இ
ந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ராம்நாத் கோவிந்த் இந்தியாவின் முன்னணித் தலைவர்கள் என்று குறிப்பிட்ட பட்டியலில் சுதந்திரப் போராட்டத்தின் முன்னணித் தளபதிகளில் ஒருவரும், நாட்டின் முதல் பிரதம மந்திரியுமான ஜவாஹர்லால் நேருவைப் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இந்திய ஜனநாயகச் சிற்பியான நேருவைப் பற்றிய குறிப்புகளை எந்தெந்த இடங்களிலிருந்தெல்லாம் நீக்க முடியுமோ அங்கெல்லாம் நீக்கிவருகிறது. நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர், கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். எனவே, நாம் ஏமாற்றமடைவதற்குக் காரணம் இருக்கிறது.
பாஜக வெளியிட்ட இந்தியாவின் மிகப் பெரிய தலைவர்கள் (மகா புருஷர்கள்) என்ற கையேட்டில் காந்தி, நேரு ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. உத்தர பிரதேசத்தில் பள்ளி மாணவர்களில் 10 லட்சம் பேர் இந்தக் கையேட்டைப் படித்துவிட்டுத் தேர்வு எழுதக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். மகா புருஷர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டுள்ள பலர் காந்தி, நேருவைப் போல சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களோ சிறைத் தண்டனை அனுபவித்தவர்களோ இல்லை. ஆனால், பாஜகவின் வாய்மொழி வரலாற்றிலும் அச்சிடப்பட்ட கையேட்டிலும் அவர்கள் வரலாறாகிவிட்டனர். விடுதலைக்காகப் பாடுபட்டவர்கள் கிள்ளுக்கீரையாக மறைக்கப்பட்டுவிட்டனர்!
நேருவைச் சிறுமைப்படுத்துவது வினோதமானது. வரலாற்றுப் பக்கங்களிலிருந்து நேருவை அகற்றினால்தான் இப்போதைய பிரதமரின் அரசியல் அந்தஸ்து சட்டபூர்வமாக ஏற்கப்படும் என்ற நியதி ஏதும் இல்லை. கூட்டுத்தன்மையும், பன்முகங்களும் கொண்ட இந்திய சமூகத்தை நிர்வகிப்பதில் இருவருடைய சாதனை அல்லது தோல்வி, ஜனநாயகவாதிகளாக நடந்துகொண்ட முறை, இருவரின் அரசியல் - பொருளாதார - வியூகரீதியிலான தொலைநோக்குப்பார்வை ஆகியவற்றை ஒப்பிட்டுத்தான் எதிர்கால வரலாறு இருவரும் யார் என்று அடையாளப்படுத்தப்போகிறது.
நவீன இந்திய வரலாற்றில் நிச்சயம் இருவருக்கும் இடம் உண்டு. அது எந்த மாதிரியான இடம் என்பதை வரலாறுதான் தீர்மானிக்கப்போகிறது.
நேருவை மறப்பது என்பது, குறுகிய தேசியவாதத்துக்கு நல்ல மாற்று உண்டு என்பதையே மறப்பதற்குச் சமம். இத்தகைய முயற்சிகளுக்குப் பிறகும் நேரு தொடர்ந்து நினைவுகூரப்படுவதற்குக் காரணம், ஜனநாயகத்தை வலுப்படுத்தும் அமைப்புகளை அவர் உருவாக்கியதற்காக; மிகச் சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்களை ஏற்படுத்தியதற்காக; இந்தியாவில் நிலவும் வறுமையையும் ஏற்றத் தாழ்வையும் சந்தைகளால் போக்கிவிட முடியாது என்று உறுதியாக நம்பியதற்காக. நல்ல சமூகம் ஏற்பட உழைத்ததற்காகவும் நினைவில் வைக்கப்படுகிறார். இந்தியாவிலும் பிற நாடுகளிலும் வாழும் உழைக்கும் மக்களுக்கு அவர் தோள் கொடுத்தார்.
மூன்றாவது உலக நாடுகளின் ஒற்றுமைக்காகப் பாடுபட்ட தலைசிறந்த தலைவர்களில் நேருவும் ஒருவர். காலனியாக இருந்த நாடுகளின் வேண்டுகோளுக்கு அவர் செவிசாய்த்தார். காலனியாதிக்க முயற்சிகளுக்கும், புதிதாக வடிவமைக்கப்பட்ட ஏகாதிபத்தியத்துக்கும் எதிராக இணை முன்னணியை உருவாக்கினார்.
உணர்வாலும் அனுபவத்தாலும் அவர் பல கலாச்சாரங்களையும் ஏற்கும் பண்பாளர். ஐரோப்பிய நாடுகளுக்கு அவர் அடிக்கடி மேற்கொண்ட பயணங்களும், கடந்த காலத்துடன் அவருக்கிருந்த நேரடி அனுபவமும், தற்கால அரசியல் சித்தாந்தங்களைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்ததும் அவருக்குள் ஏற்படுத்திய உணர்வுகள் காரணமாக, பிற காலனி நாடுகளும் விடுதலையடையாமல் இந்தியா முழுமையான நாடாக இருக்க முடியாது என்று கருதினார்.
புத்தகப் பிரியரான நேரு, வரலாற்றுப் புத்தகங்களைப் படித்து அதன் வழியே மேற்கொண்ட அறிவார்ந்த பயணங்களின் விளைவாக மூன்றாவது உலக நாடுகள் அனைத்தும் ஏகாதிபத்தியங்களின் கைகளிலிருந்து விடுதலை அடைய உதவ வேண்டும் என்று உறுதியேற்றார். 1927-ல் பிரசெல்ஸ் நகரில் நடந்த ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் மாநாடு, 1955-ல் நடந்த பாண்டுங் மாநாடு ஆகியவற்றில் பங்கேற்ற நேரு முக்கியப் பங்காற்றினார்.
அதனால் உலக அரங்கில் புதிய நாடுகளின் அணி சேர்ந்தது, புதிய சித்தாந்தம் உருவானது. நூறு கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட 29 நாடுகளின் பிரதிநிதிகள் கூடி, காலனியாதிக்கத்தின் தீய விளைவுகளைக் குறைத்து மக்களுடைய சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கு என்ன செய்யலாம் என்று ஆலோசித்தனர்.
சிறந்த தலைமையால் தங்கள் நாட்டின் சுதந்திரப் போராட்டத்துக்குத் தலைமை வகித்த பிரதமர் நேரு (இந்தியா), பிரதமர் கவாமி க்ருமா (கானா), அதிபர் கமால் அப்துல் நாசர் (எகிப்து), பிரதமர் சூ என்லாய் (சீனா), பிரதமர் ஹோ-சி-மின் (வியட்நாம்) அதில் தளகர்த்தர்கள். இந்த மக்களைப் பல்லாண்டுகளாகப் பாதித்து வந்த மதம், காலனியாதிக்கம் பற்றி விவாதிக்கப்பட்டது.
இந்நாடுகள் இறையாண்மை மிக்க நாடுகளாக இருந்தால்தான் உலக சமாதானம் வலுப்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டது. இதனால் அமெரிக்கா, ரஷ்யா எந்த தலைமையிலான அணியிலும் சேராத நாடுகளின் தனி அணி உருவானது. அது உலக அளவில் பெரிய அமைப்பாக உருவெடுத்தது.
காலனியாதிக்கத்துக்கு எதிரான தேசிய உணர்வு, நாடுகளின் கருத்தையும் கற்பனைகளையும் கவனத் தில் எடுத்துக் கொண்டதென்றால், இன்னொன்று அதிலிருந்து சற்று விலகி வேறு மாதிரியும் ஆக்கபூர்வமாகச் சிந்தித்தது.
நம்மைப் போன்றவர்களுடன் மட்டுமல்லாமல் - வேறு நாடுகளின், வேறு சமூகங்களின், வேறு பாரம்பரியங்களின் மக்களும்கூட நம்மைப் போலவே பல விஷயங்களில் சிந்திப்பதால், அவர்களுடனும் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கருதினார் நேரு. மதம், மொழி, இனம், நிறம், கலாச்சாரம் என்பனவற்றில் வேறுபட்டாலும், நாம் அனைவரும் ஒரே மனித சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே என்ற உயரிய சிந்தனை அவருக்கு இருந்தது.
இப்போதைய வரலாறு, இந்த ராஜதந்திரியைக் கனிவுடன் பார்க்கத் தவறுகிறது. இன்றைய தலைமுறைக்கு உலகமயமாக்கல் என்றால் என்னவென்று தெரியும், அனைவரும் ஒரே சமூகம் என்றால் என்னவென்று புரியாது. படுபயங்கர வேகத்தில் உலகமயமாக்கலை நோக்கி நாடு சென்றாலும், தனிமைப்படுத்தப்பட்டுவிட்டதாக நமது சமூகம் அச்சம் கொள்கிறது. நம்மைப் புறவுலகு நோக்கிப் பார்க்க கற்றுக்கொடுத்த நேருவை வரலாறு நினைவில் கொள்ள வேண்டும். வாடும் பிற பகுதி மக்களுக்கு ஆதரவு தரவும் அவர்களுடன் கலக்கவும் அவர் கற்றுத்தந்தார்.
நம்முடைய எண்ணங்களையும் ஆற்றல்களையும் உலகின் எல்லா பகுதியிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகச் செலவிட வேண்டும் என்று நம்முடைய குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும்; மிக முக்கியமான இந்தப் பண்பை நாம் இழந்துவிட்டோம் என்பதால் அவரை நினைவுபடுத்திக் கொள்வது அவசியமாகிறது. மூடிய சமூகங்கள் இறப்பதில்லை என்றாலும் தேங்கிவிடுகின்றன. அத்தகைய சமூகங்களின் பார்வை தொடர்ச்சியற்று பிளவுபட்டதாகிவிடுகிறது. நாமும் மனிதாபிமானத்தில் பின்தங்கிவிடுகிறோம்.
- நீரா சந்தோக், டெல்லி பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியர்.சுருக்கமாகத் தமிழில்: சாரி
©: ‘தி இந்து’ ஆங்கிலம்