‘மக்கள் குழுக்களின் மிகத் தீவிரமான கலப்பு என்கிற நிகழ்வு’ என்று ரெய்க் சுட்டிக்காட்டும் நிகழ்வின் காலம், 2013-ல் ‘அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ஹ்யூமன் ஜெனிடிக்ஸ்’ என்கிற இதழில் வெளிவந்த கட்டுரையில் வரையறுக்கப்பட்டது. இந்தக் கட்டுரையின் முதன்மை எழுத்தாளர் ஹார்வர்டு மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த பிரியா மூர்ஜானி என்பவர். ரெய்க், லால்ஜி சிங் உட்பட மற்ற பலரும் அதன் இணை எழுத்தாளர்கள். இந்தோ-ஐரோப்பிய மொழிகள் பேசுவோர் வெளியிலிருந்து இந்தியாவுக்குள் புலம்பெயர்ந்தவர்கள் இல்லை என்று வாதிடுவோர் இந்தக் கட்டுரையையும் ஆதாரமாகக் காட்டுகின்றனர். இந்தக் கட்டுரையும் அப்படி எதையும் கூறவில்லை என்பதே உண்மை.
ஒரு இடத்தில் இப்படிக் கூறுகிறது அந்தக் கட்டுரை: ‘எங்கள் கட்டுரையில் நாங்கள் வரையறுத்திருக்கும் காலகட்டங்கள் இந்திய வரலாற்றைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானவை. ஏனெனில், மக்கள்தொகை அளவிலும் கலாச்சாரரீதியாகவும் மாற்றங்கள் நிகழ்ந்த காலத்தை அவை பதிவுசெய்கின்றன. அந்தக் காலகட்டத்தில் மிகவும் அதிகமான வேறுபாடுகளைக் கொண்ட மக்கள் கூட்டங்களின் கலப்பு எங்கெங்கும் நீக்கமற காணப்பட்டது. பின்னர், இத்தகைய கலப்பு அரிதாகிப் போனது.
1,900 -2,400 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் இந்திய வரலாற்றில் ஆழமான மாற்றங்கள் ஏற்பட்டன. சிந்துச் சமவெளி நாகரிகம் நகரமயத்தன்மை இழந்தது, கங்கை ஆற்றின் மத்திய மற்றும் கீழ்ப் பகுதிகளில் மக்கள்தொகை அடர்த்தி அதிகமானது, இறந்தவர்களைப் புதைக்கும் முறைகள் மாறின. ஏற்பட்டது, உபகண்டத்தில் முதன்முதலாக இந்தோ-ஐரோப்பிய மொழிகள் தென்பட்டு, வேத அடிப்படையிலான மதம் தோன்றியிருக்கும் சாத்தியம் என ஆழமான மாற்றங்கள் இந்தியாவில் நிகழ்ந்தது இந்தக் காலகட்டத்தில்தான்.’
இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுவோர் புலம்பெயர்ந்ததை இந்த ஆய்வு ‘நிரூபிக்கவில்லை’. ஏனெனில், அதன் நோக்கமே வேறு. மக்கள்திரள் கலப்பு நடந்த காலத்தைக் கண்டுபிடிப்பதே அதன் நோக்கம். இந்த புலப்பெயர்வு நடந்த காலகட்டம் குறித்து காலம்காலமாக இருந்துவந்த புரிதலோடு தங்களின் ஆய்வு முடிவுகள் இயைந்துசெல்வதாக அந்த ஆய்வாளர்கள் நினைத்தனர் என்பது தெளிவு. உண்மையில், மக்கள்திரள் கலப்பு முடிவுக்கு வந்ததையும் இனக் கலப்பு குறித்தான புராதனப் பிரதிகளின் பார்வை மாறியிருப்பதையும் இந்த ஆய்வு தொடர்புபடுத்திப் பார்க்கிறது. ‘பரவலாக நடந்த இனக் கலப்பிலிருந்து கறாரான அகமண முறைக்கு மாறிச் செல்லும் போக்கை புராதனப் பிரதிகள் பிரதிபலித்தன’ என்கிறது ஆய்வுக் கட்டுரை.
2013-ல் பிரியா மூர்ஜானியும் மற்றவர்களும் நடத்திய ஆய்வை யார் எதற்குப் பயன்படுத்தியிருந்தபோதிலும், வெண்கல யுகத்தில் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் பேசுவோர் புலம்பெயர்ந்தனர் என்ற கருத்தோடு தங்களது ஆய்வு முடிவுகள் இயைந்துசெல்கின்றன, அல்லது அதை உறுதியாகக் காட்டுகிறது என்று இந்த ஆய்வாளர்கள் நினைக்கின்றனர். இந்தக் கட்டுரையை எழுதும் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில் இதைத்தான் பிரியா மூர்ஜானி கூறுகிறார். 4,000 ஆண்டுகளுக்கு முன் ஆண்களை முதன்மையாகக் கொண்ட வலுவான மரபணு ஓட்டம் மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவுக்குள் வந்தது என்று பேராசிரியர் ரிச்சர்ட்ஸ் தலைமையிலான ஆய்வாளர்களின் கட்டுரை குறித்தான கேள்விக்கு, அவர்களின் முடிவு ‘பரந்துபட்ட வகையில் எங்களின் மாதிரி’யுடன் ஒன்றுபடுகிறது என்றார் மூர்ஜானி. “2013-ல் நாங்கள் கட்டுரை வெளியிட்ட சமயத்தில் கிடைக்காத மேற்கு யுரேஷிய மாதிரிகள் இந்தப் புதிய ஆய்வை மேற்கொண்டோருக்குக் கிடைத்ததென்றும், இந்த மாதிரிகள் தெற்கு ஆசியாவின் வட இந்திய மூதாதையரின் மூலம் எது என்பதைக் குறித்த கூடுதல் தகவலையும் அவர்களுக்கு வழங்கின என்றும் கூறினார் மூர்ஜானி. வெண்கல யுகத்தில் இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுவோர்களின் புலப்பெயர்வு நடந்தது என்ற கருத்துக்கு எதிரான வாதங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தவறென நிரூபிக்கப்பட்டுவருகின்றன.
1. கடந்த 12,500 வருடங்களில் பெருமளவிலான மரபணு ஓட்டம் வெளியிலிருந்து இந்தியாவுக்குள் வந்ததற்கான எவ்வித ஆதாரமும் எம்.டி.டி.என்.ஏ. (தாய்வழி மரபணு) குறித்த விவரங்களில் இல்லை என்பதே இதில் முதல் வாதம். கடந்த சுமார் 4,000 - 4,500 ஆண்டுகளில் ஒய்-டி.என்.ஏ., குறிப்பாக இந்திய ஆண் பரம்பரையில் 17.5% இருக்கும் ஆர்1ஏ, பெருமளவு வெளியிலிருந்து இந்தியாவுக்குள் வந்திருக்கும் விவரங்கள் கிடைத்துள்ளதால் இந்த வாதம் தவறு. வெண்கல யுகப் புலப்பெயர்வு நிகழ்வில் பாலினப் பாகுபாடு மிகுந்திருந்ததால்தான் எம்டி டி.என்.ஏ.வின் தரவுகள் மாறுபட்டிருக்கின்றன.
2. ஆர்1ஏ பாரம்பரியம் பிற இடங்களை விட இந்தியாவில் அதிக பன்முகத்தன்மை கொண்டிருந்தது. அதனால், இந்தியாவில் தோன்றி வெளியே பரவியிருக்க வேண்டும் என்பது இரண்டாவது வாதம். இதுவும் தவறென நிறுவப்பட்டிருக்கிறது. ஏனெனில், இந்தியாவில் இருக்கும் ஆர்1ஏ பாரம்பரியங்கள் பெரும்பாலும் ஆர்1ஏ-இஸட்93 என்கிற ஹாப்லோ குழுவின் மூன்று உப குழுக்களைச் சேர்ந்தவை என்றும் அவற்றின் வயது சுமார் 4,000 முதல் 4,500 வரைதான் என்றும் சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு பிரம்மாண்டமான, உலக அளவிலான ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
3. இந்தியாவில் வட இந்திய மூதாதையர், தென்னிந்திய மூதாதையர் என இரு பிரிவினர் பண்டைக் காலத்தில் இருந்தனர். அந்த இரு குழுக்களும் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் பேசும் குழுவினர் இந்தியாவுக்குள் வருவதற்குப் பல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு குடியேறியவர்கள் என்பது மூன்றாவது வாதம். இந்த வாதமும் தவறு. ஏனெனில், வட இந்திய மூதாதையர் குழு, பல்வேறு புலப்பெயர்வுகளில் வந்தவர்களின் (இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுபவர்கள் உட்பட) கலவைதான். இந்த இரு குழுக்களைப் பற்றிய கருத்தாக்கத்தை உருவாக்கிய ஆய்வாளர்கள்கூட எச்சரிக்கை உணர்வுடன் இதைக் கூறிஇருக்கிறார்கள்.
(தொடரும்)
தமிழில்: ஆர் விஜயசங்கர்,
ஆசிரியர், ஃபிரண்ட்லைன்