சிறப்புக் கட்டுரைகள்

மெல்லத் தமிழன் இனி...! 38 - யார், ஆதிகுடியைக் குடிநோயாளியாக்கியது?

டி.எல்.சஞ்சீவி குமார்

எது இவர்களை மதுவை நோக்கித் தள்ளியது?

பவானி சாகர் அணையிலிருந்து மூன்று மணி நேரம் அடர்ந்த வனத்துக்குள் ஜீப்பில் பயணம். இடையிடையே புரண்டோடும் காட்டாறுகள். இவற்றைக் கடந்து சென்றால் அகண்டு விரிந்து ஓடுகிறது மோயாறு. பாலம் கிடையாது. கழுத்தளவு தண்ணீரில் சாகசப் பயணம் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான் தெங்குமரஹெடாவை அடைய முடியும். யானைகளும் புலிகளும் உலவும் வனம். வனத்தின் எல்லையில் சுமார் 130 படுகர் இனக் குடும்பங்கள் வசிக்கின்றன. ஆங்கிலேயர் காலத்தில் அழைத்துவரப்பட்டவர்கள்.

ஊரில் பெரிய அளவில் மனித நடமாட்டம் இருக்காது. ஆனால், அங்கும் ஒரு டாஸ்மாக் மதுக் கடை. பாதை இல்லாத ஊருக்குப் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு ஆற்றுக்குள் முங்கி எழுந்துவருகிறது வாகனம். ஒருவர்கூட மது அருந்தாமல் இருக்கக் கூடாது என்கிற வணிக வெறி. பல் விழுந்த பாட்டியிலிருந்து 15 வயதுச் சிறுவன் வரை மது குடிக்கிறார்கள். ஒருகாலத்தில் எப்படி வாழ்ந்தவர்கள் அந்த வனத்தின் மைந்தர்கள். இயற்கையோடு இணைந்த வாழ்க்கை அல்லவா அது. அவர்களின் கலாச்சாரம் என்ன? பொழுதுபோக்குகள்தான் என்ன? எல்லாவற்றையும் கலைத்துப்போட்டுத் தள்ளாட்டம் ஆட வைத்திருக்கிறது மது.

வாழிடத்திலிருந்து விரட்டப்பட்ட கொடுமை

பழங்குடியினர் சமூகச் செயல்பாட்டாளரான தன்ராஜ் சொல்லும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. “ஆதி சமூகத்திடம் இருந்த மதுக் கலாச்சாரம் வணிகமயமானதன் விளைவே மது விஷமாக மாறக் காரணம். ஈஞ்சம் பனைக் கள்ளை யானையோடு பகிர்ந்து உண்டவர்கள் பளியர்கள். காட்டு மரப்பட்டைகளைக் காய்ச்சிக் குடித்தவர்கள் காடர்கள். அவர்களின் கலாச்சாரத்தில் மது புனித பானம். அவர் களின் கடவுளான இயற்கைக்காக இயற்கையிலிருந்து படைக்கப்பட்ட பானம்.

அவர்கள் தினசரி மது அருந்திவிட்டு மயங்கிக்கிடப் பதில்லை. விசேஷங்களுக்கு மது தயாரிப்பார்கள். பெண் எடுத்த வீடு, பங்காளி வீடுகளுக்குச் செல்லும்போது மது எடுத்துச் செல்ல வேண்டும் என்பது அவர்களின் விருந் தோம்பல் கலாச்சாரம். ஆனால், இன்று பழங்குடியினரின் கலாச்சாரம், இயல்பு, உடல் நலம் என அனைத்தையும் அழித்துவருகிறது வணிகமயமாக்கப்பட்ட மது.

தேனி, கடமலைக்குண்டு அருகில் இருக்கிறது கரட்டுப் பட்டி. வருஷநாடு வனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பளியர் இன மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஊர் அது. ஆனால், அந்த மக்கள் நமது பாணி வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டவர்கள் அல்ல. காட்டுக்குள் ஆங்காங்கே தனித்தனிக் குடிசைகளைக் கட்டி வசித்தவர்கள். கடுக்காய், நெல்லிக்காய் பொறுக்கியவர்கள். ஆனால், இங்கே பிழைக்க வழி தெரியாமல் குப்பை பொறுக்குகிறார்கள். காடுதான் அவர்களின் ஒரே பொழுதுபோக்கு, வடிகால். காட்டு விலங்கை விலங்கியல் பூங்காவில் அடைத்ததுபோலத்தான் அவர்களின் நிலையும். யோசித்துப் பாருங்கள், எவ்வளவு பெரிய சித்தரவதை இது. இந்தச் சூழலைத் தாங்க முடியாமல் அவர்கள் நாடியதுதான் டாஸ்மாக் மது. ஊரின் அனைத்து மக்களும் மதுவுக்கு அடிமையாகிவிட்டார்கள். உண்மையில், காடுகளைக் காப்பது பழங்குடியினர் மட்டுமே. அவர்களைக் காடுகளிலிருந்து அப்புறப்படுத்தி, டாஸ்மாக் மதுவுக்கு அடிமையாக்கிவருகிறது அரசு” என்கிறார் தன்ராஜ்.

இயற்கையும் பழங்குடியினரும் வேறுவேறல்ல

ஓசை அமைப்பின் தலைவரான காளிதாசன், “இதுவரை இல்லாத வகையில் சமீப காலமாக பழங்குடியினர் யானையால் தாக்கப்பட்டு இறக்கிறார்கள். இதனைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலாது. ஏனெனில், யானையுடன் பழங் குடியின மக்கள் ஒன்றாக வசித்தவர்கள். யானையைத் தெய்வமாகக் கருதுபவர்கள். அவர்கள் யானைக்கும் சேர்த்தே பயிரிடுவார்கள். யானைக்கு மிஞ்சியதுபோகத்தான் அவர்கள் உண்பார்கள். இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. மனிதர்களின் தொந்தரவுகளால் யானையின் இயல்பு மாறி விட்டது. வனத்தை விட்டு அப்புறப்படுத்தப்படுவதால் பழங்குடியினரின் இயல்பும் மாறிவிட்டது. அவர்களில் பெரும்பாலானோர் மதுவுக்கு அடிமையாகிவிட்டார்கள். இதுவே பழங்குடியினரும் யானைத் தாக்குதலுக்கு ஆளாகக் காரணம்” என்கிறார்.

வீணாகப்போன போராட்டங்கள்

கோவை மாவட்டத்தில் கேரள எல்லையில் இருக்கும் அட்டப்பாடி பழங்குடியினர் கிராமத்தில் இருளர் நிலைமை கொடுமையாக இருக்கிறது. பத்திரிகையாளர் ஒருவர்,

“1996-ம் ஆண்டு மானி என்கிற பாதிரியார் பல் வேறு போராட்டங்களை நடத்தி, இங்கிருந்த மதுக் கடைகளை அகற்ற வைத்தார். அவர் அந்தப் பகுதியை விட்டுச்சென்றதும் அங்கு சாராய வியாபாரிகள் வந்தனர். மகளிர் குழுக்கள் பெரும் போராட்டங்களை நடத்தி சாராயத்தையும் ஒழித்தார்கள். அதன் பின்பு அங்கு மதுவே கிடையாது. ஆனால், தமிழக எல்லையில் டாஸ்மாக் கடை வந்த பின்பு, சூழலே மாறிவிட்டது. தற்போது ஆனைக்கட்டியில் இருக்கும் மதுபானக் கடையே கதியென்று கிடக்கிறார்கள் இருளர்கள். உள்ளூரில் நடத்திய அத்தனைப் போராட்டங்களும் வீணாகப்போனது” என்கிறார். ஆதிக்குடியையும் குடிநோயாளியாக்கிவிட்டு நம் சமூகத்தில் யாரைத்தான் விட்டு வைக்கப் போகிறோம் நாம்?

எது இவர்களை மதுவை நோக்கித் தள்ளியது?

சில நாட்களுக்கு முன்பு நடந்தது இது - திருப்பூரைச் சேர்ந்த தம்பதியர் சேதுபதி - இந்திரா. பொதுக் கழிப்பறைகளைச் சுத்தம்செய்யும் தொழிலாளர்கள். இந்திரா திருப்பூரில் ஒரு மதுக் கடை அருகே நின்றுகொண்டு, தனது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்திருக்கிறார். அப்போது மயங்கிச் சரிந்திருக்கிறார் இந்திரா. கடும் போதை அவருக்கு. பதறிய பொதுமக்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறார்கள். அங்கு குழந்தை இறந்துபோனது தெரிந்தது. குழந்தை இறந்ததற்கான காரணம் ஆய்வுக்குரியது. அதேசமயம், கழிப்பறையைச் சுத்தம் செய்யும் ஒரு பெண்ணையும் மது அருந்தும் சூழலுக்குத் தள்ளியது எது? அதுதான் இங்கே மிகவும் கவனத்துக்குரியது; கவலைக்குரியது!

மது மொத்த மனித சமூகத்தையும் பாதிக்கிறது. அதே சமயம், தலித் சமூகத்தை, குறிப்பாக அந்த சமூகத்தில் இருக்கும் பிணவறைத் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழி லாளர்கள், மலம் அள்ளும் தொழிலாளர்கள், இடுகாடுகளில் இறப்புச் சடங்குகளைச் செய்யும் தொழிலாளர்கள் - இவர்களிடையே மது ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் மிகமிக அதிகம். இதில் ஏராளமானவர்கள் முற்றிய குடி நோயாளிகள். இப்படிச் செய்யும் வேலை காரணமாக ஒரு கூட்டமே மதுவுக்கு அடிமையாவதை ‘டெவலப்மென்ட் கியூமுலேட்டிவ் ஆல்கஹாலிஸம்’(Development cumulative alcoholism) என்கிறது மது மீட்பு தொடர்பான மனநல மருத்துவம். அதாவது, சாதாரணப் பணிகளில் இருக்கும் சராசரி மனிதர்களே மது அருந்த மனரீதியான பல்வேறு காரணங்கள் சொல்லும்போது - அசாதாரணமான தொழிலில் இருப்பவர்களை மது அருந்தத் தூண்டுவது அவர்கள் தொழில், சூழல் மட்டும்தான் என்கிறது அறிவியல்.

விரும்பியா மலம் அள்ளுகிறார்கள்?

இது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார் ‘எவிடென்ஸ்’அமைப்பின் செயல் இயக்குநர் கதிர். அவர், “தமிழகத்தில் இப்படி இரண்டு லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இங்கு இன்றைக்கும் மலத் தொட்டியில் மனிதன் இறங்கிச் சுத்தம் செய்யும் அவல நிலை இருக்கிறது. நரகம் அது. மலத் தொட்டியினுள் ஒரு தொழிலாளி முங்கி எழும்போது அடையும் உடல், மன வேதனையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. காது, மூக்கினுள் புழுக்கள் நெளியும். துர்நாற்றம் மூச்சை அடைக்கும். ஊசி, உடைந்த கண்ணாடி, பிளேடுகள் உறுப்புகளைக் கிழிக்கும். இந்தச் சூழலில் துர்நாற்றத்தை உணராமல் இருக்க, உடல், மனவேதனை உணராமல் இருக்க மது அருந்துகிறார்கள். போதைக்காக அல்ல. உண்மையில், மது அருந்தி அருந்தி அவர்களுக்கெல்லாம் போதையே ஏற்படுவதில்லை. கொஞ்ச நேரம் உடலும் மனமும் மரத்துப்போகும், அவ்வளவுதான்.

இவர்களெல்லாம் விரும்பியா மலம் அள்ளுகிறார்கள்? விரும்பியா பிணம் எரிக்கிறார்கள்? இவர்களிடம் இழிவான தொழிலைத் திணித்தது சாதியம்; மதுவைத் திணித்தது சாதியம்; கந்துவட்டிக் கொடுமையைத் திணித்தது சாதியம்; குழந்தைத் தொழிலாளர்களையும் வறுமையையும் திணித்தது சாதியம். இப்படித் தொடர் சங்கிலியாக சாதிய இழிவுகள் இந்த மக்களை வறுமையிலும் கந்துவட்டிக் கொடுமையிலும் தள்ளினாலும் அந்த இழிவுகளைத் தக்கவைத்துக்கொண்டு கொல்கிறது மது. இவ்வாறாக, ஒரு தொழிலானது ஒரு சமூகத்தையே மதுவுக்கு அடிமையாக்கியிருப்பது இந்தியாவில் மட்டுமே சாத்தியம்.

சமீபத்தில், நாங்கள் இதுபோன்ற 303 தொழிலாளர்களிடம் ஆய்வு மேற்கொண்டோம். அதில் 298 பேர் மதுவுக்கு அடிமை யாகியிருந்தார்கள். மதுரை மாநகராட்சியில் இந்த சமூகத்தைச் சேர்ந்த 94 குழந்தைகளிடம் ஆய்வு செய்தோம். அதில் 96% குழந்தைகளின் தந்தையர் மதுவுக்கு அடிமையாகியிருப்பது தெரிந்தது. கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட 150 பேரில் 82% பேர் மதுவுக்கு அடிமையாகியிருந்தார்கள். தவிர, இவர் களின் குடும்பங்களில் 12 முதல் 15 வயதுள்ள குழந்தைகள் 68%, 15 முதல் 18 வயதுள்ள குழந்தைகள் 87% என்ற அளவில் குடிநோயாளிகளாக உள்ளனர்.

‘அவன் குடிச்சே செத்தான்!’

ஒடுக்கப்பட்ட சமூகத்திலேயே மிகவும் ஒடுக்கப்பட்டவர்கள் இவர்கள்தான். எந்தக் கவனமும் பெறாதவர்கள். பொதுவாக, மது அருந்துதலை நியாயப்படுத்தும் எந்தக் காரணத்தையும் பொதுச் சமூகம் ஏற்றுக்கொள்ளாது. அதேசமயம், இவர்கள் மது அருந்தினால் மட்டுமே இந்த பணியைச் செய்ய முடியும் என்பதைப் பொதுச் சமூகம் ஏற்றுக்கொள்கிறது. ஆகவே, பொதுச் சமூகம் ஒப்புக்கொண்ட ஒரு குடியின் விளைவுகளான பாதிப்புகளையும் அது பெரிய அளவில் கவனத்தில் கொள்வதில்லை. இப்படி ஒரு தொழிலாளி இறக்கும்போதுகூட ‘அவன் குடிச்சே செத்தான்’ என்பதுடன் ஒருவரின் வாழ்க்கை முற்றுப்பெறுகிறது. அங்கு அணுவளவும் அனுதாபம் தொனிப்பதில்லை. எந்த அக்கறையும் காட்டாத நிலைதான் இந்தத் தொழிலாளர்களைத் தனித் தீவாக வைத்திருக்கிறது. அப்படிப் பார்த்தால் இவர்களிடையே மதுப் பழக்கத்தை ஒழிப்பதும் ஒருவிதத்தில் சாதி ஒழிப்புப் பணிதான்” என்கிறார்.

(தெளிவோம்)

- டி.எல். சஞ்சீவிகுமார்,

தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

SCROLL FOR NEXT