறார்கள் என்கிறார். விற்பனை ஆகும் மதுபானம் பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலை இல்லை. டாஸ்மாக் கடைகளில் கேட்கும் சரக்கு கிடைக்காது; அவர்கள் கொடுக்கும் சரக்கைத்தான் வாங்கிக்கொள்ள வேண்டும். ஏனென்றால், இதற்குப் பின் புரளும் பணம் அப்படி. ஒவ்வொரு மாதமும் 60 லட்சம் பெட்டிகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. எனில், அதற்குப் பின்னே எவ்வளவு பணம் புரளும்? நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

(தெளிவோம்)

- டி.எல். சஞ்சீவிகுமார்,

தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

SCROLL FOR NEXT