இந்திய அரசு உறுதியான யுத்தத்துக்குத் தயாராகிறது. டெல்லியில் காய்கள் வேகவேகமாக நகர்த்தப்படுகின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதுமே இந்த நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்பட்டவைதான். பிரதமர் நரேந்திர மோடியின் செயல்திட்டங்களில், இந்தப் போருக்கு முக்கியமான ஓர் இடம் இருக்கும் என்பது பலராலும் முன்பே யூகிக்கப்பட்டது. இந்திய அரசின் அறிவிக்கப்படாத உள்நாட்டுப் போர்; முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கால் ‘மிகப் பெரிய உள்நாட்டு அபாயம்’ என்று வர்ணிக்கப்பட்ட மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான போரில் பெரும் தாக்குதலுக்கு மூர்க்கமாகத் தயாராகிறது அரசு.
இன்னொரு பக்கம் மாவோயிஸ்ட்டுகள். அவர்களும் மூர்க்கமாகவே காத்திருக்கிறார்கள். தம் சொந்த மக்களை நடுவில் வைத்து இரு தரப்பும் சமர்களுக்கெல்லாம் சமரை நடத்தப்போகின்றன. தண்டகாரண்ய வனவாசிகள் தினம் தினம் கொடுக்கும் ரத்தப் பலிகள் இனி மேலும் பல மடங்கு அதிகரிக்கக் கூடும். வனங்களிலிருந்து துரத்தப்பட்டு, நகரங்களில் கூலிகளாக, நாடோடிகளாகத் திரியும் வனத்தின் ஆதிகுடிகளின் எண்ணிக்கை மேலும் பல நூறு மடங்கு அதிகரிக்கக் கூடும்.
முத்தரப்பின் மரணங்களுக்கும் கிராமங்கள் வெறிச்சோடிய வனங்கள் சாட்சியமாகும். அவை காலாகாலத்துக்கும் நம்முடைய வரலாற்றை, நாம் வகுத்த கொள்கைகளை, நம்முடைய திட்டங்களை, நம்முடைய மவுனங்களை, நம்முடைய மனசாட்சியை உலுக்கும். எதற்காக இந்தப் போர், இந்தப் போரில் எதிர்த்து நிற்பவர்கள் யார், இந்தப் போரின் பின்னணியில் இருப்பவர்கள் யார்?
(தொடரும்)
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in