சிறப்புக் கட்டுரைகள்

‘இனம்’ கண்டுகொள்வோம்

இரா.திருநாவுக்கரசு

சில தமிழ் அமைப்புகள், உணர்வாளர்கள், வைகோ போன்ற அரசியல் தலைவர்களின் எதிர்ப்புக்கு மதிப்பளித்து ‘இனம்’ திரைப்படத்தைத் திரையரங்குகளிலிருந்து விலக்கிக்கொள்வதாக அதன் தயாரிப்பாளர் அறிவித்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ‘இனம்’ திரைப்படம் தவறாகச் சித்தரிக்கிறது என்று இவர்கள் அனைவரும் குற்றம்சாட்டுகின்றனர். இந்தத் திரைப்படம் இலங்கை அரசின் ஆதரவோடு தயாரிக்கப்பட்ட படம் என்ற குற்றச்சாட்டை வைகோ முன்வைக்கிறார்.

எது தமிழ் இன விரோதம்?

புலிகளின் ஆயுதப் போராட்டம் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது என்ற பிம்பத்தைத் தமிழ் உணர்வாளர்கள் என்ற வரையறைக்குள் இருப்போர் இன்றைய தமிழ்ப் பொதுவெளியில் உருவாக்க முயல்வது வெளிப்படை. அந்தப் போராட்டம்குறித்து ‘தமிழ் உணர்வாளர்’களின் கருத்துக்கு எதிர்மறையான எந்த விதமான படைப்பும், தமிழ் இனவிரோதம் என்று முத்திரை குத்தப்படும் அபாயம் இருப்பதை இயல்பான அரசியல் நிலை என்று தமிழ்ச் சமூகம் ஏற்றுக்கொண்டது எப்படி என்று தெரியவில்லை.

‘இனம்’ திரைப்படத்தின் சுவரொட்டிகள் தமிழ் இன உணர்வாளர்களால் கிழித்தெறியப்படுவதைத் தொலைக்காட்சிகளில் பார்க்கும் ஒரு தமிழரின் மனநிலை எப்படி இருக்கும் என்று நுட்பமாக நோக்குவது பிழையல்ல.

நீங்கள் சொல்வது மட்டுமே உண்மையா?

இந்தத் திரைப்படம் கடந்த 65 ஆண்டுகளாக சிங்களப் பேரினவாத அமைப்புகள் மேற்கொண்ட வன்கொடுமைகளை நியாயப்படுத்திப் பேசவில்லை என்று நிச்சயமாகச் சொல்லலாம். அதேபோல், சிங்கள ராணுவம் நடத்திய படுகொலைகளை ஆதரித்தும் பேசவில்லை. அனைவருக்கும் தெரிந்த அநீதிகளைத் திரையில் காட்டுவதற்கு மட்டும் தமிழில் திரைப்படம் தேவையில்லை.

அதிகம் படிப்பறிவில்லாத தமிழ் மக்கள்கூட எவ்விதமான முன்னுரையும் இன்றிப் புரிந்துகொண்டிருக்கும் அரசியல் சமன்பாடுகளில் இலங்கைத் தமிழர்களின் அவலமும் ஒன்று. இந்தச் சூழலில், இலங்கைத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தில் பல இயக்கங்கள் உண்டு; பல பரிமாணங்கள் உண்டு, விடுதலைப் புலிகள் மட்டுமே போராட்டத்தின் நிரந்தரக் கதாநாயகர்கள் என்று எப்படியாவது நிறுவ முயற்சிப்பது ஏன் என்று தெரியவில்லை. ‘போரின்போது உண்மைதான் முதல் பலி’ என்று சொல்லப்படுவதுண்டு. போருக்குப் பிறகும் நமது உணர்வாளர்கள் தாங்கள் சொல்வது மட்டுமே உண்மை என்று மிரட்டுவது ஏன்?

இந்தத் தமிழ் உணர்வாளர்கள் தமிழ்நாட்டில் தங்களுக்கு என்ன மதிப்பிருக்கிறது என்று அறிவார்களா? இலங்கைத் தமிழர்களின் சுமார் நூறாண்டு கால அரசியல் போராட்டம், மூன்று தசாப்தங்களுக்கு மேலான ஆயுதப் போராட்டம் பற்றியெல்லாம் சொல்லிக்கொள்ளும்படி ஒரே ஒரு இலக்கியப் படைப்பையும் தமிழ்நாடு தரவில்லை என்பதிலிருந்து, நமது இன உணர்வாளர்கள் கண்டுகொண்டது என்ன? போரிலும் கலவரத்திலும் சிதைந்துபோய் இருக்கும் இலங்கைத் தமிழரின் வாழ்க்கையைப் பற்றி உருப்படியாக ஒரே ஒரு திரைப்படத்தைக்கூடத் தராத தமிழ்நாட்டின் கலாச்சாரம்பற்றி நமது உணர்வாளர்கள் கவலைப்பட மாட்டார்களா?

தமிழ் இன உணர்வாளர் யார்?

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில், எத்தனை தமிழ்வழி மழலையர் பள்ளிகளைத் தமிழ்நாடு அரசு நடத்துகிறது என்று உண்மையான தமிழ் உணர்வாளர் கவலைப்படுவார். தாய்மொழி தெரியாமலே இன்று தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுகுறித்து உண்மையான தமிழ் உணர்வாளர் அச்சமடைவார்.

தமிழ் மொழிக்கென்று உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம், மாநிலமெங்கும் இருக்கும் கல்லூரி, பல்கலைக்கழங்களில் இருக்கும் தமிழ்த் துறையில் தமிழ் மொழி, பண்பாடுகுறித்து வெளிவரும் ஆய்வுகளின் தரம் பரிதாபத்துக்குரியதாக இருப்பதுகுறித்து உண்மையான தமிழ் ஆர்வலர் தார்மீகக் கோபமுறுவார். தமிழ் மொழி மீதும் தமிழர்களின் வாழ்க்கை மீதும் உண்மையான அக்கறை கொண்ட இலக்கியவாதிகளைக் கொண்டாடவும், அடுத்த தலைமுறை இலக்கியவாதிகளை இனம்கண்டு அங்கீகரிக்கவும் உண்மையான தமிழ் ஆர்வலர் முயற்சிப்பார்.

இலங்கைத் தமிழர்கள் மத்தியில் உருவான பல இலக்கியவாதிகளை, தமிழ்நாட்டில் இருக்கும் மக்களுக்கு அறிமுகம் செய்யவும் ஓர் ஆக்கபூர்வமான விவாதத்தைக் கலாச்சாரத் தளத்தில் முன்னெடுக்கவும் உண்மையான தமிழ் இன உணர்வாளர் அயராது உழைத்திருப்பார். பேராசிரியர்கள் கா. சிவத்தம்பி, நுஃமான், மெளனகுரு போன்ற இலங்கையில் உருவான அறிவுஜீவிகள் தமிழ் மொழி, கலாச்சாரம்பற்றி நமக்குத் தந்திருக்கும் படைப்புகளைத் தமிழ்நாட்டில் முழுவீச்சில் கொண்டுசேர்ப்பதுகுறித்து எப்போதும் சிந்தித்தவண்ணம் இருப்பார்.

இவர்களது படைப்புகளை நமது உயர்கல்வி நிறுவனங்களில் விவாதப்பொருளாக ஆக்குவது குறித்தும், சமகாலத் தமிழ்ச் சமூகத்தின் உயர்ந்த அறிவுஜீவிகளாக இவர்களை நிலைநிறுத்துவதுபற்றியும் விவாதித் திருப்பார்.

போராட்டம் தோற்றது ஏன்?

இலங்கையில் ஐயமின்றி நிரூபிக்கப்பட்ட காரணங்கள் எவ்வளவோ இருந்தும் நெடிய போராட்டம் சட்டென்று ‘மெளனிக்கப்பட்டதன்’ காரணம் எதிரியின் வலிமையான ஆயுதம் மட்டுமா, இல்லை சக தமிழர்களிடம் காலாவதியான கருத்தொற்றுமையா என்ற கேள்வியையும் நேர்மையோடு தமிழ் உணர்வாளர் அணுகியிருப்பார்.

இன ஒற்றுமையை வலியுறுத்த வேண்டிய போராட்டத்தில், மலையகத் தமிழர்களும், தமிழ் பேசும் இஸ்லாமியரும் கொஞ்சம்கொஞ்சமாக அந்நியப்படுத்தப்பட்டது ஏன் என்று விருப்புவெறுப்பின்றி விவாதிப்பது அவசியம் என்று தமிழ் ஆர்வலர் உணர்ந்திருப்பார்.

விவாதம் என்றொரு மரபு

தமிழ் மொழி வழக்கமான ‘மொழி’ என்ற வரையறையைத் தாண்டியது; அது ஒரு மதிப்பீடு என்ற சிந்தனை ஓட்டத்தை உண்மையான தமிழ் உணர்வாளர் கொண்டிருப்பார். அந்த மதிப்பீடு, அறம் சார்ந்தது என்பதையும் அதன் குவிமையமாகச் சமத்துவமும் கருத்தொற்றுமையும் இருக்கும் என்பதையும் அவர் அறிவார். 2,000 ஆண்டுகளாக அறுபடாத இலக்கியப் பாரம்பரியம் மட்டும் தமிழருக்குச் சொந்தமல்ல, தொடர்ந்து விவாதித்து, முரண்பட்டு, கருத்தொற்றுமையின் அடிப்படையில் மட்டுமே அடுத்தகட்டக் கலாச்சார நகர்வுக்கு தம்மைத் தயார் செய்துகொண்ட மொழிக் குழுமமும்கூட.

இந்த மதிப்பீடு எதிரிகளை மட்டும் அடையாளப்படுத்தாது; மாறாக, உத்வேகமான விவாதம் மூலம் தமது பலவீனங்களையும் சரிசெய்தபடியே இருந்திருக்கிறது என்பதைத் தமிழ் இன, மொழி வரலாற்றை ஆழமாகவும் விரிவாகவும் ஆய்வு நோக்கில் புரிந்துகொண்ட தமிழ் உணர்வாளர் புரிந்துகொண்டிருப்பார்.

மாற்றுக் கருத்து கொண்டிருப்பவரையும் அங்கீகரிப்பதுதான் தமிழ் என்ற மதிப்பீட்டின் சாராம்சம் என்ற நிலைப்பாட்டைச் சமரசமின்றி உண்மையான தமிழ் இன உணர்வாளர் கொண்டிருப்பார். எப்போதுமே மக்களை அச்சத்திலும், கருத்துச் சுதந்திரம் இல்லாத இருளுக்குள்ளும் வைத்திருந்த மாவீரர்கள் உண்மையான தமிழர்களா என்ற கேள்வியைக் கேட்க வேண்டிய தருணம் வந்துவிட்டதை உண்மையான தமிழ் இனப் பற்றாளர் உணர்வார்.

ஆம், தமிழ் என்பது மொழியால் மட்டும் இணையும் கூட்டம் அல்ல. அடிப்படையான ஜனநாயக மதிப்பீடுகளின் மறு உருவமே என்ற ஆழமான புரிதலைக்கொண்டிருப்பது மட்டுமே ஒருவரைத் தமிழ் ஆர்வலர், தமிழ் இனப் பற்றாளர் என்ற பெயருக்குப் பொருத்தமானவராகக் காட்டும். ‘இனம்’ திரைப்படத்துக்குக் காட்டும் எதிர்வினை மூலம், தாங்கள் எந்த இனம் என்று சிலர் காட்டிவிட்டார்கள்.

- இரா. திருநாவுக்கரசு, தமிழ்க் கலாச்சாரம்
சமூக அரசியல் ஆய்வாளர், தொடர்புக்கு: rthirujnu@gmail.com

SCROLL FOR NEXT